‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ அமல்படுத்தத் தொடங்கி 10 ஆண்டுகளாகிவிட்டன. விவசாயத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கும்போது, ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 100 நாட்களுக்காவது வேலை பெறுவதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டம் இது. கிராமப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டபோது, ‘‘இடைத்தரகர்கள் சாப்பிடப்போகிறார்கள், பணத்தை வீணடிக்க இப்படியொரு திட்டம்” என்று பலர் விமர்சித்தார்கள். ஆனால், இதன் முக்கிய நோக்கமான கிராமப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது என்பதில் இது பெரும் வெற்றி கண்டது.
வறட்சி, பயிர் சாகுபடி பொய்த்துவிடுவது, விவசாயத்தில் வேலை குறைவாக இருக்கும் காலம் போன்ற பருவங்களில் இந்த வேலைவாய்ப்புத் திட்டம் ஏழைகளுக்குப் பசியாற மிகவும் உதவிகரமாக இருக்கிறது. கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கான ஊதியம் எல்லா பருவங்களிலும் உயரவும் இது உதவி வருகிறது. எங்கெல்லாம் இது உற்சாகமாகவும் நேர்மையாகவும் மேற்கொள்ளப்பட்டதோ அங்கெல்லாம் சமுதாயத்துக்குப் பயன்படக்கூடிய வகையில் நிரந்தரச் சொத்துக்களாக பாசன வாய்க்கால்கள், போக்குவரத்துக்கான சாலைகள் போன்றவை அமைக்கப்பட்டன. அடித்தளக் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக இத்திட்டத்தை அமல்படுத்துவதில் ஒருவித மெத்தனம் இருப்பது உண்மைதான். இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு அளிப்பதில் ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன. மத்திய அரசின் மொத்தச் செலவுகளுடன் ஒப்பிடும்போது இதற்கான ஒதுக்கீடு குறைவாகவே இருக்கிறது. அத்துடன் மாநிலங்களுக்குப் பணத்தைத் தருவதிலும் காலதாமதம் காணப்படுகிறது. இதனால், வேலை கோருவதில் உற்சாகம் குறைந்திருக்கிறது. எனவே, இத்திட்டத்தின் கீழான மனித வேலை நாட்களும், சராசரி கிராமப்புற வருவாயும்கூடக் குறைந்துவிட்டன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது பதவிக் காலத்திலும், பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த முதலாண்டிலும் இதே நிலைதான் தொடர்ந்தது.
கடந்த ஆண்டில்தான் மத்திய அரசு இதன் பயன்பாட்டை வேண்டா வெறுப்பாகப் புரிந்துகொண்டிருக்கிறது. தொடக்கத்தில் ‘‘நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆனபிறகும்கூட நாட்டை வளப்படுத்தியிருக்காமல், மக்களை விட்டுப் பள்ளம் தோண்டச் சொல்கிறோம்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டம் குறித்த தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தினார். காங்கிரஸ் அரசுகளின் கையாலாகத தன்மையிலான திட்டங்களுக்கு அடையாளமாக இந்தத் திட்டத்தைக் கைவிடாமல் தொடர்வதாகவும் இகழ்ச்சியாகக் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தை அவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையும், நலவாழ்வுத் திட்டங்கள் என்றாலே பலர் எரிச்சலுக்கு உள்ளாவதையும் அவரது கருத்துக்கள் உணர்த்தின. மக்களுடைய கோரிக்கைகளை ஏற்று நலவாழ்வுத் திட்டங்களை அமல் செய்வதைப் பலர் ரசிக்கவில்லை என்பதும் இதற்கொரு காரணம்.
ராபி பருவத்தில் பயிர்கள் பொய்த்ததும், வழக்கத்தைவிட மழை அளவு குறைந்ததும்தான் இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக இப்போதைய ஆட்சியாளர்களின் கருத்தை மாற்றியிருக்கிறது. கிராமப்புற மக்களுக்கு உதவ இப்போது இந்தத் திட்டம்தான் மத்திய அரசுக்குக் கைகொடுக்கிறது. எனவேதான் 2015-16 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தத் திட்டத்துக்கான பணம் வேகவேகமாக மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. வறட்சி பாதித்த சில மாநிலங்களைவிட பிற மாநிலங்களில் இந்தத் திட்டத்தை நன்கு திட்டமிட்டு நிறைவேற்றியிருக்கின்றனர். நலவாழ்வுத் திட்டங்கள் என்றால் என்ன என்பதை அரசியல் ரீதியாக முதலில் நன்கு புரிந்துகொண்டு செயல்படுத்த வேண்டும் என்பதையே மத்திய அரசின் இந்த மாற்றம் உணர்த்துகிறது.