தலையங்கம்

வலுவான பயிர் காப்பீட்டுத் திட்டம் வேண்டும்!

செய்திப்பிரிவு

பஞ்சாப் மாநில விவசாயிகளை நிலைகுலைய வைத்திருக்கிறது வெள்ளை வண்டுப்பூச்சித் தாக்குதல். பூச்சித் தாக்குதலால் நஷ்டம் அடையப்போகும் விவசாயிகளுக்கு ஈடாக ரூ.640 கோடி ஒதுக்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு அவசர அவசரமாக அறிவித்திருக்கிறது. இந்த ரூ. 640 கோடி இழப்புத்தொகை எந்த அடிப்படையில், எப்படிக் கணக்கிடப்பட்டது என்று தெரியவில்லை. சாகுபடிப் பரப்பில் மூன்றில் இரண்டு மடங்கு பயிர் இந்தப் பூச்சித் தாக்குதலால் சேதம் அடைந்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் பெரிதாகக் கண்ணுக்குத் தெரிவது என்னவென்றால், பசுமைப் புரட்சியின் தாயகமான பஞ்சாபிலேயே பயிர்க் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளால் பின்பற்றப்படவில்லை என்பதுதான். இதற்குக் காரணம், விவசாயிகளுக்கு விவரம் தெரியாததோ அவர்களிடம் பணம் இல்லை என்பதோ அல்ல. இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ள விதமும், சேதம் ஏற்பட்டால் இழப்பீடு பெறுவதற்கு விவசாயிகள் பட வேண்டிய அலைச்சலும்தான்.

மொத்த விவசாயிகளில் 4% பேர்தான் தங்களுடைய பயிர்களைக் காப்பீடு செய்கின்றனர். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் வங்கிகளில் கடன் வாங்கி விவசாயம் செய்யும் பெருநிலக்கிழார்கள். வங்கிக் கடன்களுக்கான நிபந்தனைகளில் ஒன்று பயிர்க் காப்பீடு என்பதால், அவர்கள் இன்சூர் செய்கிறார்கள். பயிர் இன்சூரன்ஸ் எனப்படும் காப்பீட்டுத் திட்டம், அந்த முகமை அளிக்கும் ஒற்றைத் திட்டமாகத்தான் இருக்கிறது.

விவசாயி தேர்வுசெய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் இருப்பதில்லை. காப்பீடு செய்துகொள்ளும் விவசாயி தனி நபர் என்றாலும் அவருடைய நிலத்தில் ஏற்பட்ட சேதத்தை மட்டும் அளவிட்டு நஷ்ட ஈடு வழங்குவதில்லை. அந்தப் பகுதியில் அதே மாதிரி பயிர் சாகுபடியான நிலங்கள், கிராமங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகே சேதம் மதிப்பிடப்படுகிறது.

2013-14-ல் ‘திருத்தப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டது. 25 கிராமங்களைக் கொண்ட ஒரு வருவாய் வட்டத்தை அலகாகக் கொள்ளாமல், நிலம் இருக்கும் கிராமத்தை மட்டுமே அடிப்படை அலகாகக் கொள்ள அது வழிசெய்தது. இதனால், பாதிப்பைத் துல்லியமாகக் கணக்கிட முடிந்தது. சாகுபடிக்காகும் செலவைக் கணக்கிட்டு அதற்கேற்பப் பிரிமியத்தை நிர்ணயிக்க முடிகிறது. இந்தத் திட்டத்தை விவசாயிகள் ஏற்க தொடக்கக் காலத்தில் பிரிமியத்தில் கணிசமான பகுதியை அரசே மானியமாக ஏற்கலாம். ‘பருவநிலை அடிப்படை’யில் பயிர்க் காப்பீடு செய்யும் முறையைத் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஆதரிக்கின்றன. ‘சாகுபடி அடிப்படையிலான’ இழப்பீடு கணக்கிடும் முறையும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், பருவநிலையை அடிப்படையாகக் கொண்ட கணக்கீடு துல்லியமாக இருப்பதில்லை என்பதே அனுபவம்.

பயிர் காப்பீட்டுத் திட்டம் என்பதே வங்கிகளில் பெறும் விவசாயக் கடனையே பெரும்பாலும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இப்படிக் காப்பீடு செய்வதால் குடிவாரதாரர்கள், குத்தகைதாரர்கள் விடுபடுவார்கள். பயிர் வைத்துச் சாகுபடி குறைந்தால் அல்லது பொய்த்துப்போனால் அவர்களுக்கு இழப்பீடு கிடைக்காது. இதற்குக் குறுநிதி நிறுவன அமைப்புகள் மூலம் காப்பீடு செய்யப்படும் முறையைப் பரிசீலிக்கலாம்.

விவசாயத்துக்கான பயிர்க் காப்பீடு என்பது விவசாயிகள் நஷ்டப்படாமலும் கடன் தொல்லையில் சிக்காமலும் இருக்க உதவுவதுடன் விவசாயத்தின் பால் மேலும் பலரை ஈர்க்கவும் முதலீட்டைப் பெருக்கவும் நிச்சயம் உதவும். மத்திய, மாநில அரசுகளும் விவசாயிகளின் சங்கங்களும் இணைந்து இதை வென்றெடுக்க வேண்டும்!

SCROLL FOR NEXT