வாக்காளர்களில் விவசாயிகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருப்பதால் எல்லாக் கட்சிகளும் அவர்களுடைய வாக்குகளைப் பெறுவதில் முனைப்பாக இருக்கின்றன. அதனால், அவற்றின் தேர்தல் அறிக்கைகளில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள் அதிகமாக இருக்கின்றன.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் வேளாண் மகளிருக்கு மானியம் வழங்குதல், நெல், கரும்புக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை அதிகரிப்பு, சிறுதானியங்களுக்கும் நேரடி கொள்முதல் வாய்ப்பு, அனைத்து வகை உணவுப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம், வேளாண்மைக்கென்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆகியவை வரவேற்புக்குரியவை. திமுகவுக்குப் போட்டியாக அஇஅதிமுகவும் விவசாயிகளுக்கென்று ஏராளமான அறிவிப்புகளை வழங்கியிருக்கிறது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,500 உழவு மானியம், சிறுதானியங்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, பனை மரம் வளர்ப்பதற்கு ஊக்குவித்தல், ஒருங்கிணைந்த குளிர்சாதனக் கிடங்குகள் உருவாக்கப்படும், மாநில வேளாண் ஆணையம் அமைக்கப்படும், இயற்கை விவசாயத்துக்கும் இடுபொருள் மானியம் வழங்கப்படும், காவிரிப் படுகை மாவட்டங்களில் வேளாண் இயந்திரங்களுக்கான பிரத்யேகத் தொழிற்கூடங்கள் அமைக்கப்படும், கால்நடை வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புகள் விவசாயிகளை ஈர்க்கக்கூடியவை.
இரண்டு பிரதானக் கட்சிகளும் கடலோடிகளின் நலனுக்கென்று முக்கியமான சில அறிவிப்புகளைத் தங்கள் அறிக்கைகளில் வெளியிட்டிருக்கின்றன. மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும், மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும், மீன்பிடித் தடைக்கால நிவாரணம் 5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரமாக உயர்த்தப்படும் என்பதெல்லாம் திமுக அறிக்கையில் காணப்படும் நல்ல விஷயங்கள். அதிமுகவும் கடலோடிகளுக்குப் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ. 7,500 வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.
நெசவாளர்களைக் குறிவைத்தும் சில முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நெசவாளர்களுக்கென்று தனியாகக் கூட்டுறவு வங்கி தொடங்கப்படும் என்றும், அரசு வழங்கும் இலவச வேட்டிசேலைகளை நெய்யும் வாய்ப்பு கைத்தறி நெசவாளர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளை நெய்யும் வாய்ப்பு விசைத்தறி நெசவாளர்களுக்கும் வழங்கப்படும் என்றும் திமுக கூறியிருப்பது நெசவாளர்களுக்குப் புத்துயிர் ஊட்டும். நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை வங்கிக்கடனில் தள்ளுபடி என்று அதிமுக அறிவித்திருப்பதுவும் வரவேற்புக்குரிய விஷயம். மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை விவசாயத்தை லாபகரமாக மாற்றுவோம் என்ற வாக்குறுதியுடன் சுருக்கமாக முடித்துக்கொண்டிருக்கிறது. அமமுகவின் தேர்தல் அறிக்கை அதிமுகவின் நகல் போல் ஒருசில இடங்களில் இருக்கிறது. சிறுதானியங்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பனை, தென்னை சார்ந்த பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று கூறியிருப்பது பாராட்டுக்குரியது. இயற்கை வேளாண்மையை ஏறக்குறைய எல்லாக் கட்சிகளுமே ஊக்குவிப்போம் என்று கூறியிருக்கின்றன.
விவசாயிகள், கடலோடிகள், நெசவாளர்கள் மீதான கட்சிகளின் அக்கறை என்பது வெறும் தேர்தலையொட்டிய வாக்குறுதியாக அமைந்துவிடாமல் ஆட்சியில் அமரும் கட்சியால் செயல்வடிவமும் பெற வேண்டும். மேலும், பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் உள்ள நல்ல விஷயங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்வதும் அவசியம்.