உடுமலைப்பேட்டை கடைவீதியில், பட்டப்பகலில் நடந்திருக்கும் சாதிய தாக்குதல் ஒருபுறம் பெரும் அதிர்ச்சியையும் மறுபுறம் பெரும் அவமானத்தையும் நம் மீது அள்ளி வீசியிருக்கிறது. சங்கர் - கௌசல்யா தம்பதி மீதான கொலைவெறித் தாக்குதலில் 22 வயது சங்கர் இறந்துவிட்டார்; 19 வயது கௌசல்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். சாதி கடந்து காதலித்து புறமணம் செய்துகொண்டவர்கள் இவர்கள்.
சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனம் வாழும் உரிமையை இந்தியாவில் வாழும் ஒவ்வொருவருக்கும் அளித்திருக்கிறது. அதன் முக்கியமான கூறுகளில் ஒன்று, தான் விரும்பிய ஒருவரை தனது வாழ்க்கைத்துணையாக தேர்வுசெய்துகொள்ளும் அடிப்படை உரிமை. அந்த வாழ்வுரிமைகூட இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில்தான் நம்மில் ஒரு பகுதியினரை, நம் சக சகோதரர்களை வைத்திருக்கிறோம் என்பது எவ்வளவு வெட்கக்கேடானது! இத்தனைக்கும் சமூகநீதியில் நாட்டுக்கே முன்னோடியாக இருந்த மாநிலம் இது.
அவரவர் இனத்துள்ளேயே நடக்கும் அகமண முறையைத் தாண்டி யோசிப்பதை சாதி ஒழிப்புக்கான அடிப்படைகளில் ஒன்றாக அம்பேத்கரும் காந்தியும் பார்த்தார்கள் என்றால், சாதி மறுப்புத் திருமணங்களை ஒரு இயக்கமாகவே செயல்படுத்தியவர் பெரியார். திராவிட இயக்கம். சீர்திருத்தத் திருமணங்களுக்கு இந்தியாவிலேயே முதன்முதலில் சட்ட அங்கீகாரம் அளித்தது அண்ணாவின் அரசு. அப்படிப்பட்ட முன்னோடிகளின் வழிவந்தவர்கள் ஆண்ட/ஆளும் மாநிலம்தான் இன்றைக்கு சாதி தாண்டிய காதல் திருமணங்களுக்கான பலிகளமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.
பொருளாதாரச் சீர்திருத்தத்துக்குப் பிந்தைய இந்தக் கால் நூற்றாண்டில் அகில இந்திய அளவில் சாதி/மதத்தை மீறிய புறமணங்கள் பெரிய அளவில் அதிகரித்திருக்கின்றன. அகில இந்திய அளவில் நடக்கும் திருமணங்களில் புறமணங்களின் வீதம் 10%. கோவாவில் 26.6%, கேரளத்தில் 21.35%, கர்நாடகத்தில் 16.47% என்று நம்முடைய அண்டை மாநிலங்கள் எல்லாம் எங்கோ இருக்க, தமிழகத்தில் வெறும் 2.59% புறமணங்கள்தான் நடக்கின்றன. நாம் எவ்வளவு அபாயகரமான வேகத்தில் பின்னோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஒரு புள்ளிவிவரம் போதுமானது. இந்தப் பின்னோக்கிய ஓட்டத்தை மீறுபவர்களைத்தான் வெட்டிக் கொல்லத் துடிக்கிறார்கள்.
“புறமணம் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அவசியம். புறமணத் தம்பதிகளைத் துன்புறுத்துவது காட்டுமிராண்டித் தனமானது. அப்படித் துன்புறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறது உச்ச நீதிமன்றம். ஊருக்கு நடுவே துணிச்சலாக வந்து வெட்டிவிட்டு நிதானமாகக் கொலையாளிகள் செல்கிறார்கள் இது வெறும் சட்டம், ஒழுங்கு சார்ந்த பிரச்சினை மட்டும் அல்ல; மக்களாட்சியின் பெயரால் அமைந்திருக்கும் ஒரு அரசுக்கு, குடிமக்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டிய காவல் துறை உள்ளிட்ட அரசின் அமைப்புகளுக்கு விடப்பட்டிருக்கும் அப்பட்டமான சவால். பொதுச்சமூகத்தை நோக்கி ‘சாதியை உன்னால் என்ன செய்ய முடியும்?’ என்று விடப்படும் பகிரங்க எச்சரிக்கை. இப்படிப்பட்ட தலைமுறைகளைத்தான் வளர்த்தெடுத்திருக்கிறோம் என்றால், எல்லா அரசியல் கட்சிகளும் இதற்காக வெட்கப்பட வேண்டும். முக்கியமாக, ஆண்ட, ஆளும் கட்சிகள்.!