காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2004-ல் ஆட்சிக்கு வந்ததற்கு முக்கியக் காரணம், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற மிதமிஞ்சிய பிரச்சாரம் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வியடைந்ததுதான்.
இந்திய சமூகத்தின் பன்முகத்தன்மை மீட்டெடுக்கப்பட வேண்டும், மத சகிப்புத்தன்மை வேண்டும் என்றுதான் மக்கள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்து மீண்டும் பதவியில் அமர்த்தினார்கள். வாஜ்பாய் அரசு பதவி வகித்த 6 ஆண்டுகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள வெகு தீவிரமாகச் செயல்பட்டன. இத்தனைக்கும் அவை இப்போதுள்ள அளவுக்குக்கூட அப்போது சூடாகச் செயல்படவில்லை. ஆனால், அதையே மக்கள் ஏற்கவில்லை. மேலும், அதற்கு முன்னால் மக்களவைப் பொதுத் தேர்தலில் தோற்ற காங்கிரஸ் கட்சி தன்னுடைய தோல்விக்குக் காரணங்கள் என்ன என்று தீவிரமாகப் பரிசீலித்தது. தான் யார் என்பதையே ஆத்ம பரிசோதனை செய்து உறுதிசெய்துகொள்ள வேண்டிய நிலைமை அதற்கு ஏற்பட்டது. 2004 அக்டோபரில் கட்சியின் மூத்த தலைவர்கள் சுமார் 200 பேர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, கட்சியின் தோல்விக்கான காரணங்கள் அனைத்தையும் நுட்பமாக ஆராய்ந்ததுடன், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சிந்தித்தனர். அனைத்துத் தரப்பினரையும் அனுசரித்துச் செல்லும் மதச்சார்பற்ற மக்கள் கட்சியாகத் தங்களை நம்புவதற்கு ஏற்பச் செயல்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. எல்லாமுமாகச் சேர்ந்து காங்கிரஸை ஆட்சியில் அமரவைத்தது.
இந்த முறை பாஜக அரசுக்கு எதிர்ப்புகள் முன்கூட்டியே பிறந்துவிட்டன. எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் என்று எல்லாத் தரப்பினரும் அரசுக்கு எதிராகப் பேசத் தொடங்கியிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழல்தான் எதிர்க் கட்சிகள் மீண்டும் தலையெடுப்பதற்கான சரியான தருணம். அதே சமயம், தம் பக்கத் தவறுகளை முதலில் ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பெருந்தோல்வியிலிருந்து மீள காங்கிரஸ் கட்சி செய்துவரும் முயற்சிகள் அதிக பலன்களை இதுவரை கொடுக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம், கட்சியின் பெரும்பான்மையான தொண்டர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சும் நடவடிக்கைகள் முழு வீச்சில் இன்னும் நடக்காததுதான். மேலும், ராகுல் காந்தியின் பதவி உயர்வு தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டேவருவதும் நல்லதல்ல. மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் வலு வெறும் 44 ஆகக் குறைக்கப்பட்டது அக்கட்சிக்கு வரலாற்றுப் பாடம். புரையோடிய சீழ்க்கட்டிக்குப் புனுகுத் தைலம் பூச முடியாது. அறுவைச் சிகிச்சை தேவை. அடையாளப் போராட்டங்கள் மக்களிடம் கைகோக்க உதவாது. ராகுல் காந்தி இதையெல்லாம் உணராதவர் அல்ல. பிஹார் தேர்தல் காங்கிரஸுக்குப் புதிய பாதை ஒன்றைக் காட்டியிருக்கிறது. தேர்தல் கூட்டணிக்கு அது உதவும். கூடுதலாக, பாஜக தோல்வியிலிருந்து பாடம் கற்க வேண்டும். சொல்லப்போனால், காங்கிரஸுக்கு இது புதிதல்ல. ஆமாம், மாநிலங்களில் கட்சிக்கு வலுவான தலைமை அவசியம். மக்கள் பிரச்சினைகளில் கட்சி உயிரோட்டமாகப் பங்கேற்க வேண்டும். மக்களை நோக்கி கட்சி எவ்வளவுக்கு எவ்வளவு செல்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது அதிகாரத்தை நோக்கியும் செல்லும்!