தமிழ்நாட்டில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் முதல் தவணை கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையை 70% ஆக உயர்த்த, மக்கள் நல்வாழ்வுத் துறை தீவிர அக்கறை காட்டிவருகிறது. ஐந்து கட்டமாக நடத்தப்பட்டுள்ள சிறப்புத் தடுப்பூசி முகாம்கள், இந்த இலக்கை நெருங்குவதற்கு உதவியுள்ளன. கால அவகாசம் முடிந்தவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவும் ஐந்தாவது முகாமில் சிறப்புக் கவனம் காட்டப்பட்டுள்ளது. சில ஊர்களில், தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களை ஊக்குவிப்பதற்காகக் குலுக்கல் முறை பரிசுகள்கூட வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிறப்பு முகாம் நடத்தப்படும் தேதி குறித்த சில குழப்பங்களை முன்கூட்டியே தவிர்த்திருக்கலாம். அக்டோபர் 3-ம் தேதி சிறப்பு முகாம் நடக்காது என்று முதலில் அறிவித்துவிட்டு, பின்பு அதே நாளில் திடீரென்று நடத்தியது பொதுமக்களைச் சிரமங்களுக்கு ஆளாக்கிவிட்டது.
கரோனா முன்தடுப்பு நடவடிக்கைகளிலும் சிகிச்சைகளிலும் அக்கறை காட்டப்படும் அதே நேரத்தில், உயிருக்கு ஆபத்தான மற்ற தொற்றுகள், நோய்கள் தொடர்பில் ஏற்கெனவே அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகளும் முன்புபோலத் தீவிரம்பெற வேண்டியுள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 2,930 பேர் டெங்கு உறுதிசெய்யப்பட்டு, அவர்களில் 375 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். மூன்று மாவட்டங்களில் மட்டுமே தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது, இதுவரை மூன்று உயிரிழப்புகள் மட்டுமே என்பது போன்ற புள்ளிவிவரங்கள், நோய்க்குப் பிறகான இதர உடல்நலப் பாதிப்புகளைக் கவனத்தில் கொள்ளத் தவறிவிடுகின்றன.
கவலைக்குரிய மற்றொரு விஷயம், நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 59,164 பேர் புதிதாகக் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது. காசநோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகின்றன. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில், கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாகத் தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன. பொதுமுடக்கக் காலத்தின்போதும்கூட அவர்களுக்கான மருந்துகள் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் எழவில்லை. காசநோயால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களையும் அந்தச் சிகிச்சை வளையத்தின் பாதுகாப்புக்குள் கொண்டுவர வேண்டும்.
சமீப காலமாகப் பிறக்கும் குழந்தைகளின் எடை, குறைவாக இருப்பதும் உடனடியாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமானதொரு விஷயம். தமிழ்நாட்டில் 2020-21ல் பிறந்த குழந்தைகளில் ஏறக்குறைய 13% குழந்தைகள் 2.5 கிலோவுக்கும் குறைவாகப் பிறந்துள்ளன. கருவுற்ற பெண்கள் ரத்தசோகை, நீரிழிவு ஆகியவற்றால் பாதிக்கப்படும் வீதமும் அதிகரித்துள்ளது. எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு, உடல்நலப் பாதிப்புகளுக்கு அதிக வாய்ப்புள்ளதால் கருவுற்ற பெண்களின் உடல்நலம் தொடர்பிலும் மக்கள் நல்வாழ்வுத் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமுடக்கக் காலத்தில் அதிகரித்துள்ள குழந்தைத் திருமணங்களால் இளம் வயதுக் கருத்தரிப்புகளும் அதிகரித்துள்ளன. கரோனா முன்தடுப்புப் பணிகளில் பங்கேற்றுவரும் கிராமப்புறச் செவிலியர்களின் வழக்கமான தாய்-சேய் நலப் பணிகளும் முந்தைய அதே தீவிர நிலைக்குத் திரும்ப வேண்டும்.