அர்ஜெண்டினாவில் நடந்த அதிபர் பதவிக்கான தேர்தலில் போனஸ் அயர்ஸ் நகர மேயராக இருந்த மவ்ரூசியோ மாக்ரி வெற்றி பெற்றுவிட்டார். ஆளும் பெரோனியக் கட்சியைச் சேர்ந்த டேனியல் சியோலி தோற்றுவிட்டார். காலம் சென்ற நெஸ்டர் கிர்ச்னரும் அவருடைய மனைவி கிறிஸ்டினா பெர்னாண்டஸும்தான் கடந்த 12 ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்துவந்தனர். சுதந்திரச் சந்தையைச் சார்ந்திருந்த அர்ஜெண்டினாவை, முற்போக்குத் திட்டங்கள் மூலம் நல்வாழ்வு அரசு நாடாக அவ்விருவரும் மாற்றினர். கிறிஸ்டினாவின் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுவேன் என்று சியோலி கூறினார். ஆனால், மக்களில் அதிகம் பேர் மாக்ரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 21-வது நூற்றாண்டு சமதர்மக் கொள்கைகளுக்குப் பதிலாக 21-வது நூற்றாண்டு வளர்ச்சியைக் கொண்டுவருவேன் என்று மாக்ரி வாக்குறுதி தந்திருக்கிறார்.
அர்ஜெண்டினாவின் பொருளாதாரம் மோசமான கட்டத்தில் இருக்கிறது. 2003 மே மாதம் கிர்ச்னர் அதிபரானபோதும் இதே போல மோசமான நிலையில்தான் பொருளாதார நிலை இருந்தது. 1990-களில் கண்மூடித்தனமாகச் சந்தையை மையமாகக் கொண்ட கொள்கைகளைக் கடைப்பிடித்ததால் அர்ஜெண்டினாவின் பொருளாதாரம் நலிவுபெறத் தொடங்கியது. இறுதியாக 2001- 2002-ல் பொருளாதாரம் சீர்குலைந்தது. கிர்ச்னரும் அவருடைய மனைவி கிறிஸ்டினாவும் புதிய சமூகநலத் திட்டங்களை அமல்படுத்தினர். ஏழைகளுக்கான நலத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கிச் செலவிட்டனர். உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்த இறக்குமதிகள் மீது அதிக வரி விதித்தனர். தனியார் நிறுவனங்களை அரசுடமையாக்கினர். தன் பாலின உறவாளர்கள் திருமணத்தைச் சட்டபூர்வமாக்குவது உட்பட பல முற்போக்கான சட்டங்களை இயற்றினர். உலக அளவில் சரக்குகளின் விலைகள் சரிந்தபோது, அர்ஜெண்டினாவில் கடுமையான பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டது. செலவுகளை மையமாகக் கொண்ட அப்பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சி தேக்க நிலைக்குச் சென்றது. விலைவாசி உயர்ந்து பணவீக்க விகிதம் அதிகரித்தது. இதன் விளைவாக எதிர்க் கட்சிகள் மீண்டும் அரசியல் செல்வாக்கு பெற்றன. கிறிஸ்டினாவின் அதிரடி பாணி அரசியலைக் கட்சிக்குள்ளும் வெளியும் கடுமையாக விமர்சித்தனர். யாருடனும் ஆலோசனை கலக்காமல் சர்வாதிகாரப் போக்கில் நடந்துகொள்கிறார் என்று குற்றம்சாட்டினர்.
புதிய தேர்தல் முடிவால், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு விடைகொடுத்துவிட்டு, சுதந்திரச் சந்தையை மையமாகக் கொண்ட பொருளாதார நடைமுறைகளுக்கு முழுதாகத் திரும்பிவிட முடியாது. தேர்தலில் சியோலியைவிட மாக்ரிக்கு அதிகமாகக் கிடைத்துள்ள வாக்குகள் எண்ணிக்கை வெறும் 3% மட்டுமே. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி பெரோன் கட்சிக்கு நல்ல ஆதரவும் செல்வாக்கும் இருக்கிறது. அர்ஜெண்டினாவின் வலுவான தொழிற்சங்கங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றன. 1990-களின் நிலையற்ற பொருளாதார நிலையால் ஏற்பட்ட பிரச்சினைகளையும் 2000 - 2002 வரையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியும் மக்களுக்கு இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. பெரோன் கட்சியினரின் ஆதரவு இல்லாமல் எவரும் முழு பதவிக் காலமும் அதிபராக இருந்ததில்லை, இனியும் இருக்க முடியாது. ஏழைகளின் நலனுக்கான திட்டத்தில் கை வைத்தாலோ, வறுமை ஒழிப்புத் திட்டங்களை முடக்கினாலோ உடனடியாக மக்களுடைய எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்டவும், மக்கள் நலத் திட்டங்களைத் தரம் வாய்ந்ததாகச் செய்யவும், நாட்டின் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தவும் இந்த வாய்ப்பைப் புதிய அதிபர் மாக்ரி பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதைச் செய்வது தனக்கு செல்வாக்கை வளர்த்துக்கொள்வதற்கு மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தை வளப்படுத்தவும் அவசியம் என்பதை மாக்ரி மறந்து விடக் கூடாது.