அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் எழுப்பியிருக்கும் கேள்வியை நீதித் துறை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. இந்தியாவில் ஏன் இதுவரையில் ஒரு பெண்கூட உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவில்லை என்ற அவரின் கேள்வியானது நீதித் துறையின் போதாமைகளை மட்டும் சுட்டிக்காட்டவில்லை. அங்கு வெளிப்படையாகவே பாலின பேதம் கடைப்பிடிக்கப்படுகிறது என்ற உண்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் அதிக பெண் நீதிபதிகள் இடம்பெறுவதே ஒட்டுமொத்த நீதித் துறையின் பாலின உணர்திறனை மேம்படுத்தும் என்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பான வழக்குகளில் அப்போதுதான் சமநிலை பிறழாத அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய 34 நீதிபதிகளில் இருவர் மட்டுமே பெண்கள் என்பதையும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் தற்போதைய மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையான 1,113-ல் 80 பேர் மட்டுமே பெண்கள், 8 உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளே இல்லை என்பதையும் அவர் உதாரணம் காட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் அனுபவத்தில் மூத்த ஒருவரே தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொள்கிறார். எனவே, தலைமை நீதிபதி என்ற பொறுப்புக்கு ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனும்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கான தகுதிகளும் தேர்ந்தெடுக்கும் முறைகளும் கேள்விக்குள்ளாகின்றன. உயர் நீதிமன்றத்தில் ஐந்தாண்டுகளுக்கும் மேல் நீதிபதியாகப் பணிபுரிந்தவர், உயர் நீதிமன்றத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வழக்குரைஞராக இருந்தவர், குடியரசுத் தலைவரின் கருத்தின்படி தலைசிறந்த சட்டநெறியாளர் என்பவை உச்ச நீதிமன்ற நீதிபதிக்கான தகுதிகளாக அரசமைப்புச் சட்டத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்றாவது தகுதியானது இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஒப்பீட்டளவில், வழக்கறிஞர்களைக் காட்டிலும் உயர் நீதிமன்ற நீதிபதிகளிலிருந்தே உச்ச நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டுவருகிறது. எனவே, நாற்பதுகளிலேயே பெண்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பு வழங்கப்பட்டால் மட்டுமே அவர்களால் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் ஆக வாய்ப்பு உருவாகும்.
உயர் நீதிமன்றத்துக்கான நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும்போது வழக்கறிஞர்களுக்கு இணையாகவோ, அதைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலோ மாவட்ட நீதிபதிகளிலிருந்து பதவி உயர்வு அளிக்கும் நடைமுறையும் பின்பற்றப்பட்டுவருகிறது. மாவட்ட அளவிலிருந்து உயர் நீதிமன்றம், அடுத்து உச்ச நீதிமன்றம் என்று பதவி உயர்வு வழியே ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாவதற்கு வாய்ப்பே இல்லை. உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் நேரடியாக அங்கு நீதிபதியாக நியமிக்கப்படும்போதுதான் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவே முடியும். இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனங்களும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதுபோலவே, வழக்கறிஞர்களிலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக நியமிக்கப்படும் நீதிபதிகளில் பெண்களுக்கான விகிதாச்சாரத்தை உறுதிப்படுத்தும் கொள்கையொன்றும் வகுக்கப்பட வேண்டும்.