சமீபத்திய வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய தேர்தல் மற்றும் அதிபர் பொறுப்பு மாற்றங்களுக்குப் பிறகு, 46-வது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டிருப்பது அமெரிக்கர்களிடையேயும் உலக அரசியல் நோக்கர்களிடையேயும் ஆசுவாசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள் நடந்த அத்துமீறலும் தாக்குதல்களும் ஆழமான பிளவையும் வெறுப்பையும் ஏற்படுத்திவிட்டன. இவற்றின் விளைவாக, பன்முகக் கலாச்சாரங்களைக் கொண்ட அமெரிக்காவின் பிரதானக் கொண்டாட்டங்களில் ஒன்றான அதிபரின் பதவியேற்பு விழா வழக்கத்தைக் காட்டிலும் சற்றே எளிமையாகத்தான் நடந்து முடிந்திருக்கிறது. இந்திய-ஆப்பிரிக்க வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகப் பதவியேற்றுக்கொண்டது உலகமே அந்நாட்டை உற்றுப்பார்க்க வைத்திருக்கிறது.
பைடனின் பதவியேற்பு விழாவில் அவருக்கு முந்தைய அதிபரான டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்க வரலாற்றில், பதவியிலிலிருந்து விடைபெறும் அதிபர், புதிய அதிபர் பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருப்பது இது நான்காவது தடவை. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்துவைத்த இந்த நிகழ்வில், முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பைடனின் பதவியேற்பு விழா உரையானது சமூக ஒருங்கிணைப்புக்கு வழிகோலுவதாக அமைந்திருந்தது. அமெரிக்கர்கள் அனைவரும் தாங்கள் எதிர்கொண்டுவரும் ‘கோபம், மனக்கசப்பு, வெறுப்பு, பயங்கரவாதம், சட்டவிரோதம், வன்முறை, நோய், வேலைவாய்ப்பின்மை, நம்பிக்கையின்மை’ ஆகிய அனைத்து வகையான தீங்குகளுக்கும் எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். முன்னுதாரணத் தலைமையை வழங்கவிருப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் உலகுக்கு அறிவித்துள்ளார்.
பாரிஸ் உடன்படிக்கையிலிருந்தும் உலகச் சுகாதார அமைப்பிலிருந்து விலகும் முடிவை ரத்துசெய்வது, மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் குடிமக்கள் அல்லாதோரையும் உள்ளடக்குவது, நாடுகடத்தப்படுவதற்கான அச்சுறுத்தலின் நடுவே அமெரிக்காவில் குடியேறுபவர்களைப் பாதுகாப்பது, மெக்ஸிகர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கான தடையை ரத்துசெய்ததுடன் தெற்கெல்லையில் கட்டப்பட்டுவந்த எல்லைச் சுவர் கட்டுமானங்களை நிறுத்திவைத்தது, இஸ்லாமிய நாட்டினர் அமெரிக்காவில் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை முடிவுக்குக் கொண்டுவந்தது என்று பதவியேற்றுக்கொண்ட முதல் நாளிலேயே 17 நிர்வாக ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பிறப்பித்ததன் மூலமாக அதிகார அளவில் மட்டுமின்றி அரசியல்ரீதியாகவும் தமது உள்ளக்கிடக்கையை பைடன் வெளிப்படுத்தியுள்ளார். பைடனின் உறுதிமிக்க இந்த நடவடிக்கைகள், ஜனநாயகர்களின் மனக்காயங்களை ஆற்றும் மருந்தாக அமையக்கூடும். எனினும், ட்ரம்பை அகற்றுவதற்கான அவரது முயற்சியில், 7.4 கோடி வாக்காளர்கள் ட்ரம்புக்கு ஆதரவாகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதையும் பைடன் மறந்துவிடக் கூடாது.
இப்போது வெள்ளை மாளிகை, செனட், மக்கள் பிரதிநிதிகள் சபை என அனைத்தும் ஜனநாயகக் கட்சியின் பிடியில் உறுதியாக வந்துவிட்டது. அதற்காக இரு கட்சிகளுக்கு இடையிலான நல்லுறவைக் கைவிட்டுவிடக் கூடாது. தவறும்பட்சத்தில், தான் உருவாக்க நினைக்கும் மிகச் சிறந்த ஒன்றியத்தை அடைவதற்கான பைடனின் தேடல் தாமதமாகிவிடக்கூடும்.