மூன்று குழந்தைகளுக்குத் தாயான மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், டெல்லி கல்லூரி மாணவனுக்கும், கோவா மாநில கிராமத்திலிருக்கும் அதிகம் கேள்விப்படாத மதக் குழுவுக்கும், வடகிழக்கில் உள்ள தீவிரவாத அமைப்புக்கும் பொதுவாக இருக்கக் கூடிய அம்சம் என்னவாக இருக்க முடியும்? மத அடிப்படையிலான பயங்கரவாதம் என்றால் நம்ப முடிகிறதா?
இந்தியாவில் உள்ள அனைத்துப் பெரிய மதங்களிலும் ஒரு சிலரைப் பிடித்து ஆட்டும் இந்தத் தீவிரவாதம், அப்பாவிகளை விழுங்கக் காத்திருப்பதையே சமீபத்திய தகவல்கள் உணர்த்துகின்றன. மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட அஃப்ஷா ஜபீன், சமூக வலைதளத்தில் புரட்சிகரமான கருத்துகளைத் தெரிவித்ததற்காக ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சில கேரள இளைஞர்கள் போன்றோர் குறித்த தகவல்கள், இந்தியாவில் மத அடிப்படைவாதம் அதிகரித்துவருவதைக் காட்டுகின்றன. ‘இஸ்லாமிய அரசு’ என்ற ஐ.எஸ். அமைப்பில் இந்தியாவிலிருந்து சில இளைஞர்கள் சேர்ந்துவிட்டதாகவும் மேலும் பலர் சேரக் காத்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவரும் ஓய்வுபெற்ற தரைப்படை அதிகாரியின் மகளுமான இளம் பெண் ஒருவர் சிரியாவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஓர் அமைப்பில் சேரும் முனைப்பில் இருப்பதைச் சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. அந்த அமைப்பு, நம்முடைய காலத்தில் மனிதகுல வரலாறு இதுவரை கேள்விப்பட்டிராத கொடூர சம்பவங்களில் ஈடுபட்டுவருகிறது. ஆரம்பத்தில் அங்கொருவர் இங்கொருவர் என்று தொடங்கி, பிறகு அலையலையாக இது மாறிவிடக்கூடிய ஆபத்தான போக்கு இது.
இந்தியச் சமூகம் இப்போது எதைக் குறித்துக் கவலைப்பட வேண்டும் என்றால், இப்படி மத அடிப்படைவாதத்தில் இளைஞர்களுக்கு ஈடுபாடு ஏற்படுவது ஒரு மதத்தில் மட்டுமல்ல; பல மதங்களில் என்பது பற்றித்தான். இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத ‘சனாதன் சன்ஸ்தா’ போன்ற அமைப்புகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத தங்களுடைய கருத்துகளை வன்செயல்கள் மூலம் மற்றவர்கள் மீது திணிக்கத் தலைப்பட்டுள்ளன என்பதைக் கவனிக்க வேண்டும். பிற மதத்தவருடைய அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையிலும் இந்தியாவின் மதப் பன்முகத்தன்மையை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலும் அவை செயல்படத் தொடங்கியுள்ளன.
வெவ்வேறு கண்டங்களில், வெவ்வேறு பிரிவு மக்களுக்கிடையே நடக்கும் மோதல்களால் மட்டுமல்ல, நம் நாட்டிலேயே பெரிய அரசியல் கட்சிகள் ஏற்படுத்திவரும் அரசியல் சூழலாலும் மத அடிப்படைவாதக் கருத்துகளுக்கு ஆதரவு பெருகிவருகிறது. ஒரு மதத்துக்குள் ஏற்படும் தீவிர எழுச்சி, பிற மதத்தவருக்குள்ளும் அதேபோலக் கிளர்ந்தெழும் உணர்வைத் தோற்றுவிக்கிறது. அவர்கள் பரப்பும் தவறான கருத்துகள் சமூகத் தகவல் தொடர்புச்சாதனங்கள் வழியாக வேகமாகப் பரவுகின்றன. உலகமயமாக்கல் என்ற நடைமுறையின் மூலம் ஏற்பட்டுவரும் நற்பலன்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கெடுபலன்களும் உள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது. மத அடிப்படையிலான தீவிரவாதம் என்பது எங்கோ தொலைவில் உள்ள ஆபத்து அல்ல, அது நம்மை நெருங்கிவிட்டது என்பதையே இவை உணர்த்துகின்றன. இதன் சுழல் வட்டங்கள் புவி எல்லை தாண்டிப் பிற இடங்களிலும் உணரப்படும். அரசு தீவிரமாகக் கவனித்து, கையாள வேண்டிய பிரச்சினை இது. முக்கியமாக, மத அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடும் சக்திகள் துளி சமரசமின்றி ஒடுக்கப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்!