பருவநிலை மாறுதல் தொடர்பான பாரிஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் கைகுலுக்கிக்கொண்டதுடன் சிறிது நேரம் தனியாகப் பேசியது எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி என்றாலும், அது வரவேற்கத்தக்க ஒன்று! இரு நாடுகளுக்கு இடையிலான உறவாகிய ‘பருவநிலை’யும் நல்லவிதமாக மாறட்டும். ஜூலையில் உஃபா நகரில் நடந்த இது போன்றதொரு சந்திப்பில்தான் இரு தலைவர்களும் உரையாடினர். செப்டம்பர் மாதத்தில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் இருவரும் பங்கேற்றாலும் பேசிக்கொள்ளவில்லை; ஒருவரை ஒருவர் பார்த்துக் கையசைத்ததுடன் சரி.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை என்பது, ‘தொடங்குவது பிறகு நின்றுவிடுவது’ என்ற ரீதியில் போய்க்கொண்டிருக்கிறது. ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் சந்திப்பை நிகழ்த்தி, எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது நடைபெறும் மோதல்களை நிறுத்த வழிகாண்பது என்ற முயற்சிகூட, 5 மாதங்களுக்கு முன் பேசப்பட்டு இன்னமும் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. தவிர, வேறு பல பிரச்சினைகளும் பேசப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமலே இருக்கின்றன. இரு நாட்டவர்க்கும் விசா அனுமதி வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை விலக்கி எளிதாக்குவது, சர்வதேச எல்லைக்கு அருகிலும் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு அருகிலும் இரு நாடுகளும் அமைத்துள்ள சோதனைச் சாவடி பகுதியில் இரு நாட்டுப் பொருட்களையும் பரஸ்பரம் விற்றுக்கொள்ள அனுமதிப்பது, வர்த்தகத்துக்கு வங்கிகளின் நிதியுதவியைப் பெறுவது போன்றவை இன்னமும் செயல்படுத்தப்படாமலேயே இருக்கின்றன.
பாகிஸ்தான் மண்ணில் ஹஃபீஸ் சய்யீத் போன்ற பயங்கரவாதிகள் தாராளமாகச் செயல்பட அனுமதிப்பது குறித்தும் பயங்கரவாதக் குழுக்களுக்கு அந்த மண்ணில் கிடைக்கும் உதவிகள் குறித்தும் இந்தியா தெரிவித்த கவலைகள் தொடர்பாக பாகிஸ்தான் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், இருதரப்பு உறவுகள் இன்னும் சுமுகமடையாமலே இருக்கின்றன.
பயங்கரவாதத்தை ஒடுக்க வலுவான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்காதவரை அதனுடன் முழுவீச்சிலான பேச்சில் ஈடுபட முடியாது என்ற இந்திய நிலையில் இப்போதும் மாற்றமில்லை. அதேசமயம், இரு நாடுகளின் வர்த்தகக் குழுக்களும் மக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பரஸ்பர சுற்றுலாவாகச் சென்றுவர தடைகள் இல்லை என்று இருதரப்பும் அனுமதித்திருப்பது வரவேற்கத்தக்கது. அடுத்த ஆண்டு இஸ்லாமாபாத்துக்கு பிரதமர் மோடி செல்வதற்கு முன் பயனுள்ள ஒரு சூழலை உருவாக்கித் தருவதற்கு இத்தகைய நடவடிக்கைகள் உதவும்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். மோடி தலைமையிலான அரசு ஆட்சியில் அமர்ந்தது முதல் இந்தியா - பாகிஸ்தான் உறவு தொடர்பான கொள்கைகள், அணுகுமுறைகள், நடவடிக்கைகள் பல ரகசியமாக நடக்கின்றன என்பதே அது. பாகிஸ்தான் தொடர்பாக அரசின் கொள்கை என்ன, என்ன செய்ய விரும்புகிறது என்பது வெளிப்படையாகத் தெரிய வேண்டும். பரஸ்பரம் பேசுவதில்லை என்று முடிவுசெய்திருந்தால் இரு பிரதமர்களும் பாரிஸில் சந்தித்துப் பேசியிருக்க மாட்டார்கள். பேசுவதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்திருந்தால் - அதுதான் நல்லதும்கூட. மக்களுக்குத் தெரியும் விதத்திலும் அவர்கள் நம்பும் வகையிலும் அது நடப்பதில் என்ன பிரச்சினை? புதிய முயற்சிகளை ரகசியமாக எடுப்பது, வெகு விரைவிலேயே அதைக் கரைய விடுவது என்பது இனியும் தொடரக் கூடாது.