மனித குலத்தின் உயர்வுக்காக உழைத்தவர்களின், அதற்காக உயிர்த் தியாகம் செய்தவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் அவர்களை நினைவுகூர்வது வெறும் சடங்கல்ல. அது அவர்களின் பங்களிப்புக்காக ஒரு சமூகம் செலுத்தும் நன்றிக்கடன். எனினும், அந்தத் தலைவர்களின் பொருத்தப்பாட்டை என்றும் தக்கவைத்துக்கொள்வதன் வாயிலாகவே அந்த நன்றிக்கடன் உள்ளடக்கம் கொண்டதாக இருக்கும். இந்த காந்தி ஜெயந்தி ஒட்டுமொத்த உலகச் சமூகத்துக்கும் காந்தி எவ்வளவு தேவைப்படுகிறார் என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.
பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின்போது அங்கு இருந்த இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள், சம்பவத்தைத் திட்டமிட்டு நடத்தியதற்கான சாட்சியங்கள் இல்லை என்ற அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி தொட்டு பாஜகவின் இன்றைய ஆட்சி வரை நீண்ட நெடுங்காலமாக இந்த வழக்கை விசாரித்துவந்த சிபிஐயின் செயல்பாடு குறித்து மிகப் பெரிய கேள்வியை எழுப்புகிறது இந்தத் தீர்ப்பு. அதே சமயம், அதே உத்தர பிரதேசத்தில் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் உயிரிழந்த தலித் இளம் பெண்ணின் சடலத்தை அவருடைய குடும்பத்தினரை ஒதுக்கி, காவல் துறையினரே அவசர அவசரமாக எரியூட்டியிருக்கிறார்கள். காவல் துறையின் கண்ணியமற்ற செயல்பாடு எந்த எல்லை வரையும் போகும் என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டு இது.
தேசத்தின் சுதந்திரம், ஜனநாயகம் இரண்டையும் கட்டிக்காக்க வேண்டிய நம்முடைய விசாரணை அமைப்புகள் வெகு வேகமாக ஒரு சாமானியனின் நம்பிக்கையிலிருந்து கரைந்துகொண்டிருக்கின்றன. சாதி, மதம், பிறப்பிடம், பாலினம் என்று இப்படி எல்லா அடிப்படைகளிலும் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டதாக, இந்த இந்தியக் குடியரசும், அதன் அமைப்புகளும் எளியவரிலும் எளியவரின் பக்கம் நிற்க வேண்டும் என்று எண்ணிய காந்தியின் தேசமா இது!
உலகறிய ஒரு தேசத்தையே தலைகுனியச்செய்த பாபர் மசூதி இடிப்பு வழக்கை நம்முடைய விசாரணை அமைப்புகள் இவ்வளவு காலமாக இழுத்தடித்துவந்ததே இழுக்கு. இவ்வளவு தாமதச் செயல்பாட்டுக்குப் பிறகும் குற்றச்சாட்டப்பட்டவர்களில் ஒரே ஒருவருக்கு எதிராகக்கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது என்றால், மத்தியப் புலனாய்வு அமைப்பு என்னதான் செய்துகொண்டிருந்தது? போதிய ஆதாரங்களை அளிக்காததால், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்று வந்திருக்கும் தீர்ப்பானது நம்முடைய அமைப்பிலுள்ள சகல ஓட்டைகளையும் அம்பலப்படுத்துகிறது. உள்கட்டுமான அமைப்பில் நடந்துவரும் இத்தகுத் தார்மீகச் செல்லரிப்பைத்தான் வெளிக்கட்டுமானத்தில் ஒரு பெண் கொடூரமான அநீதிக்குள்ளாகும் சம்பவத்திலும்கூட வெளிப்படும் காருண்யமற்ற வறட்டு அணுகுமுறையிலும் பார்க்கிறோம்.
அரசியல் அழுத்தங்களுக்கு அப்பாற்பட்டு இந்நாட்டின் நீதி, நிர்வாக, விசாரணை அமைப்புகள் இயங்க வேண்டும் என்பதே காந்தி உள்ளிட்ட நமது தேசத் தலைவர்களின் இலக்காக இருந்தது. அத்தகு சாத்தியம் மிக்க அமைப்புகளை நாம் அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாகவும் தனிச்சட்டங்களின் வாயிலாகவும் உருவாக்க முற்பட்டோம். எனினும், நம்முடைய தார்மீக உணர்வும், நேர்மையான நடத்தையுமே அவற்றை உயிரோட்டமாக வைத்திருக்கும். அவற்றைத்தான் இன்று வேகமாகப் பறிகொடுத்துவருகிறோமா என்ற அச்சம் எழுகிறது.