சமீபத்தில் திறக்கப்பட்ட கேரள அரசுப் பள்ளிகள் இரண்டில் ஆசிரியர், மாணவர்களிடையே பெரும் எண்ணிக்கையில் பரவியிருக்கும் கரோனா தொற்று தமிழகப் பள்ளி, கல்லூரிகளுக்கும் ஓர் எச்சரிக்கையாகக் கொள்ளப்பட வேண்டும். பெருந்தொற்றால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசும் மக்களும் இணைந்து அதை மீட்டெடுக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அதே அளவுக்குத் தொற்றுப் பரவல் குறித்த தொடர் கவனமும் தீவிரக் கண்காணிப்பும் அவசியம். குறிப்பாக, நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றுகூடிப் படிக்கும் கல்வி நிறுவனங்களில், நிலையான கண்காணிப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். கேரள அனுபவம் நமக்கு அதையே உணர்த்துகிறது.
கேரளத்தின் பொன்னானி, மாரன்சேரி ஆகிய ஊர்களின் அரசுப் பள்ளிகளில் இதுவரை 170 மாணவர்களுக்கும் 70 ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாரன்சேரி அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்குத் தொற்று உறுதியானதையடுத்து, அவரது வகுப்பைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாகப் பரிசோதனை நடத்தப்பட்டு தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக்கூடங்களில் தொற்றுப் பரவல் குறித்துத் தொடர் கண்காணிப்புக்கான நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளி நிர்வாகங்கள் ஒவ்வொரு நாளும் பள்ளிக் கல்வித் துறைக்கும் பொதுச் சுகாதாரத் துறைக்கும் அறிக்கைகளை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே கேரளத்திலும் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பே அங்கு கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் முறையாக அறிவுறுத்தப்பட்டிருந்தன. அதன்படி, ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளி வளாகத்துக்குள் முகக் கவசம் அணிவதும் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திக்கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டிருந்தன. உடல் வெப்பநிலையை அறிந்துகொண்ட பிறகே அவர்கள் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில், தனிமனித இடைவெளியும் ஒன்றாக இருந்தது. பள்ளிக்கூடங்களில் ஆசிரியர், மாணவர்களிடம் அதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல என்பதே எதார்த்தம். அதன் விளைவுகளோ நம்மைப் பெருஞ்சிக்கலுக்கு ஆளாக்கிவிடக்கூடியவை.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், பொதுத் தேர்வுகளைச் சந்திக்கவிருக்கும் 10, 12 மாணவர்களுக்காக மட்டும் ஜனவரி 19-ல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. பிப்ரவரி 8 முதல் 9,11 வகுப்புகளும் தொடங்கியுள்ளன. தவிர, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் கல்லூரிகளும் மாணவர் விடுதிகளும் திறக்கப்பட்டுள்ளன. வகுப்பறை ஒன்றுக்கு 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தாலும் அதற்கான ஆசிரியர்-மாணவர் விகிதத்தை இன்னும் நாம் எட்டவில்லை என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.