தலையங்கம்

ஓடிடி தளங்களுக்கான சுய ஒழுங்குமுறை விதிகளே படைப்புணர்வுக்கு வாய்ப்பளிக்கும்

செய்திப்பிரிவு

இந்தியாவில் இணையவழி ‘ஓவர்-த-டாப்’ (ஓடிடி) ஒளிபரப்புச் சேவைகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்திருப்பதாக ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அறிவித்ததையடுத்து, அத்துறையைச் சேர்ந்தவர்களே பிப்ரவரி 10 முதலாக சுய ஒழுங்குமுறை விதிகளின்படி செயல்பட ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்க முடிவு. ஓடிடி இணையதளங்களின் வளர்ச்சியானது திரைப்பட உருவாக்கத்தில் படைப்புத் திறனை வளர்த்தெடுத்திருக்கிறது. திரைப்படங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் ஆவணப்படங்கள் ஆகியவற்றை வெளியிடும் ஓடிடி முயற்சிகளுக்குப் பெருந்தொற்றுக் காலத்தில் சந்தா வருமானங்கள் குவிந்தபோது, திரையரங்குகள் அனைத்தும் மூடிக் கிடந்தன. திரைப்படங்களை இணையத்தில் முதலில் வெளியிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளும் உடைந்து நொறுங்கின.

படைப்புச் சுதந்திரத்துக்கும் எல்லை மீறலுக்கும் இடையிலான கோட்டை எப்படிக் கையாள்வது என்பதில் மாநில அரசுகள் குழம்புகின்றன. அமேஸான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியான தொடர் ஒன்று கடவுளைச் சித்தரித்த விதம் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று கூறி, இணையவழிப் பயங்கரவாதம், ஆபாசம், சமூகத்தினரிடையே பகையுணர்வை வளர்த்தெடுத்தல், வழிபாட்டிடங்களைக் களங்கப்படுத்துதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் உத்தர பிரதேச அரசு முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தது. அதே இணையத் தொடர் குறித்து மத்திய பிரதேசத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், ஓடிடி இணையதளங்களைத் தணிக்கைச் சட்டங்களுக்குக் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவானது, அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குக் கடுமையான சூழல் உருவாகிவருவதையே எடுத்துக்காட்டுகிறது. அதாவது, திட்டமிட்ட நோக்கில் எல்லை மீறும் படங்களுக்கு எதிராகவும், படைப்பாற்றல் பல்கிப் பெருகுவதற்கான புதிய வாய்ப்புகளை அனுமதிக்கும் வகையிலும் ஒன்றிய அரசே உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரமிது என்பது புலனாகிறது.

சுய ஒழுங்குமுறை விதிகள் தொடர்பில் இந்திய இணைய மற்றும் செல்பேசிச் சங்கத்தைச் சேர்ந்த ஓடிடி இணையதளச் சேவைகள் இணைந்து எடுத்துள்ள கூட்டு முயற்சியானது இந்திய தண்டனைச் சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான சட்டங்கள், பதிப்புரிமை மற்றும் வயது வந்தவர்களுக்கான அல்லது அவர்களின் அனுமதியுடன் பார்ப்பதற்கான உள்ளடக்கம் என்ற சான்றிதழ் ஆகியவற்றுக்கு இணக்கமாக உள்ளது. இந்தச் சுயமான ஒழுங்குமுறை விதிகள், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் 2016-ல் ஷ்யாம் பெனகல் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளன.

அரசால் நியமிக்கப்பட்டவர்களால் முன்கூட்டியே தணிக்கை செய்யும் முறையானது முன்தீர்மானங்களின் அடிப்படையிலேயே பெரும்பாலும் அமைந்துள்ளது. எண்ணற்ற சட்டங்கள் நடைமுறையில் இருக்கிற நிலையில், ஒரு புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்போது அத்தகைய சட்ட மீறலானது கடுமையான வகையில் அமைந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். திரைப்படங்களையும் ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் வகையிலான அணுகுமுறை, கலை உணர்வுக்கு மாறாக அனுமதிக்கப்பட்ட பிரச்சாரங்கள் பெருகுவதற்கு மட்டுமே வாய்ப்பளிக்கும். அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT