இந்தியா முழுவதும் கரோனா தொற்றைக் கண்டறிய பரிசோதனை செய்துகொள்பவர்களில் சராசரியாக 21% பேருக்குத் தொற்று உறுதிபடுத்தப்படுவது நிலைமை எந்த அளவுக்கு மோசமாக ஆகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இந்திய அளவில் உச்ச அளவாகத் தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தையும் இறப்புகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தையும் தொட்டுச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அரசின் போதாமைகள் அப்பட்டமாக வெளிப்படுகின்றன.
நிலைமை இவ்வளவு மோசமான இடத்துக்குச் செல்ல ஒன்றிய அரசைத்தான் பிரதானமான குற்றவாளியாகச் சொல்ல வேண்டும். கரோனாவை இந்தியா வென்றுவிட்டது என்று சொல்லிக்கொண்ட ஆளுங்கட்சி, தொற்று சூறாவளியாகச் சுழன்றடித்துவரும் இந்த நாட்களிலும் அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையிலான நடவடிக்கைகளில் இறங்கிய பாடில்லை. அப்படி ஒன்றிய அரசு இறங்கியிருந்தால், ஏப்ரல் 12 அன்று 37 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடும் நிலையில் இருந்த இந்தியா மே 12 அன்று 24 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடும் நிலைக்குக் கீழே இறங்கி இருக்காது.
அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிகிச்சை மையங்களை உருவாக்கிடுவதுகூடப் பெரிய பிரச்சினை இல்லை; அத்தியாவசிய மருந்துகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்ள எந்த வழியும் தெரியவில்லை என்று கைகளைப் பிசைகின்றனர் சுகாதாரத் துறையினர். ஒருபுறம் சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன், அத்தியாவசிய மருந்துகள் உற்பத்தியையும் மறுபுறம் தடுப்பூசி உற்பத்தியையும் பல மடங்கு அதிகரிப்பதே இன்றைக்கு ஒன்றிய அரசின் முன்னிற்கும் பெரும் பணி. இதற்குத் தடுப்பூசிக்கான காப்புரிமையை உடைத்து, ஏனைய நிறுவனங்களையும் உற்பத்தியில் ஈடுபட அனுமதிப்பது தொடங்கி உலக நாடுகளின் உதவிகளை நாடுவது வரை அனைத்து வகை சாத்தியங்களையும் கையாள வேண்டிய அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
முக்கியமாக, பெரிய அளவிலான நிதி ஒதுக்கீட்டை இதற்கு அரசு செய்தாக வேண்டும். ஆனால், கரோனாவைக் கையாளும் பெரும்பான்மைப் பொறுப்புகளை மாநிலங்களின் பக்கம் தள்ளிவிட்டுவிட்டு, அவர்களையும் உதவிக்காகக் கூக்குரலிடும் சூழலிலேயே ஒன்றிய அரசு வைத்திருப்பதை எப்படி அர்த்தப்படுத்துவது என்று புரியவே இல்லை. கரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கும் தடுப்பூசிக்கும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பெரும்பான்மை எதிர்க்கட்சிகளும், மாநில அரசுகளும் திரும்பத் திரும்ப வலியுறுத்திவரும் நிலையிலும்கூட கோரிக்கையை ஏற்பதற்குப் பதிலாக வியாக்கியானங்களை அடுக்குவதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
எல்லா சிகிச்சைகளையும் கொடுத்தும் உயிர்கள் பறிபோவது தவிர்க்க முடியாமல் இருக்கலாம்; மாறாக, கட்டமைப்பின் பலவீனத்தால், அரசின் போதாமைகளால் பறிபோகும் ஒவ்வொரு உயிரும் தனக்கான அவமானம் என்று அரசு கருத வேண்டும். நிதி வசதியோ, கட்டமைப்புகளைப் பெருக்கும் திறனோ இல்லாத நாடு அல்ல இது. சரியான நேரத்தில் உறுதியான முடிவு எடுக்கப்பட்டால் நம்மால் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காத்திட முடியும். அதற்குக் களத்தில் நிற்கும் மாநிலங்களின் குரல்களுக்கு ஒன்றிய அரசு காது கொடுக்க வேண்டும். அவர்கள் கேட்கும் எல்லா உதவிகளையும் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாடு தன்னுடைய முழு ஆற்றலையும் கரோனாவுக்கு எதிராகத் திருப்பட்டும்!