தலையங்கம்

கை குலுக்குவோம் கனடாவுக்கு!

செய்திப்பிரிவு

கனடா நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள லிபரல் கட்சியின் இளம் தலைவர் ஜஸ்டின் ட்ரூடு உலகின் கவனத்தை ஈர்ப்பவராக மாறியிருக்கிறார்.

மொத்தம் 338 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடுவின் லிபரல் கட்சிக்கு 184 இடங்கள் கிடைத்திருக்கின்றன. தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சிக்கு 99 இடங்கள் கிடைத்துள்ளன. மற்றொரு முக்கியக் கட்சியான லிபரல் டெமாக்ரட்ஸ் என்கிற இடதுசாரிக் கட்சிக்கு 44 தொகுதிகள் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெறும் என்பது முன்னரே கணிக்கப்பட்டிருந்தாலும், இந்த அளவுக்குத் தெளிவாக, அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. 2011 பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி படுமோசமான தோல்வியைச் சந்தித்த பிறகு, ஜஸ்டின் ட்ரூடு கட்சித் தலைவர் பதவியில் அமர்ந்தார்.

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஸ்டீபன் ஹார்ப்பர் ஆட்சியின் தொடக்கக் காலம், அவருடைய பொருளாதார நிர்வாகத்துக்காகப் பாராட்டப்பட்டது. போகப்போக ஆட்சி நீர்த்துப்போனது. அரசின் செலவைக் கட்டுப்படுத்துகிறேன் என்று கூறிக்கொண்டு, பொதுமக்களின் நன்மைகளுக்கான நலத் திட்டங்களில் கை வைத்தார். அதனால், மக்களிடையே அதிருப்தி அதிகரித்தது. அது மட்டுமல்லாமல் மத விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு சிறுபான்மை மக்களுடைய அதிருப்தியையும் வெறுப்பையும் சம்பாதித்தார். அவரை ஆதரித்த நடுத்தர வகுப்பினரே அவருடைய செயல்களால் அதிருப்தியுற்றனர். ஹார்ப்பரின் ஆதரவாளர்கள் இந்தப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் தேர்தலில் அதிகம் பேசவில்லை. மக்களுடைய கவனம் அவற்றில் திரும்பிவிடாமல் இருக்க, “எதிர்த்து நிற்கும் ஜஸ்டின் ட்ரூடு இளையவர், அரசியல் அனுபவம் இல்லாதவர், அவருக்கு வாக்களித்தால் வாரிசு அரசியலுக்கு நடைபாவாடை விரித்ததாக அர்த்தம்” என்றெல்லாம் அரசியலற்ற விஷயங்களைப் பிதற்றினர்.

ஜஸ்டின் ட்ரூடு இளையவர் என்றாலும், விவேகமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். முக்கியமாக, தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடக்கும் என்று பேசினார். கனடா இழந்த மாண்பை மீட்பேன், மக்களுக்கு வலுவான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டுவருவேன் என்றார். மகளிர் நலனில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படையாகப் பேசினார். கடுமையான சட்டங்கள் ரத்துசெய்யப்படும் என்று உறுதியளித்தார். மக்களை ஆக்கபூர்வப் பிரச்சாரங்கள் ஈர்த்தன. ஒருகட்டத்தில் கன்சர்வேடிவ்காரர்கள் தங்களுடைய பிரச்சார உத்தியைத் தனிப்பட்ட தாக்குதலாக மாற்றினர். “இவர் பியரி எலியட் ட்ரூடுவின் மகன், வாரிசு அரசியலுக்கு வாக்களிக்காதீர்கள்” என்றனர். முன்னாள் பிரதமரான பியரி எலியட் ட்ரூடு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்தவர் என்பதோடு, நல்லாட்சியும் கொடுத்தவர் என்பதால் அந்தப் பிரச்சாரமும் எடுபடாமல் போனது. வெற்றி ஜஸ்டின் ட்ரூடுவைத் தேடி வந்தது.

ஆட்சியில் அமர்ந்த ஜஸ்டின் ட்ரூடு தன்னுடைய அமைச்சரவையில் சரிபாதியைப் பெண்களுக்கு ஒதுக்கியிருக்கிறார். மேலும், சிறுபான்மைச் சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுத்திருக்கிறார். பெரும்பாலான இலாகாக்கள் அந்தத் துறையோடு ஈடுபாடுள்ளவர்களாகப் பார்த்து ஒதுக்கியிருக்கிறார். இப்போது கனடா மக்களிடையே ஏராளமான எதிர்பார்ப்புகள் உருவாகிவிட்டன. கனடா பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்டுவதுடன் நாட்டு மக்களிடையே அதிகரித்துவரும் ஏற்றத் தாழ்வுகளைப் போக்க வேண்டிய முக்கியமான கடமையும் ஜஸ்டின் ட்ரூடுவுக்கு இருக்கிறது. தேவையற்ற தலையீடுகளிலிருந்து கனடாவின் கவனத்தைத் திருப்பி, எல்லோருக்குமான வளர்ச்சி நோக்கி சுக்கான் திருப்பப்படும் என்று ஜஸ்டின் ட்ரூடு கூறியிருக்கிறார். நல்லது நடக்கட்டும்!

SCROLL FOR NEXT