ஒன்றிய அரசின் நிதி நல்கையின் கீழ் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துப் போக்குவரத்துச் சேவைகளை விரிவுபடுத்துவதற்கு 2021-2022 நிதிநிலை அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவமானது, நகர்மயமாதலின் முக்கிய அம்சமாகப் போக்குவரத்துச் சேவை ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. வசதியானதும் பாதுகாப்பானதும் கட்டணம் குறைவானதுமான போக்குவரத்துச் சேவையானது பொருளாதார வளர்ச்சியை மட்டுமின்றி, பொதுச் சுகாதாரத்தையும் ஊக்குவிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்று.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பில் கொச்சி, சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களின் மெட்ரோ திட்டங்களுக்கு முறையே ரூ.1,957 கோடி, ரூ.63,246 கோடி மற்றும் ரூ.14,788 கோடி ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி நல்கைகள் பெருநகரங்கள் தங்களது இலக்குகளை அடைவதற்கு நிச்சயம் உதவியாக இருக்கும். பொதுப் பயணச் சீட்டுகளை அறிமுகப்படுத்துவது பேருந்து, ரயில் மற்றும் பிற போக்குவரத்து இணைப்பு வசதிகளைத் தடையின்றிப் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும். ஆனால், குறைந்த கட்டணத்தை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் கட்டணமானது, அடித்தட்டு மக்களை வெளியிலேயே நிறுத்துவதாக அமைந்திருப்பது மோசமான நிர்வாக உதாரணம். அரசு - தனியார் பங்கேற்பின் கீழ் பொதுப் போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள ரூ.18,000 கோடி திட்டத்தின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது சந்தேகம் தருகிறது. இத்திட்டத்தின் கீழ் தனியார் 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு நிதியளிப்பைப் பெறுவார்கள்; பேருந்துகளை வாங்கவும் இயக்கவும் பராமரிக்கவும் வாய்ப்பினைப் பெறுவார்கள். மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பேருந்துகளின் எண்ணிக்கை ஆயிரம் பேருக்கு 1.2 என்ற அளவில் குறைவாகவே இருக்கிறது.
இதுவே தாய்லாந்தில் 1,000 பேருக்கு 8.6 பேருந்துகளும் தென்ஆப்பிரிக்காவில் 6.5 பேருந்துகளும் இருக்கின்றன. கர்நாடகம் போன்ற ஒருசில மாநிலங்கள் மட்டும் தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமான பேருந்துகளைப் பெற்றிருக்கின்றன என்பதை ‘நிதி ஆயோக்’ தரவுகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. நகர்ப்புறப் பேருந்துப் போக்குவரத்தில் தனியாருக்கு உரிமம் அளிக்கப்பட்டிருப்பது பெரும்பாலான மாநிலங்களில் அரசியல்ரீதியாகப் பெரும் பிரச்சினையாகவே இருக்கிறது. சில மாநிலங்களில் பொதுத் துறையின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுப் போக்குவரத்தும் ஒழுங்குபடுத்தப்படாததாக அமைந்துள்ளது. ஆக, விரிவான ஆய்வுகளும் சீர்திருத்தங்களும் தேவைப்படுகின்றன.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டமானது இவ்விஷயத்தில் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் அளிக்கிறது; மாநிலங்களிடமும் உள்ளாட்சிகளிடமும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய அதிகாரம் இது. செயல்திட்டத்தை ஆலோசனை கலந்து ஒன்றிய அரசு வகுக்கலாம். ஒன்றிய, மாநில, உள்ளாட்சி நிர்வாகங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு மட்டுமே அனைவரையும் உள்ளடக்கிய நகர்மயமாதலுக்கான போக்குவரத்துக் கட்டமைப்பைக் கொண்டுவரும்.