கோப்புப்படம் 
தலையங்கம்

கரோனா தொற்று அதிகரிப்பு: விழிப்புணர்வையும் தற்காப்பையும்கைவிடக் கூடாது

செய்திப்பிரிவு

கரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை மீண்டும் சன்னமாக அதிகரித்துவருவதானது, பெருந்தொற்றுக் காலத்தின் தொடக்கத்தில் மக்களிடம் இருந்த விழிப்புணர்வும் தற்காப்பு நடவடிக்கைகளும் அதே வீச்சில் தொடர வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. சென்னை மற்றும் அதையடுத்துள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகத் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

திருமண விழாக்கள், இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் தவிர அலுவலகங்களும் கல்வி நிறுவனங்களும்கூட அதிகளவிலான தொற்றுப் பரவல் மையங்களாக மாறிவருவது தெரியவந்துள்ளது. தொற்று கண்டறியப்பட்ட உடனே தொற்றுக்கு ஆளானவர்களின் நெருங்கிய தொடர்புள்ளவர்களில் 30 பேருக்காவது பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்றுப் பரவலைக் கண்டறிவதிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை என்னதான் தீவிர முயற்சிகளை எடுத்தாலும் மக்களிடம் அது குறித்த அக்கறையும் பொறுப்பும் இல்லாவிட்டால் அதன் நோக்கத்தையும் பயனையும் எட்ட முடியாது.

தமிழகத்தில் மட்டுமின்றி மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கேரளத்தில் 2,000-க்கும் மேற்பட்ட தொற்றுகளும் கர்நாடகத்தில் சுமார் 900 தொற்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்திலும் தொற்று மீண்டும் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணியாதது உள்ளிட்ட தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது உடனுக்குடன் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் வருவாய்த் துறையும் உள்ளாட்சி அமைப்புகளும் இறங்கியுள்ளன. இத்தகைய அபராதங்கள், சூழலின் தீவிரத்தை மக்களிடம் உணர்த்துவதற்கு மட்டுமே உதவும். எல்லா நிலைகளிலும் மக்களைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் இயலாத ஒன்று.

கடந்த சனிக்கிழமை மாலை 7 மணி வரையிலும் தமிழகம் முழுவதும் 13,86,379 பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒருபக்கம் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றாலும் தற்போதைக்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டுவருகின்றன.

இளைஞர்கள், குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படாத நிலையில், பொது இடங்களில் நெரிசலைத் தவிர்த்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதும் முகக்கவசத்தை அணிவதும் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக்கொள்வதுமே தொற்றுப் பரவலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும். அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பும் இருந்தால்தான் கரோனாவை வெற்றிகொள்ள முடியும்.

SCROLL FOR NEXT