மியான்மரில் பத்தாண்டுகளாக ஏற்பட்டுவந்த ஜனநாயக முன்னேற்றங்களை ஒரே நகர்வில் துடைத்தெறியும் வண்ணம் அந்நாட்டின் ராணுவமானது ஆட்சிக் கவிழ்ப்பு செய்திருப்பது ஜனநாயகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதிபர் வின் மியின்ட், அரசின் ஆலோசகர் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களைக் கைதுசெய்து, ராணுவ ஆட்சியையும் ஓராண்டுக்கு நெருக்கடி நிலையையும் தளபதி மின் ஆங் ஹிலாய்ங் அறிவித்துள்ளார். நவம்பரில் மியான்மரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றன என்று ராணுவம் கூறிவந்தது; சூச்சியின் என்.எல்.டி. கட்சி பெற்ற பெருவெற்றியையும் ராணுவத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவையெல்லாம்தான் ராணுவ ஆட்சி அமலானதற்கு உடனடிக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
ராணுவத்தின் ஆதரவு பெற்ற ‘யூனியன் சாலிடாரிட்டி அண்டு டெவலெப்மென்ட் பார்ட்டி’யின் பலம் இந்தத் தேர்தலால் நாடாளுமன்றத்தில் வெகுவாகக் குறைந்தது. நாடாளுமன்றத்தில் நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கொண்டிருப்பதும், பாதுகாப்புத் துறை, எல்லைப்புறத் துறை, உள்துறை போன்ற முக்கியமான அமைச்சகங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ராணுவமானது என்.எல்.டி. அரசு தன் செல்வாக்கை அதிகரித்துக்கொள்வதற்கு முன்பு அதனைக் கவிழ்த்துவிட வேண்டுமென்று நினைத்தது. தளபதி ஹிலாய்ங் இந்த ஆண்டில் ஓய்வுபெற வேண்டியவர். ஆகவே, இந்த ஆட்சிக் கவிழ்ப்பை அவர் தனது அதிகாரத்தின் காலத்தை நீட்டித்துக்கொள்வதற்கான நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது. அமெரிக்கா இந்த விஷயத்தில் தலையிடுவதற்கு முன்பே மியான்மரின் ஜனநாயகத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சீன ஆதரவு பெற்ற ராணுவம் துணிந்திருக்கலாம். ராணுவ ஆட்சிக்கு ஆங் சான் சூச்சிக்கும் சிறிதளவு பங்கிருக்கிறது. ஏனெனில், 2015-ல் அதிகாரத்துக்கு வந்த அவர், தன் நாட்டில் வலுவான ஜனநாயகக் கட்டமைப்பை ஏற்படுத்தத் தவறிவிட்டார். அரசு, ராணுவம் என்ற இரட்டை அதிகார முறையை அவர் ஏற்றுக்கொண்டார். சூச்சி தன் கட்சிக்குள்ளும் ஜனநாயகத்தைக் கொண்டுவரத் தவறிவிட்டார். 2016-17 காலகட்டத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் வன்முறை நிகழ்த்தியபோது, அதனை சூச்சி கட்டுப்படுத்தவும் கண்டிக்கவும் தவறிவிட்டார். சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற சூச்சி இதனால் சர்வதேசத்தின் ஆதரவை இழந்தார்.
மியான்மர் மீது விதிக்கப்பட்ட பல்வேறு தடைகளுக்குப் பிறகு அங்கே அமைதி நிலவ வேண்டும் என்று சர்வதேசச் சமூகம் மேற்கொண்ட முயற்சிகளுக்கெல்லாம் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியா இதுவரை எச்சரிக்கையான அணுகுமுறையையே மியான்மர் விஷயத்தில் கடைப்பிடித்துவந்திருக்கிறது. சூச்சியின் ஜனநாயக நடைமுறைகளுக்கு ஆதரவு தெரிவித்துவந்த அதே வேளையில், வடகிழக்கு மாநிலங்கள் விஷயத்தில் இந்தியா மியான்மரின் ராணுவத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தே வந்திருக்கிறது. ஆனால், மியான்மரின் அடிப்படைக் கட்டுமானங்கள், வளங்கள் ஆகியவற்றின் மீது சீனா கொண்டிருக்கும் ஏகபோகத்தை இந்தியா எதிர்த்துவந்திருக்கிறது. அப்படிப்பட்ட இந்தியாவுக்குத் தற்போதைய ஆட்சிக் கவிழ்ப்பு சாதகமான ஒன்று அல்ல. எது எப்படி இருப்பினும் அண்டை நாடான மியான்மரில் தற்போது நடந்துவரும் தலைகீழ் மாற்றங்கள் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட பேரிடி என்றுதான் சொல்ல வேண்டும்.