பெருந்தொற்றுக் காலத்திலும் வழக்கமான சமயங்களில் நடத்துவதற்குச் சற்றும் குறைவில்லாத குடியரசு தின அணிவகுப்பை நடத்தி முடித்த இந்தியாவுக்கு, அதே நாளில் தலைநகரில் நடந்த வன்முறையானது தேசிய அவமானம் என்று சொல்வது எல்லா வகையிலுமே பொருத்தமானது ஆகும். அமெரிக்காவின் ‘கேபிடல்’ வளாகத்தை வன்முறையாளர் ஆக்கிரமித்ததோடு, டெல்லி செங்கோட்டை வளாகத்தை வன்முறையாளர்கள் ஆக்கிரமித்தது இணைத்துப் பார்க்கப்படுவது இயல்பானது. தேசியக் கொடிக்கு அருகே வன்முறையாளர்களால் ஒரு குறிப்பிட்ட மதத்தோடு தொடர்புடைய கொடி பறக்கவிடப்பட்டது தேசியக் கொடிக்கு நேரிட்ட அவமானம் என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடி மிகச் சரியாகவே தேசம் இதனால் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். நாட்டுக்கு உணவு அளிக்கும் விவசாயிகளின் போராட்டம் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்வதும், இந்தப் போராட்டத்தின் ஊடாகவே அறுபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருப்பதும், விவகாரம் மேலும் மேலும் வளர்ந்துகொண்டேயிருப்பதும் எல்லாமே அவமானங்கள்தான், துயரங்கள்தான்!
வேளாண் சட்டங்களின் சரி – தவறுகளையும், விவசாயிகளின் போராட்டத்தையும் எப்படிப் பிரித்துப் பார்க்கிறோமோ அதேபோல, குடியரசு நாள் அன்று நடந்த வன்முறையையும் பிரித்துப் பார்ப்பது அவசியமானது. மூர்க்கமான வன்முறையும் கலவரமும் எல்லா வகையிலும் வெறுக்கத்தக்கவையும் கண்டிக்கத்தக்கவையும் ஆகும். முன்னதாக அரசோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட பாதைகளை மீறி டிராக்டர் பேரணியைத் திசைதிருப்பி அத்துமீறியதோடு, தடிகள், வாள்கள், இரும்புக் கம்பிகளோடு காவல் துறையினரோடு மோதலில் இறங்கிய அவர்களை விவசாயிகள் என்றோ, போராட்டக்காரர்கள் என்றோ வரையறுக்கவே முடியாது; குண்டர்கள் – வன்முறையாளர்கள் என்றே அவர்களைக் குறிப்பிட வேண்டும்; முந்நூறுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயமுற்றனர் என்பது நடந்த வன்முறையின் அளவைச் சொல்லும்.
வன்முறைகள் கட்டவிழ்ந்தபோது அதுவரை காட்சியில் இருந்த விவசாயிகள் சங்கத் தலைவர்கள் போன இடமே தெரியவில்லை. வன்முறையைத் தூண்டிவிடும் சக்திகள் விவசாயிகளின் அணிவகுப்பில் ஊடுருவியிருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும் நடந்த கலவரங்களுக்குத் தாங்கள் காரணமில்லை என்று விவசாயிகளின் தலைவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது. தனிநபர்களையும் வெவ்வேறு அமைப்புகளையும் தனக்குக் கீழே கொண்டிருந்த போராட்டத்தின் தலைமையானது இது போன்ற கூட்டத்தை எந்த அளவுக்குச் சமாளிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும் என்பதை நடைமுறை அடிப்படையில் மதிப்பிட்டிருக்க வேண்டும். இந்த அணிவகுப்பு, வன்முறை எல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியதே. இந்த வன்முறைக்குக் காரணமான தனிநபர்களையும் குழுக்களையும் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையைக் காவல் துறை எடுக்க வேண்டும்; இதற்கு விவசாய சங்கத் தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும். அதுவே நடந்த வன்முறைக்கான அவர்களுடைய பரிகாரமாக அமையும்.
விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் போராட்டக்காரர்களுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். மக்களில் ஒரு தரப்பினரே இன்னொரு தரப்பினருக்கு எதிராகத் திரள அனுமதிப்பது, ஒடுக்குமுறை வழியைக் கையில் எடுப்பது இவையெல்லாம் தீர்வாகா. இந்தப் போராட்டச் சூழல் இழுத்தடிக்கப்படுவதானது எவருக்கும் நல்லதல்ல; நாட்டு மக்கள் எவருமே அதை விரும்பவில்லை என்பதை இரு தரப்பினருமே உணர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். தீவிர நிலைப்பாடுகள் உதவாது என்பதை விவசாயிகள் சங்கத் தரப்பு உணரும் அதேசமயம், மேலாதிக்கப் போக்கு உதவாது என்பதை ஒன்றிய அரசும் உணர்ந்து சுமுகத் தீர்வை நோக்கி நகர வேண்டும்.