தலையங்கம்

அமைச்சரவை விரிவாக்கம்: ஒன்றிய அரசின் புதிய பாய்ச்சல்

செய்திப்பிரிவு

புதிய அமைச்சர்கள் 43 பேருடன் விரிவுபடுத்தப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சரவையின் சராசரி வயது 58 என்பதும் அவர்களில் 14 அமைச்சர்கள் 50 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதும் தற்போதைய அமைச்சரவையை இளையவர்கள் நிறைந்த அமைச்சரவையாக உணர வைத்துள்ளது. மாநிலங்களின் முன்னாள் முதல்வர்கள் நால்வர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது ஒன்றிய-மாநிலங்களின் அரசியல் மற்றும் நிர்வாக உறவுகளில் தோன்றும் சிக்கல்களின் மீது கவனம்கொள்ளவும் சரிசெய்யவும் உதவ வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து 27 பேரும் பட்டியல் சாதிகளிலிருந்து 12 பேரும் பழங்குடியினரிலிருந்து 8 பேரும் மதச் சிறுபான்மையினரில் 5 பேரும் விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது மதம் சார்ந்தும் குறிப்பிட்ட சமூகங்களின் நலன்களைச் சார்ந்தும் இயங்கிவரும் கட்சி என்ற குற்றச்சாட்டிலிருந்து பாஜகவை விடுவித்து, அதன் அனைவரையும் உள்ளடக்கிய அரசியலைப் பாராட்டுக்குரியதாக மாற்றியிருக்கிறது.

மோடியின் தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக ஏழு பெண் அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பதன் மூலமாகப் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. 2004-க்குப் பிறகு, அதிக அளவில் பெண்கள் இடம்பெற்றுள்ள அமைச்சரவை என்ற பெயரையும் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள அமைச்சரவை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான அரசியல் அதிகாரமளித்தலைப் பற்றி தீவிரமாகப் பேசிவரும் இந்நாட்களில், இது ஒரு முக்கியமான முன்னகர்வு. பெண் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளவர்களும் பல்வேறுபட்ட சமூகப் படிநிலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ளனர். அடுத்து வரவிருக்கும் பிஹார், வங்க சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளைப் பெண் வாக்காளர்களே பெரிதும் தீர்மானிக்கவிருக்கும் நிலையில், அதையும் கவனத்தில் கொண்டே அமைச்சரவையில் அதிக அளவில் பெண்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளபோதிலும், இந்த மாற்றம் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான நெடும் போராட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல் என்பதை மறுக்க முடியாதது.

கொள்கைரீதியிலான எதிர்ப்புகளைத் தொடர்ந்து சந்திக்க வேண்டியிருக்கும் தமிழ்நாட்டுக்கும் இந்த அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டிருப்பது வரவேற்புக் குரியது. மாநில அரசியலில் உடனடியான வாய்ப்புகள் எதுவும் இல்லாதபோதிலும், தேசிய அளவில் அளிக்கப்படும் வாய்ப்புகள் கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதாக அமையும். தமிழ்நாட்டில் பாஜகவுக்குத் தற்போது நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் ஒன்றிய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். வழக்கறிஞரான அவர், ஏற்கெனவே தேசியப் பட்டியலினத்தவர்கள் ஆணையத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்தவர். தமிழ்நாட்டில் ஏற்கெனவே பாஜகவின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்த மருத்துவரை ஆளுநராகவும் தற்போது அப்பொறுப்பில் இருக்கும் வழக்கறிஞரை ஒன்றிய இணை அமைச்சராகவும் நியமித்திருப்பதிலிருந்து, பாஜக அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளம் தலைவர்களை எளிதில் தம் பக்கம் கவரலாம் என்றே தோன்றுகிறது. தேசியக் கட்சிகள் மட்டுமின்றி, மாநிலக் கட்சிகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை, வழிகாட்டல், சவாலும்கூட.

SCROLL FOR NEXT