கடந்த சில நாட்களாக பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்துவரும் சம்பவங்கள், இம்ரான் கான் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட 2018 தொடங்கி, அவர் சந்தித்ததிலேயே மிகப் பெரிய அரசியல் சிக்கலை எதிர்கொண்டிருப்பதை உணர்த்துகின்றன. அந்நாட்டின் 11 எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தைத் தோற்றுவித்துள்ளன. சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, உணவுப் பற்றாக்குறை, பணவீக்கம், எரிவாயு விநியோக நிறுத்தம் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்று தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, இந்த இயக்கம் தேசிய அளவில் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக இரண்டு மிகப் பெரிய பேரணிகளும் நடந்துள்ளன. அரசாங்கத்தின் தோல்விக்காக மட்டுமின்றி, ராணுவத்தால் ஆட்டுவிக்கப்படும் பொம்மையாகவும் இருக்கிறார் என்று இம்ரான் கானை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
சகல அதிகாரங்களையும் தன் வசம் கொண்டிருக்கும் பாகிஸ்தானின் ராணுவத்தை, இம்ரான் கான் உட்பட அந்நாட்டின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சியாக இருக்கும்போது குற்றஞ்சாட்டுவதும் ஆட்சிக்கு வந்தவுடன் அதே வலையில் மீண்டும் வீழ்வதும் வாடிக்கைதான். கடந்த சில மாதங்களாக, இம்ரான் கானின் உத்தரவுப்படி அரசு வழக்குரைஞர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களைச் சிறைக்கு அனுப்பும் வகையில் வழக்குகளைப் புனைவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமருமான ஆசிப் அலி ஸர்தாரி ஏற்கெனவே பண மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில், விசாரணைக் காவலில் இருக்கிறார். பிரிட்டனில் தஞ்சமடைந்திருக்கும் நவாஸ் ஷெரீப்பைத் திருப்பி அனுப்பிவைக்குமாறு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது, அனுப்பிவைக்கப்பட்டால் அவர் மீது வழக்குகள் தொடரப்படலாம்.
பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் நடத்திய பேரணிகளின் மேடைகளில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பிலவால் பூட்டோ, மர்யம் நவாஸ் இருவரும் இடம்பெற்றதன் காரணமாக பாகிஸ்தான் அரசு அடுத்தகட்ட எதிர்நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. மர்யம் நவாஸின் கணவர் கேப்டன் சப்தார், அவர்களுக்குச் சொந்தமான கராச்சி தங்கும் விடுதியில் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஜின்னாவின் கல்லறை அருகே அரசாங்கத்துக்கு எதிராக முழங்கி அவமதித்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. சிந்து மாகாணத்தில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் இல்லத்தைச் சூழ்ந்துகொண்ட ராணுவ வீரர்கள், சப்தாருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையில் கையெழுத்திடுமாறு அவரை வற்புறுத்தினர் என்று அந்தக் கைது நடவடிக்கையின் பின்னணி வெளியே தெரியவந்ததும் இந்தப் பிரச்சினை பெரிதாக வெடித்தது. சிந்து மாகாணத்தில் ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவில் அம்மாகாணத்தின் காவல் துறை அதிகாரிகள் இவ்விஷயத்தில் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகு முன்னுதாரணம் இல்லாத எதிர்வினை, காவல் துறைக்கும் ராணுவத்துக்கும் இடையே மிகவும் மோசமான சூழல் நிலவுவதைக் காட்டுகிறது. சர்ச்சைக்குரிய அந்தக் கைது நடவடிக்கை குறித்து 10 நாட்களுக்குள் விசாரித்து அறிக்கை அளிக்கப்படும் என்று ஜெனரல் பாஜ்வா உறுதியளித்ததற்குப் பிறகு, இது குறித்த கொந்தளிப்புகள் தற்காலிகமாகக் கட்டுப்பட்டுள்ளன. எனினும், அரசியல் களத்தில் கொதிப்பு இன்னும் தொடரவே செய்கிறது. ஆக, பாகிஸ்தானின் ஆளுங்கட்சி தனது அடுத்தடுத்த அடிகளை நெருப்பில்தான் வைக்க வேண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி.