இந்தியப் பொருளாதாரம் குறித்து ஓராண்டுக்கு முன்னால் கொட்டி முழக்கிய மத்திய அரசின் குரலில் சுருதி இப்போது குறைந்துவிட்டது; கடந்த ஆண்டைவிட இப்போதுதான் பொருளாதாரம் மேம்பட்டு வருவதை உணர்த்தும் உற்சாகமான அறிகுறிகளுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது. அரசின் நிதி பற்றாக்குறை மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 4%-க்கு அதிகமாகப் போய்விடக்கூடாது என்ற இலக்குக்கு ஏற்ப, 3.9% ஆக இருக்கிறது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை மொத்த உற்பத்தி மதிப்பில் 1.5%-க்கும் குறைவாக இருக்கிறது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி வீதம் 7% முதல் 7.5% ஆக இருக்கிறது. நுகர்வோர் விலை அடிப்படையிலான பணவீக்கம் (அதாவது விலைவாசி உயர்வு விகிதம்) 5% ஆக இருக்கிறது. பொருளாதாரச் சுணக்கத்துக்கு ஆளாகியுள்ள எந்த நாட்டிலும் இதைப் போல வளமான குறியீடுகள் இல்லை. சீனத்தில் பொருளாதார வளர்ச்சி வீதம் 7%-க்கும் குறைவு. இதன் காரணமாகத்தான் 2015-ல் அந்நிய நேரடி முதலீட்டை இந்தியாவால் அதிகம் ஈர்க்க முடிந்தது. இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஜூன் வரையிலான காலத்தில் 1,940 கோடி டாலர் முதலீட்டை இந்தியா ஈர்த்திருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததைவிட 30% அதிகம். இருந்தாலும் இதே வளர்ச்சி வீதத்தைப் பராமரிக்க முடியுமா என்ற கவலைகள் எழாமல் இல்லை.
சமீபத்தில் ஹாங்காங்கில் பேசிய இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இதே கவலையைப் பகிர்ந்துகொண்டுள்ளார். தனியார் (நிறுவனங்கள்) முதலீடு செய்வது சிறிதளவு குறைந்துவிட்டது, பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பணம் போடுவதும் குறைந்துவிட்டது என்று குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். 2015-16 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்று ‘மூடிஸ்’ என்ற நிறுவனம் கூறியிருக்கிறது. முன்னதாக இந்த வளர்ச்சி வீதம் 7.5% ஆக இருக்கும் என்று அது மதிப்பிட்டிருந்தது. 2014-15-ல் இந்தியா அடைந்த 7.2% வளர்ச்சி என்ற அளவைவிட இது குறைவாகும். ஏற்றுமதியும் சரிந்துவருகிறது. இதனால் ஏற்படக்கூடிய இழப்பைச் சரிக்கட்ட வேண்டுமென்றால் உள்நாட்டில் நுகர்வு அதிகமாக வேண்டும்.
அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில் வேலைகளைத் தொடங்குவதும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் திட்டங்களை அமல் செய்வதும்தான் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும். மத்திய அரசு இதற்கு அனுசரணையாகத்தான் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை பல துறைகளில் உயர்த்தியிருக்கிறது அல்லது நீக்கியிருக்கிறது. முதலீடு, தொழில் நிர்வாகம் தொடர்பான புகார்களை விரைந்து விசாரிக்க நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டிருக்கின்றன. அதே போல, தொழிலதிபருக்கு நஷ்டம் ஏற்பட்டால், ‘திவால்’ என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு இருந்த சட்ட, நிர்வாக நடைமுறைத் தடைகள் ஒழிக்கப்பட்டுள்ளன. மத்தியஸ்தம் செய்வதற்கான நடைமுறையும் எளிமையாக்கப்படுகிறது. இதனால் தொழில் தொடங்கவும் நடத்தவும் இந்தியா உகந்த நாடாக சர்வதேச அளவில் மதிப்பீட்டில் உயரும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளுடன் மல்லுக்கு நிற்காமல் பொது சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதில் அவற்றிடம் இணக்கமாகச் செயல்பட வேண்டும். இப்போதுள்ளதைவிட அதிக அளவுக்கு வளர்ச்சி ஏற்படுவதற்கான கட்டத்தில் பொருளாதாரம் இருக்கிறது. அடுத்த சில மாதங்கள் மிகவும் முக்கியமானவை. உலகம் இந்தியாவைக் கூர்ந்து கவனித்து வருகிறது. எனவே மத்திய அரசு விவேகமாக நடந்துகொள்ள வேண்டும்.