தலையங்கம்

ஆதார் ஏற்படுத்தும் கவலை

செய்திப்பிரிவு

ஆதார் அடையாள அட்டைக்கு சட்டபூர்வ அந்தஸ்து தரும் மசோதாவை, ‘பண மசோதா’வாக மக்களவையில் மோடி அரசு அறிமுகப்படுத்தியபோதே கண்டனங்களுக்கு உள்ளானது.

மாநிலங்களவையில் பாஜக அரசுக்குப் பெரும்பான்மை இல்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. சாதாரண மசோதாவாகக் கொண்டுவந்தால் தோற்கடிக்கப் படும் அல்லது ஏகப்பட்ட திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்பதால்தான் ‘பண மசோதா’ என்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பண மசோதாவை மாநிலங்களவை தோற்கடித்தாலும் மீண்டும் மக்களவையில் கொண்டுவந்து நிறைவேற்றிவிட்டால் செல்லுபடியாகி விடும் என்பதால், அரசு அந்த வழியைத் தேர்ந்தெடுத்தது.

எதிர்பார்த்தபடியே மக்களவையில் ஆளும் கூட்டணியால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு, காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த திருத்தங்கள் மாநிலங்களவையில் ஏற்கப்பட்டன. எனவே, அதை மீண்டும் மக்களவையில் கொண்டுவந்து, மாநிலங்களவையில் நிறைவேறிய திருத்தங்களை நிராகரித்துவிட்டு, தனக்கிருக்கும் பெரும்பான்மை உதவியுடன் மக்களவையில் மீண்டும் நிறைவேற்றியிருக்கிறது அரசு. ‘ஆதார் (நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு நிதி, மானியம் மற்றும் இதர சேவைகளை வழங்கல்) மசோதா-2016’ அதன் மூல வடிவில் மக்களவையில் இரண்டாம் முறை நிறைவேற்றப்பட்டுவிட்டது.

ஆதார் அட்டைக்காக கோடிக்கணக்கான மக்களிடம் ஏராளமான தனிப்பட்ட தகவல்கள் பெறப்பட்டு, பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவல்கள் ஒட்டுமொத்தமாக எவராலாவது கண்காணிக்கப்படலாம், தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இந்தத் தரவுகள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுவதற்குச் சில பிரிவுகள் வழிசெய்தாலும், சில விசேஷ சந்தர்ப்பங்களில் விதிவிலக்காகச் செயல்படவும் வழிசெய்யப்பட்டிருக்கிறது. தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் போன்ற சந்தர்ப்பங்களில் குடிமக்களின் தரவுகளைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது.

குடிமக்களின் அந்தரங்கத்தைக் காப்பாற்ற வேண்டும், இது அவர்களுடைய அடிப்படை உரிமை என்ற கருத்தும் எழுந்தது. அதற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமையல்ல, முழுமையான உரிமையும் அல்ல, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதே என்று தெரிவித்திருக்கிறார்.

மசோதாவில் இருந்த ‘பொது நெருக்கடி, பொது பாதுகாப்பு’ என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக, ‘தேசியப் பாதுகாப்பு’ என்ற வார்த்தையைச் சேர்க்கலாம் என்றார், காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ். குடிமக்களுடைய தரவுகளை எடுத்துக்கொள்ள அ னுமதிக்கும் குழுவில் மத்தியக் கண்காணிப்பு ஆணையர் அல்லது தலைமைக் கணக்குத் தணிக்கையாளரை உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரினார். ஆதார் அட்டையைப் பெறுவது கட்டாயமாக்கப்படக் கூடாது. ஒருவருடைய விருப்பத்துக்கு அதை விட்டுவிட வேண்டும் என்ற திருத்தத் தையும் அவர் முன்மொழிந்தார். இதற்குப் பதிலாக மாற்று அடையாள ஆவணத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினார். திருத்தங்கள் அனைத்தையுமே மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

காங்கிரஸ் இப்போது ஆட்சியில் இல்லை என்பதால், இந்தத் திருத்தங்களைக் கொண்டுவந்தது என்ற விமர்சனம் எழலாம். ஆனால் உண்மை என்னவென்றால், மக்களுடைய மனங்களில் என்ன இருக்கிறது என்பதை உணர்ந்தே இதற்கான திருத்தங்களை காங்கிரஸ் கொண்டுவந்தது. ஆனால், அவற்றை அரசு தனக்குள்ள பெரும்பான்மை வலு காரணமாக மக்களவையில் நிராகரித்துவிட்டது.

பொதுமக்களிடமிருந்து பெற்ற தகவல்களை ரகசியமாகப் பாதுகாக்க வேண்டிய முக்கிய கடமை அரசுக்கு இருக்கிறது. இதைத் தவறாகப் பயன்படுத்தவும் கூடாது, பிறர் பயன்படுத்த அனுமதிக்கவும் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்!

SCROLL FOR NEXT