தலையங்கம்

பிரசார் பாரதியின் ஏல அறிவிப்பு எழுப்பியுள்ள அதிர்வலைகள்

செய்திப்பிரிவு

அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை ஏலம்விடுவதற்கு ‘பிரசார் பாரதி’ முடிவெடுத்திருப்பதாக வெளிவந்த செய்திகளையடுத்து, அது குறித்து தீவிரமான விவாதங்கள் நடந்துவருகின்றன. ‘நம் நாட்டின் விலைமதிப்பில்லாத ஆவணங்களை ஏலம்விடுவதற்கான நோக்கம்தான் என்ன? உடனடி விளக்கம் தேவை’ என்று பிரசார் பாரதியின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான ஜவ்ஹர் சர்கார் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியிருந்தார். இது தொடர்பாக, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சருக்குக் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். வரலாற்று முக்கியத்துவத்துடன் பண்பாட்டு அடையாளங்களுமான ஒலி, ஒளிப் பதிவுகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும். அரசியல், பொருளாதாரம் குறித்த விவாதங்களில் மட்டுமின்றி கலை, பண்பாட்டு விஷயங்களிலும் எதிர்க்கட்சிகள் கவனத்தோடு இருப்பதும் அரசின் முடிவுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுவதும் வரவேற்கத்தக்கது.

ஏல அறிவிப்பு தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ள பிரசார் பாரதியின் தற்போதைய முதன்மைச் செயல் அதிகாரி சசிசேகர் வேம்பதி, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது போன்று எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். ஒளிபரப்பு உரிமை குறித்த சமீபத்திய அறிவிக்கை தவறாகப் பொருள்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒளிபரப்பு உரிமம் வழங்குவதற்கான எந்தவொரு சட்டரீதியான உடன்பாட்டுக்கும் இத்தகைய நடைமுறைகள் அவசியமானவை என்றும் தற்போது கொள்கை மட்டுமே வெளியிடப்பட்டிருப்பதாகவும் விரைவில் விரிவான அளவில் உரிமங்கள் குறித்த உடன்பாடுகள் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மதுரை மக்களவை உறுப்பினருக்கு அவர் அளித்துள்ள பதிலில், கொள்கை ஆவணத்தைப் படிக்காமலேயே விமர்சனம் செய்திருப்பதுபோல் தோன்றுவதாகவும் அதைக் கருத்தூன்றிப் படிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரசார் பாரதி அளித்துள்ள பதில்களோடு இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிடவில்லை. நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கான உரிமங்கள் குறித்து ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டால், அதற்கான காப்புரிமை யாரிடம் இருக்கும் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. ஒளிபரப்பு உரிமங்கள் விற்கப்பட்டால், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களுக்குச் சன்மானங்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டா என்ற கேள்விக்கும் பதில் இல்லை. பிரசார் பாரதியின் அறிவிக்கையின்படி, அதன் ஆவணக் காப்பகங்களில் உள்ள ஒலி, ஒளி ஆவணங்களை அதிக உரிமத்தொகையைக் கொடுக்க முன்வருகிற மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படையான முறையில் குத்தகை விட திட்டமிட்டிருப்பது தெரிகிறது. வெளிப்படைத்தன்மை பாராட்டுக்குரியதாக இருந்தாலும், பிரசார் பாரதியின் விலைமதிப்பற்ற ஆவணங்கள் விற்பனைச் சரக்குகள் அல்ல என்பதும் அவை இந்த நாட்டின் பெருமைக்குரிய பண்பாட்டு அடையாளங்கள் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. இணையதள ஒளிபரப்புகளுக்கான தரமான உள்ளடக்கத் தேவைகளை உத்தேசித்து இந்த அறிவிக்கையை வெளியிட்டிருப்பதாகச் சொல்லும் பிரசார் பாரதி, இணையவெளியில் அப்படியொரு முன்னெடுப்பை அதுவே முன்னெடுக்கலாமே என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

SCROLL FOR NEXT