தலையங்கம்

பெங்களூருவில் நிறவெறித் தாக்குதல்

செய்திப்பிரிவு

பெங்களூருவில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது நடத்தப்பட்ட நிறவெறித் தாக்குதல், அந்நகருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த வாரம் பெங்களூருவில் சூடானைச் சேர்ந்த ஒருவர் ஓட்டிவந்த காரில் அடிபட்டு ஷபானா தாஜ் எனும் பெண் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் அந்தப் பக்கமாக வந்த மற்றொரு காரில் இருந்த தான்சானியாவைச் சேர்ந்த மாணவி மீது, கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

அந்தப் பெண்ணை விரட்டிச் சென்று அடித்து, அவருடைய மேல் சட்டையைக் கிழித்திருக்கிறது அந்தக் கும்பல். அந்தப் பக்கமாக வந்த நகரப் பேருந்தில் ஏறித் தப்ப அப்பெண் முயன்றிருக்கிறார். ஆனால், பேருந்தில் இருந்தவர்கள் அவரைத் தடுத்து மீண்டும் வன்முறைக் கும்பலிடமே அனுப்பியிருக்கின்றனர். இவை அனைத்தையும் காவலர்கள் அருகில் இருந்து வேடிக்கை பார்த்திருக்கின்றனர். அந்தப் பெண்ணுக்குத் தன்னுடைய டீ ஷர்ட்டைக் கொடுத்த இளைஞர் ஒருவரையும் கும்பல் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. அவர் வந்த காருக்கும் தீ வைக்கப்பட்டது. இத்தனைக்கும் நடந்த விபத்துக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 9 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பாஜக கவுன்சிலரும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. இச்சம்பவத்தில் பெங்களூரு நகரக் காவல் துறையினர் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. புகார் கொடுக்கச் சென்ற அப்பெண்ணிடம், முதலில் விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநரைக் கூட்டி வந்தால்தான் புகாரை வாங்குவதாகச் சொல்லியிருக்கிறார்கள் காவலர்கள். இச்சம்பவம் மிகவும் அற்பமானது என்று மாநகர துணைக் காவல் ஆணையர் கூறியிருக்கிறார். தான்சானியா தூதரகம் தலையிட்ட பின்னரே வழக்கைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கல்வி கற்கவும், வேலை பார்க்கவும் வருபவர்கள்மீது நடத்தப்படும் நிறவெறித் தாக்குதல்களின் தீவிரத்தை இச்சம்பவம் உணர்த்தியிருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தவர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதும் இழிவாக நடத்துவதும் டெல்லியிலும் நடக்கிறது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரே, நள்ளிரவில் ஒரு குடியிருப்பில் புகுந்து ஆப்பிரிக்கப் பெண்களிடம் கண்ணியமின்றி நடந்துகொண்டார். நிறவெறி இல்லையென்று மறுத்தாலும் இவையெல்லாம் வெள்ளை நிறத்தின் மீது இந்தியர்களுக்குள்ள கவர்ச்சி, கருப்பு நிறம் மீது ஏற்படும் வெறுப்பு என்றே கருத வேண்டியிருக்கிறது.

கருப்பினத்தவர்கள் மட்டுமல்லாமல், வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் பெங்களூருவில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னால், வட கிழக்கு மாநிலத்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்படும் என்ற வதந்திக்குப் பிறகு, அவர்கள் ஆயிரக்கணக்கில் நகரைவிட்டு வெளியேறியதும் மறக்க முடியாத சம்பவம். டெல்லி, பெங்களூரு இரண்டிலும் வட கிழக்கு மாநிலத்தவரைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும் குடியிருக்க வீடு தர மறுப்பதும் பொது இடங்களில் வசைபாடுவதும் நடக்கிறது. அரசு, குறிப்பாக காவல்துறை இதில் கவனம் செலுத்தி, மக்களிடையே இத்தகைய வெறுப்புணர்வுகள் பரவாமல் இருக்க விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அரசியல் உறுதி மாநில அரசுக்கும் வேண்டும். பன்முகக் கலாச்சாரம் உள்ள இந்நாட்டில் மதம், மொழி, நிறம், பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு யாரும் எந்த சந்தர்ப்பத்திலும் இடம்தரக் கூடாது. இது போன்ற சமயங்களில் மக்கள் குழுக்களும் முன்வந்து வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதை மேற்கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT