ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சித் தன்மையை உறுதிசெய்யும் இந்திய அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவைத் திருத்தவோ, ரத்துசெய்யவோ, கைவிடவோ முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றம். இந்தியாவையும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் இணைக்கும் அடிப்படை அம்சம் இந்த அரசியல் சட்டப் பிரிவு 370 என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநில அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கும் இடஒதுக்கீட்டு ஏற்பாடு பொருந்துமா, பொருந்தாதா என்பது வழக்கு. அட்டவணைப் பிரிவினர், பழங்குடிகளுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டு ஏற்பாட்டை அனுமதிக்க அரசியல் சட்டத்தின் (16) 4 (ஏ) துணைப் பிரிவு வழி செய்கிறது. இதைப் பாதுகாக்கவே அரசியல் சட்டத்தில் 77-வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனினும், இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குப் பொருந்தாது. ஏனென்றால், பதவி உயர்விலும் இடஒதுக்கீடு ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தும் என்று குடியரசுத் தலைவர் ஆணை எதையும் பிறப்பிக்கவில்லை என்று இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அரசியல் சட்டம் 370-ன்படி, எந்த ஒரு சட்ட திருத்தமும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்த வேண்டும் என்றால், குடியரசுத் தலைவர் அதைக் குறிப்பிட்டு ஆணை பிறப்பிக்க வேண்டும். எனவே, பதவி உயர்விலும் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அந்தப் பிரிவு தொடர்பாக குடியரசுத் தலைவரின் ஆணை எதுவும் இல்லாததால் அது செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்போதுதான் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கிறது என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்து நிர்வாகம் தொடர்பாக ஆணைகள் பிறப்பிக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் இன்னமும் மாறாமல் அப்படியே நீடிக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
இந்தத் தீர்ப்பின் மூலம் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவின் தனித்தன்மையையும் வலிமையையும் இந்தியாவுடன் அந்த மாநிலத்துக்குள்ள சட்டப்பூர்வ பிணைப்பையும் வெளிப்படையாக விளக்கியிருக்கிறது உயர் நீதிமன்றம். மேலும், இத்தகைய சட்டப்பிரிவை நீக்கினால் அல்லது செயல்படாமல் நிறுத்திவைத்தால் என்னாகும் என்று இதை விமர்சிப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் கோடி காட்டியிருக்கிறது.
இந்த சட்டப்பிரிவை நீக்கிவிட வேண்டும், ரத்து செய்துவிட வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. இத்தீர்ப்பு அவர்களைச் சங்கடப்படுத்தலாம். பாஜகவைப் போலவே எண்ணங்களைக் கொண்டவர்கள் “அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்ய முடியாதா என்ன, 368-வது பிரிவு அதற்கான அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறதே?” என்று வாதாடலாம். அப்படிச் செய்தால் இந்தியாவுக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துடன் உள்ள தொடர்பே வலுவிழந்துவிடும் என்பதுதான் நீதிமன்றம் மறைமுகமாகச் சொல்லியிருக்கும் செய்தி. காஷ்மீரின் அரசியல் சட்டத் தொடர்பை ஆட்டிப் பார்க்க நினைக்கும் எவரும் முதலில் பாகிஸ்தானால் பிரச்சினையாக்கப்பட்டுள்ள காஷ்மீர் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு ஏற்படும்வரை புத்திசாலித்தனமாகக் காத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட காலம் கனிவதற்கு முன்னாலேயே இதில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து தேவையற்ற சாகசங்களில் இறங்கி நந்தவனத்தாண்டி தோண்டியைப் போட்டுடைத்த கதையாகிவிடக் கூடாது என்பதே நீதிமன்றம் கொடுத்திருக்கும் மறைமுக எச்சரிக்கை!