தலையங்கம்

தடுப்பூசி விநியோகத்தை சீரமையுங்கள்!

செய்திப்பிரிவு

கரோனாவை எதிர்கொள்ளும் போரில் மனிதகுலம் இப்போதைக்குக் கொண்டிருக்கும் பெரிய ஆயுதமான தடுப்பூசியை மக்களுக்குக் கொண்டுசெல்லும் இயக்கத்தில் இந்தியாவில் நடந்துவரும் குளறுபடிகள் மோசமானவை.

கரோனாவின் இரண்டாவது அலை அதன் உச்சத்தை நோக்கி நகரும் இந்தக் காலகட்டத்துக்குள்ளேயே தடுப்பூசி இயக்கத்தின் வேகத்தைப் பன்மடங்கு அதிகரித்து, பெரும் பகுதி மக்கள் மத்தியில் அதைக் கொண்டுசென்றுவிட வேண்டும் என்பதே நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது. இதன் வழியாக இரண்டாம் அலையின் தீவிரத்தை ஓரளவேனும் குறைக்க முற்படுவதோடு, மூன்றாம் அலையின் சேதங்களையும் குறைக்க முடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால், தேவைக்கேற்ப உற்பத்தி முடுக்கிவிடப்படுவதோடு, விநியோகமும் விலைநிர்ணயமும் சீராகக் கொண்டுசெல்லப்பட வேண்டும்.

களத்தில் மூன்று பிரச்சினைகளைக் கேட்க முடிகிறது. முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களையே முதலாவது டோஸ் இன்னும் முழுமையாகச் சென்றடையாத நிலையில், ‘45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அல்லாது, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்’ என்ற அறிவிப்பு கூடுதல் தட்டுப்பாட்டை உண்டாக்கியிருக்கிறது.

நாட்டின் மக்கள்தொகையில் 35%-40% பேர் 18-44 வயது வரம்பினர் ஆவார்கள். எல்லோரையுமே தடுப்பூசி சென்றடைய வேண்டும். ஆனால், ஏற்கெனவே தட்டுப்பாடு கணக்கு நிலவும் இடத்தில் புதிதான ஒரு கூட்டத்தைத் திறந்துவிடுவது எவ்வளவு நெருக்கடியை உண்டாக்கும் என்பதை விவரிக்க வேண்டியது இல்லை. அடுத்த பிரச்சினை, மாநிலங்களுக்குத் தடுப்பூசி விநியோகிக்கப்படுவதில் சீர்மை இல்லை என்ற குரல் தொடர்ந்து கேட்பதாகும். ஒன்றிய அரசை ஆள்வோரின் விருப்புரிமைகளை மாநிலங்களுக்கான ஒதுக்கீடு தீர்மானிக்கிறதா என்ற கேள்வி தடுப்பூசி விநியோகத்திலும்கூட தொடர்வது மிக மோசமான அவலம் என்றே சொல்ல வேண்டும். அடுத்த பிரச்சினை பல நாடுகளை ஒப்பிட இந்தியாவில் தடுப்பூசிக்கு அதிகமான விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ஒன்றிய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.600, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என்பதுபோன்று மூன்று விதமான விலை அனுமதிக்கப்பட்டிருப்பது நியாயமே இல்லை. கடுமையான கிராக்கி நிலவும் சூழலில், எந்த ஒரு நிறுவனமும் தன்னுடைய பொருளை யார் அதிக விலைக்கு வாங்குகிறார்களோ அவர்களுக்கே அதிகம் விற்க முற்படும் என்பது வெளிப்படை. இதையெல்லாம் முன்கூட்டி யோசிக்காமலா இத்தகைய முடிவுகளை எடுக்கிறார்கள்?

தடுப்பூசி உற்பத்தியில் தொடங்கி விநியோகம் வரை பல்வேறு நிலைகளிலும் ஒன்றிய அரசே இதில் பிரதான பங்கை வகிக்கும் நிலையில், இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும்; பிரச்சினைகள் உடனடியாகக் களையப்பட்டு, தடுப்பூசி இயக்கம் சீரமைக்கப்படவும் வேண்டும்.

SCROLL FOR NEXT