கரோனா பெருந்தொற்று வந்தபோதுதான் நம் சுகாதாரத் துறையின் பலமும் பலவீனங்களும் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தன. இத்தருணத்தில் எல்லாக் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் சுகாதாரத்தைப் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன.
மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது வரவேற்கத் தகுந்த விஷயம். புதிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் கொண்டுவரப்படும், கிராம மக்களுக்காக நடமாடும் மருத்துவமனைகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புகளெல்லாம் வரவேற்கப்பட வேண்டியவையே. அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும், ஒப்பந்த முறையில் பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்புகள் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடியவை.
அதிமுக, மினி கிளினிக்குகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டித் தரப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்படும் என்பதும், அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என்பதும் அந்நோயால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் லட்சக்கணக்கானோருக்கு நம்பிக்கை தருவதாகும். மகப்பேறு விடுப்பு ஒரு வருடமாக உயர்வு, மகப்பேறு உதவித்தொகை அதிகரிப்பு போன்றவை பெண்கள் நலனில் அக்கறை கொண்ட அறிவிப்புகள்.
அமமுக தனது அறிக்கையில் 3 கிமீ தூரத்துக்குள் அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைப்பதற்கு வழிவகைகள் செய்யப்படும் என்று உறுதியளித்திருப்பது குறிப்பிடத் தகுந்த விஷயம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியிருக்கிறது. முதியோருக்கு மருத்துவர்கள் வீடுதேடிவந்து மருத்துவ ஆலோசனைகள் வழங்குவார்கள் என்றிருக்கிறது நாம் தமிழர். கூடவே சித்தா, ஆயுர்வேதம் போன்ற மரபுவழி மருத்துவ முறைகளுக்குக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் கூறியிருக்கிறது.
பெருந்தொற்று நமக்கு உணர்த்தியிருக்கும் கடுமையான எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது அரசியல் கட்சிகள் தங்கள் அறிக்கையில் இன்னும் தொலைநோக்குப் பார்வையுடன் சுகாதாரம் தொடர்பாக அணுகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் இந்த அறிவிப்புகளைத் தங்கள் ஆட்சியில் முறையாகச் செயல்படுத்தினால் குறிப்பிடத் தகுந்த அளவு மாற்றம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.