ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தொடர்ந்து இயங்கிட, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடியே 25 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது பாராட்டுக்குரியது. நிதிப் பற்றாக்குறையின் காரணமாக அங்கு செயல்பட்டுவரும் தமிழ்த் துறையை செப்டம்பரில் மூடுவதற்கு நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக ‘இந்து தமிழ் திசை’ கவனப்படுத்தியதை அடுத்து, தமிழ்நாடு முதல்வர் விரைந்து இந்நடவடிக்கையை எடுத்துள்ளார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ரூ.1 கோடியும் டொரொண்டோ தமிழ் இருக்கைக்காக ரூ.10 லட்சமும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கையின் அவசியத்தை வலியுறுத்தி, தொடர் கட்டுரைகளையும் செய்திகளையும் ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்டுவந்தது நினைவிருக்கலாம். உலகின் முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழுக்கான ஆய்விருக்கைகள் நிறுவுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்போதெல்லாம் அவற்றை ‘இந்து தமிழ் திசை’ ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றியிருக்கிறது.
தமிழுக்கெனத் தனி ஆய்விருக்கை, தென்னாசிய மொழித் துறையில் ஒரு பகுதி என இந்தியாவுக்கு வெளியிலும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு மையங்களில் தமிழ் ஆய்வுகளும் மொழிப் பாடங்களும் நடத்தப்பட்டுவருகின்றன. உலகளாவிய அளவில் தமிழ் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும்போதிலும் அவற்றுக்கிடையில் இன்னும் முழுமையான ஒருங்கிணைப்பு உருவாகவில்லை. குறிப்பாக, வெளிநாடுகளில் நடத்தப்பட்டுவரும் ஆய்வுகள் குறித்துத் தமிழ்நாட்டு ஆய்வாளர்களுக்கும் தமிழ்நாட்டில் நடந்துவரும் ஆய்வுகள் குறித்து அயல்நாட்டு ஆய்வாளர்களுக்கும் கருத்துப் பரிமாற்றம் உருவாகவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. சர்வதேச அளவிலான ஆய்விதழ்களின் வழியாகவே பொதுவில் இத்தகைய கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்வது வழக்கம். ஆனால், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் தமிழியல் ஆய்வுகள், ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளுக்குச் சென்றுசேர்வதிலும், வெளிநாடுகளில் நடக்கும் ஆய்வுகள் தமிழுக்கு வந்துசேர்வதிலும் தேக்க நிலை நிலவுகிறது. இது உடனடியாகக் களையப்பட வேண்டும்.
தகுதிமிக்க தமிழ் ஆய்வாளர்கள் மற்ற மொழிகளிலும் புலமை பெறுவதற்கு ஊக்கத்தொகைகளுடன் கூடிய பணியிடைப் பயிற்சிகளை அளித்தும் அவர்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு வருகைதரு பேராசிரியர்களாக அனுப்புவித்தும் அங்குள்ள ஆய்வுச் சூழலைக் கண்டுணரும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதுபோலவே, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆய்வாளர்களை வருகைதரு பேராசிரியர்களாக நியமித்து, நமது தமிழாய்வு மையங்களையும் வளப்படுத்த வேண்டும். உலகம் முழுவதும் நடந்துவரும் கல்விப் புலத் தமிழாய்வுகள் அனைத்தையும் ஒரே இணையதளத்தின் வழியாக அறிந்துகொள்வதற்கான முயற்சிகளையும் எடுக்கலாம். கடந்த திமுக ஆட்சியில் துணைமுதல்வராகப் பொறுப்பில் இருந்தபோது, அண்ணா பல்கலைக்கழகம் தமக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிய விழாவில், சர்வதேச ஆய்விதழ்களுக்கு அளித்துவரும் பங்களிப்பில் இந்தியாவும் தமிழ்நாடும் பின்தங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார் மு.க.ஸ்டாலின். தமிழாய்வுகளும் அதற்கு விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டிலிருந்து இயங்கிவரும் தமிழாய்வு நிறுவனங்களும் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகளும் தங்களது ஆய்விதழ்களை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு ஊக்கமளிக்க வேண்டும்.