தலையங்கம்

விவசாயிகளின் குரலை அரசு கனிவுடன் கேட்க வேண்டும்!

செய்திப்பிரிவு

விவசாயத் துறையை மேலும் திறன்மிக்கதாகவும் லாபகரமாகவும் ஆக்குவதாகக் கூறி ஒன்றிய அரசு மூன்று அவசரச் சட்டங்களை ஜூன் மாதம் கொண்டுவந்தது. இந்த அவசரச் சட்டங்கள் விவசாயிகளிடையே பெரிதும் அதிருப்தியையே ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த அவசரச் சட்டங்களை செப்டம்பரில் நாடாளுமன்றம் சட்டமாக்கியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது 500-க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றன. பக்கத்து மாநிலங்களிலிருந்து டெல்லியை நோக்கி அணிதிரண்டு சென்ற விவசாயிகள் டெல்லி எல்லையில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களெல்லாம் டெல்லியைச் சுற்றிலும் முகாம் அமைத்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

பரவலான கருத்துக் கேட்பு இல்லாமல் இந்தச் சட்டங்களை அவசர அவசரமாக அரசு நிறைவேற்றியது பெரும் தவறு. புதிய சட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களால் விவசாயிகள் பலன்பெறுவார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஆனால், புதிய சட்டம் குறித்த தங்கள் முறையீடுகளை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவே இல்லை என்று விவசாயிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். சுரண்டல் மிகுந்த சந்தை தங்களை நிராதரவான நிலையில் விட்டுவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த அச்சங்களில் பிரதானமாக இருப்பவை ‘குறைந்தபட்ச ஆதார விலை’க்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிடுமோ என்பதும் அரசு கொள்முதல் செய்வது நின்றுவிடுமோ என்பதும்தான். புதிய சட்டமானது விவசாயிகள் தங்கள் உற்பத்தியை விற்பதற்குப் பல வகையான வாய்ப்புகளைத் தருகிறது என்றும், அவர்களின் உற்பத்திக்கு தேசிய அளவிலான சந்தையையும் உருவாக்கித் தருகிறது என்று ஒன்றிய அரசு கூறுகிறது. புதிய சட்டங்களால் ‘குறைந்தபட்ச ஆதார விலை’யும் மண்டி முறையும் முடிவுக்கு வருமானால் தங்களிடம் கொள்முதல் செய்யும் தனியாரிடம் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களில் தங்களுக்குச் சுதந்திரம் இருக்காது என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள். ஏற்கெனவே உள்ள நடைமுறைகளில் குறைபாடுகள் இருக்கின்றன என்பதும் அவற்றில் சீர்திருத்தம் அவசியம் என்பதும் உண்மை. ஆனால், சீர்திருத்தம் என்கிற பேரில் ஏராளமான அம்சங்களை அவசர அவசரமாகக் கொண்டுவர முயல்வது முன்னேற்றத்துக்கான வழியல்ல.

போராடும் விவசாயிகளின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று தற்போது உத்தேசிக்கப்பட்டிருக்கும் ‘மின்சார (திருத்த) மசோதா’வைத் திரும்பப் பெற வேண்டும் என்பது. கட்டணமில்லா மின்சாரத்துக்கு அது முடிவு கட்டிவிடும் என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள்.‘குறைந்தபட்ச ஆதார விலை’யில் கொள்முதல் செய்வதற்கு சட்டப்படியான உத்தரவாதத்தை ஒன்றிய அரசு தருமானால் புதிய சட்டங்களை விவசாயிகள் ஒப்புக்கொள்வதற்கு வழி ஏற்படலாம். விவசாயிகளின் பிரதிநிதிகளோடு அரசு இதுவரை ஐந்து சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. எனினும் உடன்பாடு எட்டப்படவில்லை. 8-ம் தேதியன்று நாடு முழுவதும் கடையடைப்பு நடைபெறுமென்று விவசாயிகள் அறிவித்திருக்கிறார்கள்.

குறைந்தபட்ச ஆதார விலை, மண்டி அமைப்பு போன்றவற்றுக்கு அரசு சட்டரீதியான பாதுகாப்பு தர வேண்டியது அவசியம். எல்லாவற்றையும்விட மேலாக, விவசாயிகள் கூறுவதை அரசு அக்கறையுடன் கேட்டு அவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்.

SCROLL FOR NEXT