ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ள அனுமதியளித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கை தீர்மானகரமாக ரஜினி தன்னுடைய அரசியல் அபிலாஷைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதைச் சுட்டுவதாக அமைந்திருக்கிறது. முன்னதாக, தன்னுடைய உடல்நிலையைச் சுட்டிக்காட்டி அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்த ரஜினியினுடைய நிலைப்பாட்டின் தொடர்ச்சியாக இதைக் கருதலாம். இது தொடர்பில் பெரிய விமர்சனங்கள் தேவை இல்லை என்று கருதியதுபோல பொதுவாக எல்லாத் தரப்பினராலும் ரஜினியின் முடிவு வரவேற்கப்பட்டதானது, அவருடைய கலைப் பங்களிப்பின் மீது இந்தச் சமூகம் கொண்டிருக்கும் மதிப்பு, அவருடைய உடல்நலன் மீது கொண்டிருக்கும் அக்கறையின் வெளிப்பாடு என்றே சொல்ல வேண்டும். அதேசமயம், இந்த முடிவிலேனும் ரஜினி உறுதியாக இருப்பதே அவரை நம்பிப் பின்தொடரும் ரசிகர்களுக்கு அவர் அளிக்கும் குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும் என்பதும் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
அரசியலில் ஈடுபடும் ஆசை தோன்றுவது பெருவாரி மக்கள் செல்வாக்கைப் பெற்ற எவருக்கும் இயல்பானது. ஆனால், ‘நானும் அரசியலுக்கு வருகிறேன்; என்னால் ஆனதைச் செய்கிறேன்’ என்று சொன்னவர் அல்ல ரஜினிகாந்த். ஒட்டுமொத்த அமைப்பும் கோளாறு; இன்றைக்கு அரசியலிலுள்ள அனைவருமே கோளாறானவர்கள் என்ற பொருள்படப் பேசியவர். ஒட்டுமொத்த அமைப்பையுமே மாற்றப்போவதாகச் சூளுரைத்தவர். தீவிர உடல்நலக் கோளாறுகளால் அவர் பாதிக்கப்பட்டதும், சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதும் சமீபத்தில் நடந்தவை அல்ல. இன்னும் சொல்லப்போனால், கரோனா அலை உச்சம் தொட்டு வடியலான பிறகே அரசியலுக்கு நிச்சயம் வருகிறேன் என்பதை அவர் அறிவித்தார். அதுவரை பொதுவெளியில் காணாமலே இருந்தார். நிஜமான அரசியலை நோக்கி அவர் காலடி எடுத்து வைக்க முற்படும்போது, அங்கே அரசியல் மிக அடிப்படையான ஒரு விலையைக் கேட்கிறது.
சுயஅறுப்புதான் அது. எங்கோ சுயத்தை அறுத்துக்கொண்டு பொதுவாழ்வில் அதைப் பணயம் வைப்பதன் வாயிலாகவே ஒருவர் அரசியலில் கால் பதிக்க முடியும். அரசியலில் இயங்கும் ஒருவரைப் பற்றி மோசமான பல விமர்சனங்கள்கூட இருக்கலாம். ஆனால், மக்களிடமிருந்தும் பொதுச் சமூகத்திலிருந்தும் முற்றிலும் தனித்து இயங்கலாம் என்ற எண்ணம் கொண்ட ஒருவர் அரசியல் களத்தில் உயிரோட்டத்தோடு இயங்க முடியாது. தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டால் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் மட்டும் எத்தனை மக்கள் செயல்பாட்டாளர்களை நாம் இழந்திருக்கிறோம்! விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, தான் நேசிக்கும் மண்ணுக்கும் சமூகத்துக்கும் உரமாக மாற உறுதிகொள்வது அது. எல்லோருக்கும் அது கட்டாயம் இல்லை. அரசியலர்களுக்கு அது அவசியம். அதனால்தான் அவர்கள் ‘தலைவர்’ ஆகிறார்கள்.
ரஜினியின் முடிவு அவருடைய பல லட்சம் ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருப்பது இயல்பானது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் தன்னுடைய சினிமாக்கள் வழி அவர்களை இந்த இடம் நோக்கி அழைத்து வந்தவர் ரஜினி. அரசியலுக்கு சினிமாவைப் பயன்படுத்திக்கொள்பவராக அல்லாமல், சினிமாவுக்கு அரசியலைப் பயன்படுத்திக்கொள்பவராக இருக்கிறார் என்ற விமர்சனம் ரஜினி மீது பல்லாண்டு காலமாக உண்டு. நிச்சயமாக அவர் பலருடைய வாழ்க்கைக் கனவுகளில் விளையாடியிருக்கிறார். அரசியலுக்கு வருவதில்லை என்ற முடிவை ரஜினி மறுபரிசீலிக்க வேண்டும் என்று போராட்டத்தில் உட்கார்ந்த ரசிகர்களிடமிருந்து வெளிப்பட்ட புலம்பலும் விரக்தியும் கண்ணீரும் அதன் வெளிப்பாடுகள். இனியும் அவர்களை ஏமாற்றும் விளையாட்டை ரஜினி நடத்தக் கூடாது. ஒருவகையில் ரஜினி சுதாரித்திருக்கிறார். ஒரே பாடலில் கட்சி தொடங்கி, பிரச்சாரம் முடித்து, ஆட்சியைப் பிடிப்பது எல்லாம் சினிமாவில் ஜோராக நடக்கலாம். நிஜத்திலும் அப்படி நம்பிக் காலை வைப்பது ஆளைச் சுருட்டிக் குழிக்குள் இழுத்துவிடும். வாழும் காலத்தின் மாபெரும் கலைஞர்களில் ஒருவர் என்ற இடத்தில் ரஜினி இருக்கிறார். அந்த இடமே மகத்தானதுதான். அதேசமயம், பலர் தன்னைப் பின்பற்றத்தக்க ஓரிடத்தில் இருப்பவர் தன்னுடைய சொற்களுக்கு உரிய பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டிருக்க வேண்டும்.