தலையங்கம்

பெரும்பான்மையினவாதக் கூச்சல்!

செய்திப்பிரிவு

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்பதை ஒரு நெருக்கடியாக மாற்றிக்கொண்டு, பிரச்சாரம் என்ற பெயரில் வெறுப்புத் தீயைப் பொழிந்துகொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கும் அவருடைய முன்னணி தளகர்த்தர்களுக்கும் அவர்கள் நிலையை எப்படி, யார் உணர்த்தப்போகிறார்கள் என்றே தெரியவில்லை.

கிழக்கு சம்பரான் மாவட்டத்தின் ரவுசால் என்ற இடத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, “பிஹாரில் பாஜக அரசு அமையாவிட்டால் பாகிஸ்தானில் மகிழ்ச்சியுடன் பட்டாசுகள் வெடிக்கப்படும்” என்று கூறியிருக்கிறார். 2013-ல் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக இடையிலான கூட்டணி உடையும்வரை பிஹாரின் துணை முதல்வராகப் பதவி வகித்த சுசில் குமார் மோடியும் அமித் ஷா கூறியிருப்பதை அப்படியே வழிமொழிந்திருக்கிறார். “பாஜக வெற்றிபெற்றால் இந்தியாவில் தீபாவளி. லாலு - நிதீஷ் அமைத்துள்ள மகா கூட்டணி வெற்றிபெற்றால் பாகிஸ்தானில் கொண்டாட்டம்” என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் இப்படியெல்லாம் கருத்து தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது. அப்படியென்றால் லாலு - நிதிஷ் கூட்டணிக்கு வாக்களிப்பவர்கள் தேச விரோதிகளா? இந்தியாவுக்கு எதிரானவர்கள், விரோதிகள் என்று சுட்டிக்காட்ட சங்கப் பரிவாரங்கள் பயன்படுத்தும் மறைமுக வார்த்தை ‘பாகிஸ்தான்’ என்பது நாம் கேட்டுப் பழகியது. பாகிஸ்தான் கொண்டாடும் என்பதன் மூலம், வாக்களிக்கப்போகும் பிஹார் முஸ்லிம் வாக்காளர்களுக்கும் மறைமுக நெருக்குதலை ஏற்படுத்த முயல்கின்றனர். அதாவது, நீங்கள் இந்தியர்களாக இருந்தால், பாகிஸ்தான் மகிழும்படியான முடிவைத் தராதீர்கள் என்கின்றனர். பாஜகவின் கொள்கைகளை ஏற்காதவர்கள், ஒப்புக்கொள்ளாதவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் அல்லது அனுதாபிகள் என்பது அவர்கள் திணிக்கவரும் கருத்து.

2002 சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, ‘மியான் முஷாரஃப்’ என்று தன்னுடன் அனுசரித்துப்போகாதவர்களை அடிக்கடி இகழ்ச்சியாக விளித்துத்தான் பேசிவந்தார். அதற்குப் பிறகு, மோடி தன்னுடைய தோற்றத்தையும் பேச்சையும் மாற்றினார். 2014 மக்களவைப் பொதுத் தேர்தல் காலகட்டங்கள் முழுவதும் வளர்ச்சி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு ஆகியவையே அவரது முழக்கங்களாக இருந்தன. டெல்லி தேர்தல் தோல்விக்குப் பின் தொனி கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. இப்போது அதன் உச்சத்தை மீண்டும் பார்க்கிறோம்.

ஒரு பிரதமர், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சதவீதத்தை, மத அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தவர் பெறுவதை அனுமதிக்க மாட்டேன்; நிதிஷும் லாலுவும் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்காகக் குரல்கொடுத்தவர்கள்” என்றெல்லாம் சமூகத்தின் ஒரு பகுதியினர் மீது மற்றொரு பிரிவினர் வெறுப்பு கொள்ளும் வகையில் பேசுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டும் அல்ல; அந்தப் பதவியையே கொச்சைப்படுத்துவதும் ஆகும். பிரதமரே இப்படிப் பேசுபவராக இருந்தால், அவருடைய சகாக்கள் என்ன செய்வார்கள், அவர்களுக்குக் கீழே இருப்பவர்கள் என்ன செய்வார்கள்? காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அதே சமயம், இந்தப் பேச்சுகள் எல்லாம் திடீரென வெற்றிடத்தில் உருவானதல்ல என்பதை நாம் உணர வேண்டும். இவையெல்லாம் தேர்தல் பிரச்சார வேகத்தில், வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காகப் பேசப்படும் சூடான வாக்கியங்களும் அல்ல. தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்று கண்டனக் குறிப்பைப் பெறுவதோடு இவை ஓய்ந்தும்விடாது என்பதை மனதில்கொள்ள வேண்டும்.

பெரும்பான்மையினவாதத்தின் வெளிப்பாடு இது. இதை எல்லாத் தளங்களிலும் முழு வீச்சோடு எதிர்த்து முறியடிக்க வேண்டும்!

SCROLL FOR NEXT