தலையங்கம்

பொருளாதாரத்துக்குப் புத்துயிர் கிடைக்குமா?

செய்திப்பிரிவு

கரோனா பெருந்தொற்று சுகாதாரத்துக்கு மட்டுமல்ல பொருளாதாரத்துக்கும் பெரும் சவால்களை ஏற்படுத்தி யிருக்கிறது. லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்து, ஆயிரக்கணக்கான சிறு-குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் எல்லோரது எதிர்பார்ப்பும் புதிய அரசு பொருளாதாரத்துக்குப் புத்துயிர் கொடுக்குமா என்பதுதான். இந்தச் சூழலோடுதான் கட்சிகளின் தேர்தல் அறிக்கையைப் பொருத்திப்பார்க்க வேண்டியிருக்கிறது.

அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு கரோனா நிவாரணத் தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கரோனா பெருந்தொற்றால் மூடப்பட்ட தொழிற்சாலைகளைத் திறக்கவும் அங்கு பணியாற்றிய பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கவும் ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு, சிறு நிறுவனங்களுக்குச் சற்றே தெம்பை அளிக்கக்கூடியது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வேண்டிய பொருட்களைச் சிறு-குறு தொழில் நிறுவனங்களிலிருந்து பெறுவதற்கு 15% ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத் தகுந்தது.

அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள கவர்ச்சிகரமான அறிவிப்புகளுள் ஒன்று அரசுப் பணியாளர் இல்லாத வீடுகளில் தலா ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்பது. அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பேட்டை நிறுவுதல், மாவட்டங்கள்தோறும் சிறு தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைத்தல் போன்றவை நல்ல விஷயங்கள். அரசு வேலைகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

அதிமுகவின் வழியில் அமமுகவும் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கும் ‘அம்மா பொருளாதாரத் திட்டம்’ ஒன்றை அறிவித்திருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ரூ.70 லட்சம் கோடி அளவில் உயர்த்தப்போவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. இதன் மூலம் தனிநபர் வருமானத்தை ரூ.10 லட்சம் வரை உயர்த்தபோவதாகக் கூறியிருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை தற்சார்புள்ள பசுமைப் பொருளாதாரத்துக்கு வாக்களித்திருக்கிறது.

கரோனா சிதைத்துவிட்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் விரிவான திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றைக் கட்சிகளிடமிருந்து மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். சில அறிவிப்புகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தாலும் பொருளாதாரத்துக்கு அவற்றால் எப்படிப் புத்துயிர் கொடுக்க முடியும் என்ற கேள்விக்கு இந்த அறிக்கைகளில் சரியான பதில் கிடைக்கவில்லை.

SCROLL FOR NEXT