சமீப காலமாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளின் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள் தொடர்பில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறப்பு ஆய்வுகளை நடத்திவரும் செய்திகளைத் தொடர்ந்து பார்க்க முடிகிறது. இத்தகைய சிறப்பு ஆய்வுகளில், கார்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு ஒரே நாளில் லட்சக்கணக்கான ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளின் அருகிலுள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆகியோரின் புகார்களின் மேல் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது தவிர, காவல் துறையினரும் தங்களுக்குக் கிடைத்த புகார்களின் அடிப்படையில் வெளிவட்டச் சாலைகளில் பைக் ரேஸ் நடத்திய இளைஞர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்து, அவர்களின் மீது வழக்குகளைப் பதிந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட எந்தவொரு சாலையிலும் 100 கிமீ வேகத்துக்கு அதிகமாக எந்தவொரு வாகனத்தையும் ஓட்டிச் செல்லக் கூடாது என்பதற்கான அறிவிப்பாணைகளை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றமும் சமீபத்தில் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரியவில்லை. வெவ்வேறு வகையான சாலைகளில் பயணிப்பதற்கான வேக அளவுகள் திருத்தியமைக்கப்பட்டாலும்கூட அதிவேகமாக வாகனங்களை இயக்குவதை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட முடியாது. வாகனத் தொழில்நுட்ப வளர்ச்சி அதிவேகத்துக்கு வாய்ப்பாகவே அமைந்துள்ளது. எனவே, அறிவுறுத்தல்களைத் தாண்டி, அதை மீறுபவர்களுக்கான தண்டனைகளைப் பற்றியும் ஆலோசிக்க வேண்டும்.
சென்னையின் புறநகர்ச் சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களின் அதிவேகப் பயணங்கள் மட்டுமின்றி பைக் ரேஸ், வீலிங் போன்ற இளைஞர்களின் சாகசங்களும் சக பயணிகளை அதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் ஆளாக்கிவருகின்றன. பெரும்பாலும் 18 வயது முதல் 25 வயது வரையிலுமான இளைஞர்களாக இவர்கள் இருக்கிறார்கள். போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் காவல் துறை அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுத்தாலும் இத்தகைய சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதைப் போக்குவரத்து விதிமீறலாக மட்டும் கணக்கில் கொண்டு அபராதம் விதிப்பதே அதிகபட்சத் தண்டனையாக இருப்பதால், பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. வாகனங்களை ஓட்டிச்செல்லும் தன்னுடைய உயிருக்கு மட்டுமின்றி, சாலையில் செல்லும் சகபயணிகளுக்கும் உயிராபத்து விளைவிக்கக்கூடிய வாய்ப்புள்ள நிலையில், பைக் ரேஸ் என்பதைப் போக்குவரத்து விதிமீறலாக மட்டும் கருதக் கூடாது. தொடர்ந்து இந்த விதிமீறல்களில் ஈடுபடுவதைத் தண்டனைக்குரிய கொடுங்குற்றமாக்கினால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். குறைந்தபட்சம், நெடுஞ்சாலைகளில் இத்தகைய பந்தயங்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை நிரந்தரமாகப் பறிமுதல் செய்வது பற்றியும் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக முடக்குவது பற்றியும்கூடப் பரிசீலிக்கலாம்.