பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்குமான அரசு என்ற விமர்சனமும், பிஹார் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியும் மத்திய அரசின் அணுகுமுறையை மாற்றியிருக்கின்றன. அது 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது. வேளாண் துறை மேம்பாட்டுக்காகவும் விவசாயிகளின் நலனுக்காகவும் நிதி திரட்ட, எல்லா வகை சேவைக் கட்டணத்தின் மீதும் 0.5% கூடுதல் தீர்வை (செஸ்) விதிக்கப்பட்டிருக்கிறது. பாசன வசதிக்கு நீண்டகால நிதியைத் திரட்டும் உத்தியாக ரூ.20,000 கோடி தொகுப்பு நிதி உருவாக்கப்படுகிறது. 2022-க்குள் விவசாய வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, முனைப்பு காட்டப்பட்டிருக்கிறது.
பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் சேர நேர்ந்தால், குடும்பம் ஒன்றுக்கு ஓராண்டில் அதிகபட்சம் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அந்தக் குடும்பங்களில் இருந்தால் அவர்களுக்கு ரூ.30,000 வரையிலான செலவை அரசே ஏற்கும். வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ள அத்தனைக் குடும்பங்களுக்கும் இலவசமாக சமையல் கேஸ் வழங்கும் திட்டம் மிகவும் பாராட்டத் தக்கது.
அரசின் பொதுவான வரவையும் செலவையும் கிட்டத்தட்ட சமப்படுத்திக் கட்டுக்குள் வைப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று அறிவித்துள்ள ஜேட்லி, தேவை ஏற்பட்டால் அரசு செலவுகளை அதிகப்படுத்தத் தயங்காது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்குத் தக்க பரிந்துரைகளைக் கூற ஒரு குழு அமைக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். வருமான வரி செலுத்தும் தனி நபர்களுக்கு இந்த பட்ஜெட் சிறிதளவு ஏமாற்றத்தைத் தந்திருக்கும். மிகக் குறைந்த வருவாய் உள்ள நடுத்தரப் பிரிவினருக்கு நிரந்தரக் கழிவுத்தொகையைச் சிறிதளவு உயர்த்தியும் வீட்டு வாடகையாகக் கழித்துக்கொள்ளும் தொகையைக் கணிசமாக உயர்த்தியும் நிவாரணம் அளிக்கப் பட்டிருக்கிறது.
நடுத்தர, மற்றும் கீழ்நிலை நடுத்தர வகுப்பினர் சொந்தமாக வீடுகளைக் கட்ட, வாங்க விலக்கு வரம்பு லேசாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இனி ஏப்ரல் 1 முதல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் திரளும் தொகைக்குக் கிடைக்கும் வட்டி வருவாய் மீது வரி விதிப்பது என்ற முடிவும், வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படாததும் மாதச் சம்பளக்காரர்களுக்கு நிச்சயம் அதிருப்தியையும் கோபத்தையுமே ஏற்படுத்தும்.
பட்ஜெட் என்பது நாட்டின் நிதி நிலவரத்தைப் பொருத்தது என்றாலும் 5 மாநிலங்களின் சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால் இதையே அரசியல் ஆயுதமாகவும் மத்திய அரசு பயன்படுத்துகிறது என்பது உறுதியாகியிருக்கிறது. இந்த பட்ஜெட் ஓட்டு அறுவடையை அள்ளித் தருமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.