தலையங்கம்

புதிய திசையில் செல்லுமா ஜப்பான்?

செய்திப்பிரிவு

உலகம் வெகு வேகமாக மாறிவரும் சூழ்நிலையில் ஜப்பானின் புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கும் சுகாவுக்கு முன்பாக நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. ஜப்பானின் நீண்ட காலப் பிரதமராக இருந்தார் ஷின்ஸோ அபே (65). உடல் நலப் பிரச்சினைகளை முன்னிட்டு, பிரதமர் பொறுப்பை அவர் தனது நீண்ட கால சகாவான யோஷிஹிதே சுகாவிடம் (71) ஒப்படைத்திருக்கிறார். ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் புதிய பிரதமர் சுகா, மாற்றங்களுக்கு மாறாகத் தொடர்ச்சியையே உறுதிமொழியாக அளித்திருக்கிறார். அவருடைய தெரிவே தொடர்ச்சிக்கான அறிகுறிதான்: 2012-லிருந்து தலைமை அமைச்சரவைச் செயலராக அவர் இருந்துவந்திருக்கிறார். அபேவின் பிரதான செய்தித் தொடர்பாளராகவும், அவரது கொள்கைகளை அமல்படுத்துபவர்களில் முதன்மையானவராகவும் இருந்திருக்கிறார். 1996-லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சுகா, அபேவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் 2006-07 ஆண்டுகளில் உள்துறை மற்றும் தகவல்தொடர்பு இணையமைச்சராக இருந்திருக்கிறார். பிரதமராகப் பதவியேற்ற பின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சுகா, அபேவின் கொள்கைகளைத் தொடர்வதும் அவரது லட்சியங்களை நிறைவுசெய்வதுமே தனது குறிக்கோள் என்று கூறியிருக்கிறார். குறிப்பாக, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும், கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதும். அமெரிக்கத் தேர்தலின் விளைவுகள், அதிகரித்துவரும் சீனாவின் ஆக்கிரமிப்பு, உலகளாவிய பொருளாதாரச் சரிவு போன்றவற்றைத் தாக்குப்பிடிக்க வேண்டிய நிலையில் சுகா உள்ளார். அவர் முன் தற்போது உள்ள முக்கிய சவால், பெருந்தொற்றின் காரணமாக 2021-க்குத் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை அபே பதவி விலகியிருப்பது பெரிய இழப்பாகும். இந்திய - ஜப்பான் உறவைப் பொறுத்தவரை முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு அவர் காரணமாக இருந்திருக்கிறார். 2006-லிருந்து பிரதமர்களுக்கு இடையிலான உச்சி மாநாடுகளைத் தொடங்கியது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய நான்கு தரப்பு உறவுக்கு முன்னெடுத்தது, இந்தியாவுடன் அணுசக்தி உறவை மேற்கொண்டது என்று பலவற்றை எடுத்துக் காட்டலாம். பிரதமராக அவரது கடைசி சந்திப்புகளுள் ஒன்றாக இந்தியப் பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக அவர் கலந்துகொண்ட உச்சி மாநாட்டைக் கூறலாம். அப்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்புத் துறையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. முன்னாள் பிரதமர் மன்மோகனுடனான நட்பை அடித்தளமாகக் கொண்டு மோடியுடனான நட்பை அபே வலுப்படுத்திக்கொண்டார். அபேவின் இடம் எத்தகையது என்பதையும், அதை நிரப்புவது எவ்வளவு கடினமான விஷயம் என்பதையும், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவின் முக்கியத்துவத்தையும் புதிய பிரதமர் சுகா நன்கு உணர்ந்திருப்பார். டோக்கியோவில் அடுத்த மாதம் நான்கு தரப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூடும் சந்திப்பு நிகழும் என்று தெரிகிறது. ஜப்பானின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் உலக அரசியல் குறித்து ஜப்பானின் பார்வை அப்படியேதான் இருக்கிறதா, ஏதும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்பதை இந்தியா தெரிந்துகொள்ள அந்தச் சந்திப்பு ஒரு வாய்ப்பாக இருக்கும்!

SCROLL FOR NEXT