தென்னிந்திய சிமென்ட் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.ஸ்ரீனிவாசன் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம், வீடு கட்டுமானத் தொழில் நிறுவனங்கள் தங்களைச் சுய பரிசீலனைக்கு உட்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. கட்டுமான நிறுவனங்கள், வீடுகளின் விலையை அதிகமாக நிர்ணயிப்பதற்குப் பெரும்பாலும் சிமென்ட் விலையேற்றத்தைக் காரணமாகச் சொல்கின்றன என்றும் உண்மையில் வீட்டின் விலையில் சிமென்ட் செலவு 2% வரை மட்டுமே என்றும் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். வீட்டுமனையின் விலை சதுர அடி ரூ.4,200 என்றால்,கட்டுமானச் செலவு சதுர அடிக்கு ரூ.2,000-2,500 வரை மட்டுமே; கட்டுமான நிறுவனங்களோ ரூ.15,000 தொடங்கி ரூ.20,000 வரையில் விலை நிர்ணயிக்கின்றன என்று அவர் விளக்கம் அளித்திருக்கிறார். கட்டுமான நிறுவனங்களின் வலுவான கூட்டமைப்பு காரணமாக வீடுகளுக்கு அதிக விலையை நிர்ணயிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ள அவர், அதற்கு முடிவுகட்டுமாறு பிரதமரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கட்டுமான நிறுவனங்களின் மீது சிமென்ட் உற்பத்தியாளர்கள் தரப்பிலிருந்து இதற்கு முன் இந்த அளவுக்குக் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டதில்லை. கட்டுமான நிறுவனங்கள் வீட்டு விலை அதிகரிப்புக்கு சிமென்ட், எஃகு ஆகியவற்றின் விலை உயர்வைத் தொடர்ந்து காரணம் காட்டிவருவதால், அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் சிமென்ட் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. கரோனா காலகட்டத்தில், கச்சாப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் ஏறக்குறைய 15% வரையில் விலை உயர்த்தப்பட்டன. 2020 தொடக்கத்தில் ரூ.360 ஆக இருந்த 53 கிரேடு சிமென்ட் மூட்டையின் விலையானது டிசம்பரில் ரூ.430 ஆக உயர்ந்தது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானச் செலவுகள் அதிகரித்துவிட்டன என்றும் அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று டிசம்பர் 18-ல் கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘க்ரெடாய்’ பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தது.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மட்டுமல்ல, வீடுகளின் விலையேற்றத்துக்கு வேறு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளில், யுடிஎஸ் எனப்படும் பிரிக்கப்படாத மனையின் அளவும் அவற்றில் ஒன்று. இது பழைய வீடுகளை விற்பவர்களையும் பீடிக்கிறது. வீடுகளின் விலைமதிப்பு குறையும், மனையின் மதிப்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையின் பெயரிலும் கட்டுமானச் செலவைக் காட்டிலும் கூடுதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. வீடுகளின் மறுவிற்பனையிலும்கூட யுடிஎஸ் காரணம் காட்டப்பட்டு, விலை குறைத்துக்கொள்ளப்படுவதில்லை. எதிர்காலத்தில் விலை உயரும் என்று காலிமனைகளில் முதலீடு செய்யப்படுவதைப் போலவே, கட்டப்பட்ட வீடுகளுக்கும் கற்பனை மதிப்பை உருவாக்கும் போக்கு கட்டுமானத் துறையின் மீதான நம்பிக்கையையே இழக்கச் செய்துவிடும். சிமென்ட் உற்பத்தியாளர் சங்கத்தின் தரப்பிலிருந்து பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள கடிதமானது வீடு கட்டுமானத் தொழிலை நெடுங்காலமாகச் சூழ்ந்திருந்த பனிமூட்டங்களை விலக்கி வெளிச்சத்தைக் கொண்டுவர உதவட்டும். இன்றைய நிலையில் வீட்டின் விலையை 25%-50% வரையில் குறைக்க முடியும் என்பதற்கான வாய்ப்பு இருந்தால், அது நிச்சயமாக எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கப்படக் கூடாது. சாமானியர்களுக்கு வீட்டுவசதி கிடைப்பதென்பது அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்று. அவர்களுக்கு இந்த வசதி கிடைத்திடுவதை ஒன்றிய அரசு தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.