தலையங்கம்

யார் தவறுக்கு யார் பலி?

செய்திப்பிரிவு

இடிபாடுகளுக்கிடையில் நீட்டிக்கொண்டிருக்கும் அந்தக் கையின் புகைப்படம் யார் மனதைத்தான் உலுக்காது. உலகப் போர் குண்டுவெடிப்புகளில் ஏற்பட்ட சிதைவுகளில் சிக்கியிருப்பவர்களுடைய புகைப்படங்களை நிறைய நாம் பார்த்திருப்போம். போபால் விஷ வாயுக் கசிவில் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களையும் நாம் பார்த்திருப்போம். அது போன்ற ஒரு தாக்கத்தைத் தரக்கூடியதுதான் அந்தப் புகைப்படம்.

நிராதரவானவர்கள், குரலற்றவர்கள் போன்றோரின் துயரங்கள் காலம்காலமாக ஒரே மாதிரிதான் இருந்திருக்கின்றன, போர்கள், இயற்கைச் சீற்றங்கள் என்று விதிவிலக்கில்லாமல். அதிகாரத் தரப்புகளின் தவறுகளுக்கும் வன்முறைக்கும் முதல் இலக்கு இவர்கள்தான். சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த விபத்திலும் பாதிப்புக்குள்ளானது இப்படிப்பட்ட மக்கள்தான்.

மவுலிவாக்கத்தில் புதிதாகக் கட்டிக்கொண்டிருந்த கட்டிடம் ஒன்று ஞாயிறு அன்று பெய்த கனமழையில் இடிந்து விழுந்து இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல்; ஏராளமானோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இன்னும் மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், அதிகரிக்கும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெரும் துயரை அளிக்கிறது.

நகரமயமாக்கல் சூழலில் வீடுகள் மிகப் பெரிய சவால். அந்தக் காலத்தைப் போல் மனை வாங்கி, அருகில் நின்று சொந்த வீடு கட்டும் சூழலோ வாய்ப்போ பலருக்கும் இல்லாத நிலையில், எல்லோரும் கட்டுமான நிறுவனங்களையே நம்புகின்றனர். கோடிகள் கொழிக்கும் ரியல் எஸ்டேட் துறை, ஆட்களை மடக்குவதில் காட்டும் அக்கறையை எந்த அளவுக்குக் கட்டுமானத்தில் காட்டுகின்றன என்பதற்கு உதாரணம், இந்தச் சம்பவம். இப்படிப்பட்ட சம்பவங்களின்போது கட்டிட நிறுவனங்களைச் சார்ந்தவர்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது போதுமான நடவடிக்கை அல்ல. இதற்கு உடந்தையாக இருந்த அத்தனை அரசு அதிகாரிகளையும் கூண்டில் ஏற்ற வேண்டும்.

இந்த விபத்து சுட்டிக்காட்டும் இன்னொரு முக்கியமான விஷயம் தொழிலாளர்கள் நலன். விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது இந்த விபத்தின் கோர முகத்தைக் காட்டுகிறது. இந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கென்று அடையாள அட்டைகளோ தொழிற்சங்கங்களோ உரிமைகளோ விபத்துக் காப்பீடு போன்ற சமூகநலப் பாதுகாப்புகளோ இல்லாதவர்கள்.

இவர்களெல்லாம் ஒரு வகையில் உள்நாட்டு அகதிகள்தான். உள்ளூர் தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டியதைவிட மிகக் குறைந்த ஊதியத்தைக் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு, உள்ளூர் தொழிலாளர்களைவிட அதிக அளவு வேலைசெய்யக்கூடியவர்கள். இவர்களுடைய வறுமையை இங்குள்ள கட்டுமான நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

2012-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த விளையாட்டு அரங்கு இடிந்து விழுந்து புலம்பெயர் தொழிலாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். விளையாட்டு அரங்கின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டாலும் சில நாட்களில் அவர் சுதந்திரமாக உலா வந்தார். பலியான தொழிலாளர்களின் குடும்பங்கள் என்ன கதிக்கு உள்ளாயின என்பதுபற்றிய தகவல்கள் ஏதும் இல்லை.

நாம் வசிக்க வீட்டைக் கட்டிக்கொடுக்கும் தொழிலாளர்களுக்கு வாழ்வுரிமையையும் கண்ணியமான பணிச் சூழலையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வது நமது தார்மிகக் கடமை. அவர்கள் யாரோ, எவரோ, எப்படியோ என்று விட்டுவிட்டு நாம் இருக்கலாகாது. இந்த நிலை இப்படியே நீடிக்க அரசும் அனுமதிக்கக் கூடாது.

SCROLL FOR NEXT