பெருங்கவிஞர் பாப்லோ நெருதாவின் நாடான சீலே கடந்த ஆண்டு போராட்டங்களால் கொந்தளித்துக்கொண்டிருந்தபோது அந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு மரபியரான அதிபர் செபாஸ்தியன் பின்யெரா ஒப்புக்கொண்டார். அதன்படி, சட்டத்திருத்தம் மேற்கொள்ளலாமா வேண்டாமா என்பதற்குக் கடந்த அக்டோபர் 25-ம் தேதியன்று பொதுவாக்கெடுப்பு நடந்தது. அதில் 78% சீலே மக்கள் புதிய அரசமைப்புச் சட்டம் வேண்டும் என்று வாக்களித்தார்கள். ஏற்கெனவே இருக்கும் அரசமைப்புச் சட்டம் அகஸ்தோ பீனஷேவின் ராணுவ ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. 1990-ல் ஜனநாயக வழியைத் தேர்ந்தெடுத்த அந்த நாடு கொஞ்சம் கொஞ்சமாக அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைத்தது. மரபுத்துவத் தாராளமய சந்தைக் கொள்கைகளைப் பின்பற்றி எழுதப்பட்டிருக்கும் அந்த அரசமைப்புச் சட்டத்தால் பொருளாதாரம் விரிவடைந்தது; எனினும், செல்வம் ஒருசிலரிடம் மட்டுமே சென்று குவிந்தது. இதை எதிர்த்தும், தனியார் ஓய்வூதியத் திட்டங்களை ஒழிக்க வேண்டுமென்றும் கல்வியிலும் மருத்துவத் துறையிலும் முதலீடுகள் அதிகரிக்க வேண்டுமென்றும் பூர்வகுடி மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்து அவற்றை முன்னிட்டுக் கடந்த ஆண்டு போராட்டம் வெடித்தது. அரசமைப்புச் சட்டத்தை அங்கொன்றும் இங்கொன்றும் திருத்தாமல் முழுமையாகவே மாற்றியமைக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைக்குத் தற்போதைய வாக்கெடுப்பு முதல் வெற்றியாக அமைந்திருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தை மாற்றியமைப்பது என்பது இரண்டு ஆண்டுகள் எடுக்கும் வேலை. புதிய சட்டத்தை எழுத 155 பேர் அடங்கிய அவையை சீலே மக்கள் அடுத்த ஆண்டு தேர்ந்தெடுப்பார்கள். அது 2022-ல் பொதுவாக்கெடுப்புக்கு விடப்படும். இந்தப் பிரதிநிதிகளில் பாதிப் பேர் பெண்களாக இருப்பார்கள் என்ற செய்தியிலிருந்து இந்தியாவும் கற்றுக்கொள்ள விஷயம் இருக்கிறது. இங்கே நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுக்கு இன்னும் போராடிக்கொண்டிருக்கிறோம். பூர்வகுடி மக்களுக்கு அந்த அவையில் பிரதிநிதித்துவம் தரப்படுமா என்பதைப் பற்றி அங்கே சூடுபறக்க விவாதிக்கப்படுகிறது.
சீலேவில் ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான சல்வதோர் அயெந்தேவின் ஆட்சியை அமெரிக்காவின் உதவியுடன் கவிழ்த்துவிட்டு ராணுவத் தளபதியான பீனஷே 1973-ல் ஆட்சிக்கு வந்தார். அவர் ஆண்ட 17 ஆண்டுகளும் ஒடுக்குமுறை தலைவிரித்தாடியது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இப்படிப்பட்ட ஆட்சியில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டத்தைத்தான் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்துவந்தது. தற்போது அதைத் தூக்கியெறிந்துவிட்டுப் புதிய அரசமைப்புச் சட்டம் எழுதுவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதுதான் எந்தவொரு நவீன ஜனநாயக நாடும் விரும்பக் கூடியதாகும். கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்குக் கழுவாய் தேடவும் எல்லோரையும் உள்ளடக்கும் பொருளாதார, சமூக அமைப்பை உருவாக்குவதற்கும் உரிய தருணமாக இது சீலேவுக்கு அமைந்திருக்கிறது. அயெந்தேவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அவர் கொல்லப்பட்ட சில நாட்களில் மர்மமான முறையில் இறந்த பாப்லோ நெருதா தற்போது இருந்திருந்தால் சீலேவின் புரட்சிகரத் தருணத்தைக் கவிபாடி வரவேற்றிருப்பார்.