தலையங்கம்

பயங்கரவாதத்துக்கு எதிராகமுழு மனதுடன் செயலாற்றவேண்டும் பாகிஸ்தான்

செய்திப்பிரிவு

பயங்கரவாதத்துக்கான நிதி தொடர்பான வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஹஃபீஸ் சயீது குற்றவாளி என்று லாகூர் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்புக்குரியது. மும்பையில் 2008-ல் 166 பேரின் உயிரைப் பறித்த குண்டுவெடிப்பின் மூளையாகச் செயல்பட்டவர் என்று இந்தியாவாலும் அமெரிக்காவாலும் குற்றம்சாட்டப்பட்டவர் ஹஃபீஸ் சயீது. மேலும், ஐநாவாலேயே பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டவர். இத்தகு பயங்கரவாதிகளை இதுவரை மறைத்தும் பாதுகாத்தும்வந்த பாகிஸ்தான் நிலைப்பாடுகள் இப்போது மாறுவதற்கான முக்கியமான காரணம் அதன் மீது கொடுக்கப்பட்ட சர்வதேச அழுத்தம். பாகிஸ்தானின் அரசுசார் அமைப்புகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையிலான வலைப்பின்னல்களையும், சர்வதேச அழுத்தம் இருந்தால் இத்தகு வலைப்பின்னல்களுக்கு எதிராக உலகச் சமூகத்தால் செயலாற்ற முடியும் என்பதையும் ஒருசேர நிரூபித்திருக்கிறது ஹஃபீஸ் சயீது விவகாரம்.

இந்தியாவைக் குறிவைத்து சயீது 1990-களில் லஷ்கர்-இ-தைபா இயக்கத்தை உருவாக்கினார். அந்த இயக்கம் சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்டதும் 2002-ல் ஜேயுடி இயக்கத்துக்குப் புத்துயிர் ஊட்டினார். அது லஷ்கர்-இ-தைபாவின் முகமூடி இயக்கம் என்றே இந்தியா குற்றம் சாட்டுகிறது. மும்பைத் தாக்குதலுக்குப் பிறகுகூட சயீது மீதும் அவரது இயக்கங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுத்தது. சயீதின் தலைக்கு அமெரிக்கா விலை வைத்த பிறகும், ஐநா அவரது இயக்கங்களுக்குத் தடை விதித்த பிறகும், மேலும் ‘நிதி நடவடிக்கைப் பணிப் படை’யின் (எஃப்.ஏ.டி.எஃப்.) நெருக்குதல்களுக்குப் பிறகும்தான், பாகிஸ்தான் அவரது இயக்கங்களுக்குத் தடை விதித்தது. பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு நிதியுதவி செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சர்வதேச ஒப்பந்தமொன்றின்படி பாகிஸ்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று தீய காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் பணத்தைக் கண்காணிக்கும் அமைப்பான ‘எஃப்.ஏ.டி.எஃப்’ வலியுறுத்தியது. அதற்குப் பிறகுதான் தற்போதைய தீர்ப்பு கிடைத்துள்ளது.

சயீதுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது என்றாலும் இவையெல்லாம் பாகிஸ்தான் அரசு உளபூர்வமாக எடுக்கும் நடவடிக்கைகளா, இல்லை சர்வதேச அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் பாவனைகளா என்ற கேள்வி எழாமல் இல்லை. உள்நாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவது, ஆனால் தனது எதிரிகளைக் குறிவைத்து எல்லை தாண்டிய பயங்கரவாதக் குழுக்களை வளர்த்துவிடுவது என்ற இந்த இரட்டைக் கொள்கைதான் பாகிஸ்தானின் நிலைமைக்குக் காரணம். பயங்கரவாதத்துக்கு உண்மையாகவே முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தான் விரும்புகிறது என்றால், தன் நாட்டில் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு இனி இடமே இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்து உறுதியான நடவடிக்கைகளை அது மேற்கொள்ள வேண்டும். அதுவரை ‘எஃப்.ஏ.டி.எஃப்.’ உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அதை நோக்கி பாகிஸ்தானுக்கான அழுத்தத்தைத் தொடர வேண்டும்.

SCROLL FOR NEXT