ராணுவத்தினர் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால், அவர்களுக்குப் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. அதேபோல், ராணுவத்தின் கண்ணியமும் மிகமிக முக்கியம். உலகின் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றான இந்திய ராணுவம், அதில் பணிபுரிவதற்கு முன்வரும் இளைஞர்களின் பேராவலை மூலதனமாகக்கொண்டு இயங்கும் நிலையில், ‘ஒரு பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம்’ தொடர்பாக உருவாகியிருக்கும் பிரச்சினையை உடனடியாகக் களைய மத்திய அரசு முன்வர வேண்டியது அவசியம். இத்திட்டம் தொடர்பாக, அரசின் பல்வேறு துறைகளில் நிலவும் கருத்துகளை வைத்துப்பார்க்கும்போது, இத்திட்டத்தில் அரசு அத்தனை ஆர்வம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இத்திட்டம் தொடர்பாக சமீபத்தில் அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முன்கூட்டியே ஓய்வுபெறுவது தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் அறிவிப்பு இளம் ராணுவ அதிகாரிகளுக்கு உற்சாகம் ஊட்டுவதாக இல்லை.
கார்கில் போருக்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட ராணுவச் சீர்திருத்தம், கள தளபதிகளுக்கான சராசரி வயதைக் குறைப்பதற்கு வழிவகுத்தது. ஆனால், தற்போது அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இதற்கு எதிரான நிலைப்பாடு தென்படுவது பெரிய பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக நிலவும் சிக்கல்களைக் களைகிறோம் என்ற பெயரில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் குறைகளைப் பரிசீலிப்பதற்காக இன்னொரு குழுவை உருவாக்குவது என்பது பரிகாசத்துக்குரிய நடவடிக்கையாகவே அமையும். நாட்டின் ஜனநாயகத்தில் ராணுவத்தின் பங்கு மிக முக்கியமானது. எனவே, ராணுவத்தினரை அரசியலை நோக்கித் தள்ளுவது என்பது வளர்ந்துவரும் ஒரு நாட்டின் எதிர்காலத்துக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும். மிகப் பெரிய ராணுவத்துடனான உறவு மோசமடைவது என்பது தேவையற்ற விளைவுகளுக்கு வழிவகுக்கும். தொடரும் போராட்டங்கள் அரசின் மீது அதிருப்தியை உருவாக்கிவிடும்.
இப்படியான சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பிரச்சினையைத் தனிப்பட்ட அக்கறையுடனும், நம்பகத்தன்மையுடனும் அணுக வேண்டும். தனது அமைச்சரவை சகாக்கள், குறிப்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உள்ளிட்டோர் இப்பிரச்சினை தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அரசு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். முதலாவதாக அரசு செய்ய வேண்டியது இதைத்தான். போராட்டம் நடத்திவரும் ஓய்வுபெற்ற ராணுவத்தினர் மீதான திட்டமிட்ட விமர்சனங்களும், அவர்களது போராட்ட வழிமுறைகளைக் கொச்சைப்படுத்தும் செயல்களும் இந்தப் பிரச்சினைக்கு எவ்விதத்திலும் தீர்வு தராது. ஓய்வுபெற்ற ராணுவத்தினர் முன்வைக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் கவனத்தில்கொள்வதுடன் உறுதியான மற்றும் சாத்தியத்தன்மை கொண்ட பதிலைப் பிரதமர் அளிக்க வேண்டும். அத்துடன், முன்னாள் ராணுவத்தினர் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தனிப்பட்ட முறையில் இவ்விஷயத்தில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இப்போராட்டம் ஏதோ அதிருப்தியடைந்த முன்னாள் ராணுவத்தினர் சிலர் முன்னெடுத்திருக்கும் போராட்டம் என்று கருத முடியாது. இந்தப் போராட்டம் ஒருவேளை முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால், இப்போராட்டம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் நாடு முழுவதும் உணரப்பட்டிருக்கிறது. தற்போது பணியில் இருக்கும் ராணுவத்தினர் மத்தியில் ஏற்கெனவே அதிருப்தி நிலவத் தொடங்கியிருக்கிறது என்பது கவனிக்கத் தக்க விஷயம். மிகுந்த கவலையளிக்கும் விஷயமும்கூட.