எல்லை இல்லை; பூசல்கள் ஆட்சியாளர்களிடம்தானே தவிர, மக்களிடம் அல்ல என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் பாகிஸ்தான் மக்கள், கீதா மூலம். பேச்சு மற்றும் கேட்புத் திறனற்ற இந்தியாவைச் சேர்ந்த இந்தச் சிறுமி தவறுதலாக எல்லை கடந்து பாகிஸ்தானுக்குச் சென்றவர். லாகூரில் ஏதுமறியாதவராக நின்றுகொண்டிருந்த கீதாவைக் கண்ட ‘எதி’ அறக்கட்டளையைச் சேர்ந்த குடும்பத்தினர், தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து, தங்கள் குழந்தையைப் போலவே வளர்த்துவந்திருக்கின்றனர். கீதாவுக்குக் காலில் விழும் வழக்கம் இருந்ததைக் கண்டு அவர் ஒரு இந்து என்பதை அறிந்துகொண்ட அந்தக் குடும்பத்தினர், கீதா அவருடைய கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு வாழவும் வழிபடவுமான ஏற்பாடுகளைச் செய்துதந்திருக்கின்றனர்.
அன்புக்கு ஊடகங்களில் கீதா தொடர்பான செய்திகள் வரத் தொடங்கியபோது, அவரை இந்தியா கூட்டிவர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அரசின் கவனத்துக்கு இது சென்றது. இந்தியா - பாகிஸ்தான் உறவு மோசமாக இருக்கும் சூழலிலும்கூட, இரு நாட்டு வெளியுறவு அமைச்சகங்களும் இந்த விஷயத்தில் காழ்ப்புணர்வின்றி பணியாற்றின. கீதாவை இந்தியா அழைத்துவரும் முயற்சி வெற்றிபெற்றது. இதுவரை நடந்த கதைகள் யாவும் வரவேற்புக்குரியவை. கீதாவை இந்தியாவுக்கு அழைத்துவருவது என்பது உறுதிசெய்யப்பட்ட உடனேயே என்ன செய்திருக்க வேண்டும்? அவர் தம்முடைய மகள் என்று உரிமை கோரிய குடும்பங்கள் முறையாக விசாரிக்கப்பட்டு, மரபணுப் பரிசோதனை மூலம் பெற்றோர் உறுதிசெய்யப்பட்டு, அதன் பின்னரே அவரை அழைத்து வந்திருக்க வேண்டும். அப்படி அழைத்து வந்த பின் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்ட செய்தியை ஒரு செய்திக் குறிப்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தால் போதுமானது.
ஆனால், நடந்தது என்ன? பெற்றோர் உறுதிசெய்யப்படாமலேயே அழைத்து வரப்பட்டார். பிரதமர் மோடி கீதாவைச் சந்தித்தார். ஊடகங்கள் இதை தேசிய அளவிலான ஒரு பரபரப்புச் செய்தியாக்கின. இப்போது 5 குடும்பங்கள் உரிமை கோரும் நிலையில், யார் பெற்றோர் என்று தெரியாமல் பரிதவிப்பில் இருக்கும் அந்தச் சிறுமி, இந்தூரில் அரசின் பாதுகாப்பில் ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். தனி மனித உணர்வுகளை எப்படிக் கையாள்வது என்பது அரசியல்வாதிகளுக்குத் தெரியாமல் போவது ஆச்சரியம் அல்ல; ஊடகங்களும் வரவர நுண்ணுணர்வை முற்றிலுமாக இழந்துவருவதுதான் வேதனை தருகிறது. எந்த அளவுக்கு ஊடகங்கள் பிரக்ஞையற்றுச் செயல்படுகின்றன என்பதற்குச் சின்ன உதாரணம் கீதாவிடம் சில நிருபர்கள் கேட்ட கேள்விகள்.
“உன்னுடைய வயது என்ன, என்னவெல்லாம் சாப்பிடுவாய்?” என்பதில் தொடங்கி “பாகிஸ்தானில் இருந்தபோது உன்னை மதம் மாற்றினார்களா?” என்பது வரை நீண்டிருக்கின்றன கேள்விகள்.
இந்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி எல்லை கடந்து காணாமல் போயிருக்கிறார் என்றால், அவரை மீட்டுத் தருவது அது நம் அரசு அமைப்புகளின் அடிப்படைக் கடமை; சாதனை அல்ல. பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் சாமானிய வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. தவிர, யாரிடம், எந்த மாதிரி சூழலில், எந்த மாதிரி மனநிலையில், எந்த மாதிரியான கேள்விகளை கேட்கிறோம் என்கிற பிரக்ஞைகூட இல்லையென்றால், நமக்கு சமூகத்தின் ஏனைய துறைகளின் சரி, தவறுகளைப் பேச என்ன தகுதி இருக்கும்?