தலையங்கம்

தண்ணீர் பற்றாக்குறையைத் தவிர்க்க வழிகளா இல்லை?

செய்திப்பிரிவு

கடுமையான கோடைப் பருவம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரிக்கும் சூழலில், கர்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்குள்ளே நகர்ப்புற மக்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையேயும் மோதல்கள் ஏற்படும் சூழலை இது ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிரத்தின் டோங்கர்காவோன் அணையிலிருந்து நகர்ப்புற குடிநீர்த் தேவைக்குத் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று லாத்தூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்துவதால், அம்மாநில அரசு காவல் துறையை ஏவவேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. கர்நாடகத்தில் காவிரி, கிருஷ்ணா நதிகளின் அணைக்கட்டுகளில் தண்ணீர் இருப்பு 2015 மார்ச் மாதத்தில் இருந்ததைவிடப் பாதியாகக் குறைந்துவிட்டது.

மக்களின் அடிப்படைத் தேவைகளில் பிரதானமான தண்ணீரைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்பதையே இந்தச் சூழல் காட்டுகிறது. முதலில் நீர் வளத்தைப் பெருக்குவது, சேமிப்பது, பயன்படுத்துவது போன்றவற்றில் மாநிலக் கண்ணோட்டத்தையும் அரசியல் உள்நோக்கங்களையும் கைவிடுவது அவசியம். சட்லெஜ் - யமுனை இணைப்புக் கால்வாய் விவகாரத்தில் பஞ்சாப் மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தையே எதிர்க்கத் துணிந்திருப்பது இதன் பின்னணியில் உள்ள அரசியலையே உணர்த்துகிறது. நெல், கரும்பு சாகுபடிக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. சில மாநிலங்கள் தொடர்ச்சியாகத் தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களையே அதிக நிலப்பரப்பில் சாகுபடி செய்வது பிரச்சினைக்கு முதல் காரணமாகத் திகழ்கிறது. அடுத்தபடியாக வாக்குகளைக் கவர்வதற்காகப் பல மாநிலங்களில் 1997 முதல் வரைமுறையின்றி அமல்படுத்தப்பட்டுவரும் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் என்ற திட்டம் நீராதாரத்தை வேகமாக வற்றச் செய்கிறது. இவ்விரு அம்சங்களில் முதலில் கவனம் செலுத்தினாலே பல பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

நாட்டின் மொத்த நீர் வளத்தில் 80% விவசாயத்துக்குத்தான் பயன்படுகிறது. நகர்ப்புறங்களிலும் தொழிலகங்களிலும் பயன்படும் நீரின் அளவில் கணிசமானவை அசுத்தப்படுத்தப்படுகின்றன அல்லது வீணாக்கப்படுகின்றன. கழிவுநீரைச் சுத்தப்படுத்தி மறு பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். ‘பொலிவுறு நகரங்கள்’ திட்டத்தில் கழிவுநீர் மேலாண்மைக்கு முன்னுரிமை தர வேண்டும். பாசனத் திட்டங்களுக்கு முன்னுரிமை தருவது வரவேற்கத் தக்கதே. அதற்காக ஏராளமான அணைகளையும் தடுப்பணைகளையும் கட்டினால் கடைமடை வரை பாய வேண்டிய நீரின் அளவு குறைந்து, கடைக்கோடிப் பகுதியில் தாங்கொணாத வறட்சி ஏற்பட்டு சூழலும் கெட்டுவிடும். நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாகக் குறைந்துவிடும். மழை நீரைச் சேமிப்பதில் தனிநபர்கள், அரசு, விவசாயிகள், சமுதாயம் என்று எல்லோரும் சேர்ந்து அக்கறை செலுத்த வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்தும் தண்ணீர் வளம் சார்ந்தும் பயன்படுத்த வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினையை அரசியல் கட்சிகள், நீதிமன்றங்கள், நடுவர் மன்றங்களால் தீர்க்கவே முடியாது என்பது 50 ஆண்டுகால அனுபவம். எனவே, தண்ணீர் பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடாமல், அறிவியல்பூர்வமாக நதிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வழிகளைக் காண வேண்டும். மரம் வளர்ப்பும் காடுகள் பராமரிப்பும், மண் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை என்பதைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும். ஆறுகளில் நகரின் சாக்கடைக் கழிவுகளையும் ரசாயனக் கழிவுகளையும் கலக்கவிடும் செயலை அறவே நிறுத்த வேண்டும். இல்லையென்றால், தண்ணீருக்கான மூன்றாவது உலக யுத்தம் நம்முடைய மாநிலங்களுக்கு இடையில் முதலில் ஆரம்பித்துவிடும்.

SCROLL FOR NEXT