’இந்திய நகரங்கள் நாற்றமடிக்கும் குப்பைக்காடுகளாக இருக் கின்றனவே, இந்தியர்கள் நகர வாழ்க்கைக் கேற்பத் தங்களைச் சுகாதாரமுள்ளவர்களாக மாற்றிக்கொள்ள வில்லேயே” என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் மகாத்மா காந்தி வேதனைப்பட்டார். 21-வது நூற்றாண்டிலும் இந்திய நகரங்கள் அசுத்தமாகவே காணப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் அகற்றப்படாத குப்பை மலைகள், வழிந்தோடும் சாக்கடைகள், துர்வாடை வீசும் சாலையோரங்கள், சாலைகளிலும் நீர்வழிகளிலும் கொட்டப்படும் குப்பைகள், அகற்றப்படாத கட்டிடக் கழிவுகள், வாரப்படாத சாக்கடைகள் என்று இந்தியாவின் எந்த நகரத்தில் நுழைந்தாலும் அவலமான காட்சிகளையே பார்க்க முடிகிறது. பெருநகரங்களில் சேரும் கழிவுகளைப் புறநகர்களில் கொண்டுபோய் கொட்டுவதையே ‘துப்புரவுப் பணியாக’ மாநகராட்சிகள் மேற்கொள்கின்றன. கழிவு நீரைச் சுமந்து செல்லும் லாரிகளோ அருகில் தென்படும் ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளிலேயே கூசாமல் கொட்டிச் செல்கின்றன.
ஏழைகள் வாழும் குடிசைப் பகுதிகள் போதிய வெளிச்சம், பாதுகாப்பான குடிநீர், மின்சார இணைப்பு, தூய்மையான பொதுக் கழிப்பிடங்கள் இன்றி நரகமாகவே காட்சி தருகின்றன. அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் அந்தப் பகுதிகளுக்குச் செல்லாமல் தவிர்த்து அவற்றின் ‘தனித்தன்மை’யைப் பராமரிக்கின்றனர். கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் நகரங்களில் வீடுகளுக்கும் வணிக வளாகங்களுக்கும் இடங்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பதாலும் நகரங்கள் விரிவடைகின்றன. இதில் திட்டமிட்டதைவிட திட்டமிடப்படாத, முறையற்ற நகர விரிவாக்கம்தான் முதலிடம் பிடிக்கிறது. நகரக் குப்பைகளை அதிகப்படுத்துவதில் வசதி படைத்தவர்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
இந்நிலையில் மைசூரு, சண்டீகர், திருச்சிராப்பள்ளி போன்ற நகரங்கள் மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதல் 3 இடங்களைப் பிடித்திருப்பது பாராட்டுக்குரியது. நகரங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதைப் பிரதமர் மோடி வலியுறுத்திய பிறகுதான் மாநில அரசுகளும் பெயரளவுக்காவது இப்போது தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கின்றன. குப்பைகளை அள்ளி காலி மனைகளில் இட்டு நிரப்புவதும், சாக்கடைகளைக் கண்ணுக்குத் தெரியாத வாய்க்கால்களில் வடியவிடுவதும் ‘சுகாதாரப் பராமரிப்பாக’ இருந்துவருகிறது. இந்நிலையில் எல்லா வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டப்படுவதையும் சமுதாயக் கழிப்பறைகளை நிறுவுவதும், நகரங்களில் கழிவுநீரைச் சுத்தப்படுத்தி மறு பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதும் சாதாரணம் அல்ல. திடக் கழிவுகளை மேலாண்மை செய்வதிலும் நகரங்கள் மிகவும் பின்தங்கியிருக்கின்றன.
நகரக் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் எருவை, உர நிறுவனங்கள் விற்பனை செய்ய கேட்டுக்கொள்வது என்ற மத்திய அரசின் சமீபத்திய முடிவு வரவேற்கத் தக்கது. குப்பைகள் மலையாகச் சேருவதைத் தடுக்கும் அதே வேளையில், அது விவசாயப் பயன்பாட்டுக்கு உதவுவது கூடுதல் பலனாகும். உலக அளவில் நகரங்களைத் திட்டமிட்டு அமைப்பதிலும் சுகாதாரத்தைப் பேணுவதிலும் அக்கறை காட்டப்படுகிறது.
குப்பைகளை எல்லோரும் அவரவர் வீடுகளிலேயே பிரித்துவிட்டால் பணி எளிதாகிவிடும். பிளாஸ்டிக் பைகள், கப்புகள், டம்ளர்கள் போன்றவற்றின் பயன்பாட்டை விழிப்புணர்வோடு குறைக்கத் தொடங்க வேண்டும். குப்பைகளை அகற்ற பெரும் தொகையில் ஒப்பந்தம் போடப்பட்டு லாரிகள் மூலம் வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்ல கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்படுவதால், குப்பைகள் குவிவதையே நகர நிர்வாகங்கள் மறைமுகமாக ஊக்குவிக்கின்றன. திடக் கழிவுகளைக் குறைப்பதற்கும் சேரும் திடக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் உத்திகள் வகுக்கப்பட வேண்டும். எல்லா நகரங்களிலும் கழிவுநீரைச் சுத்தப்படுத்தி சாலையோர மரங்கள், பூங்காக்கள், தோட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.
ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்றவற்றைத் தூர் வாருவதும் கழிவுநீர் வாய்க்கால்களையும் மழைநீர் வடிகால்களையும் பராமரிப்பதும் நவீன இயந்திரங்கள் காரணமாக இப்போது எளிதான வேலையாகிவிட்டன. குடியிருப்போர் நலச் சங்கங்களும் மக்கள் குழுக்களும் நகரங்களைத் தூய்மையாகப் பராமரிக்கத் தேவையான செயல்களில் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். செலவுகளுக்கு நிதி பெறுவது இப்போது கடினமல்ல. எனவே, நகரங்களோ கிராமங்களோ மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில், குப்பைகளை முறையாகக் கையாள்வது மிக முக்கியம். இதுபோன்ற திட்டங்களுக்கு மக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.