தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழக அரசியல் வானில் மாறுபட்ட அறிகுறிகள் தோன்றுகின்றன. மக்களிடமிருந்தும் மாறுபட்ட குரல்களைக் கேட்க முடிகிறது. எப்படியாகிலும் ஒவ்வொரு தேர்தலுமே ஜனநாயகத் திருவிழாதான். திருவிழாக்கள் வெறும் வழிபாட்டையும் கொண்டாட்டத்தையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டவை அல்ல. பல பரிமாணங்கள் அவற்றுக்கு உண்டு. முக்கியமானது, சமூகம் ஒன்று சேர்ந்து காலத்தை உந்தித் தள்ளுவது.
சுமார் ஏழு தசாப்தங்களுக்கு முன்பு இந்த நாடு சுதந்திரத்தை நோக்கி நகர்ந்தபோதே நம்முடைய முன்னோடிகளுக்கு ஒரு தெளிவான பார்வை இருந்தது. அதன் விளைவாகத்தான் உலகின் பல நாடுகள் அதிசயிக்கும் வகையில் வயது வந்தோர் எல்லோருக்கும் வாக்குரிமை வழங்குவது எனும் முடிவை சுதந்திர இந்தியா தன் குடிமக்களுக்கு வழங்கியது. நாட்டின் ஆகப் பெரும்பான்மை மக்கள் படிப்பறிவு அற்றிருந்த சூழலில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது துணிச்சலான பரிசோதனை முயற்சி மட்டும் அல்ல; முன்னோடியான செயல்பாடும்கூட.
இந்த நாட்டின் மக்கள் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குரிமையின் பலத்தை, ஒரு ஓட்டு உள்ளடக்கியிருக்கும் மாற்றத்துக்கான ரகசிய சாவியைச் சரியாகவே உள்வாங்கிக்கொண்டனர். இன்னமும் ஓட்டு போடுவதை ரகசிய நடவடிக்கையாகப் பேணும் பண்பு நம் மக்களிடம் உண்டு. அடிப்படையில் இது ஜனநாயகத்துக்கு அவர்கள் அளிக்கும் மரியாதையின் அடையாளம். அது கேலிக்கூத்தாக மாறுகிறது என்றால், அதற்கு அரசியல்வாதிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். வெட்கப்பட வேண்டும்.
தேர்தலை அரசியல்வாதிகள் அணுகும் கணக்குகள் வேறு. மக்களுடைய கனவுகள் வேறு. இரு தரப்புக்கும் இடையேயான இந்த இடைவெளி எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஜனநாயகத்துக்கு நல்லது. ஒரு ஊடகமாக இதற்கு ஆற்ற வேண்டிய பங்களிப்பை ‘தி இந்து’ முழுமையாக உணர்ந்திருக்கிறது. ‘ஜனநாயகத் திருவிழா - 2016’ சிறப்புப் பக்கங்களை கட்டத் தொடங்கும் நிலையில், தேர்தல்களில் ஒரு ஊடகத்தின் ஆக்கபூர்வ பணி என்ன எனும் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்கிறோம். அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் தொடங்கி, வரவிருக்கும் ஆட்சியின் செயல்பாடுகள் வரை எல்லாவற்றிலும் மக்களின் அபிலாஷைகள் எதிரொலிக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்று எங்களை நாங்களே கேட்டுக்கொள்கிறோம். இந்தக் கேள்வியின் மையப்புள்ளிதான் தேர்தல் காலங்களில் ‘தி இந்து’வின் செயல்பாடுகளை உந்தித்தள்ளும் மையவிசையாக இருக்கும்.
சமகாலத் தமிழக அரசியலின் சாபக்கேடுகளாகப் பார்க்கப்படும் தனிநபர் வழிபாடுகள் - துவேஷங்கள், கவர்ச்சிகர அறிவிப்புகள், வெற்றுவேட்டு முழக்கங்கள் இவற்றிலிருந்து முற்றிலுமாக விலகி, மக்களின் குரலை அரசியல் அரங்கில் உரக்க ஒலிக்கச் செய்ய வேண்டும். இதுவே தேர்தல் போன்ற காலகட்டங்களில் ஊடகங்களின் தலையாய பணி. இந்திய அளவில் எப்போதுமே தமிழகம் ஒரு முன்னிலை மாநிலம். இந்த முன்னிலை முன்னோடியாக மாற, தரமான சுற்றுச்சூழல், தரமான குடிநீர், தரமான உணவு, தரமான கல்வி, தரமான மருத்துவம், தற்சார்புப் பொருளாதாரம், கனிமவளப் பாதுகாப்பு, இயற்கையைச் சுரண்டாத நவீனக் கட்டமைப்புகள் என நீடித்த, நிலைத்த வளர்ச்சிக்கான தமிழ் மக்களின் குரலை ‘தி இந்து’வின் தேர்தல் பக்கங்கள் பேசும்.
தமிழ்நாட்டு விவசாயிகளின் வலிகளை அது பேசும். தமிழ்நாட்டுக் கடலோடிகளின் குமுறல்களை அது பேசும். தமிழ்நாட்டுத் தொழில் துறையின் சங்கடங்களை அது பேசும். தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளை அது பேசும். இப்படி எல்லாத் தரப்பு மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் அது எதிரொலிக்கும். தொலைநோக்குப் பார்வை கொண்ட கொள்கைகளை வகுப்பதற்கான அழுத்தத்தை அரசியல் கட்சிகளுக்கு அது உருவாக்கட்டும்.