தலையங்கம்

கரோனா அணுகுமுறைகளைப் புதுப்பித்திட வேண்டும்

செய்திப்பிரிவு

கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் பட்டியலில் உலகின் முதலிடத்தை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது இந்தியா. தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துவிட்ட நிலையில், ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் புதிய தொற்றாளர்கள் எனும் அளவுக்குத் தொற்றின் வேகம் அதிகரிப்பதானது இதை நமக்குச் சொல்கிறது. முன்னேறிய பல நாடுகளை ஒப்பிட பரிசோதனைகளின் அளவு குறைவு, பரிசோதனைகளில் வெளிப்படும் குறைபாடு என்கிற அளவிலேயே எண்ணிக்கை இந்த அளவை எட்டியிருக்கிறது என்றால், கண்டறியப்படாத தொற்றுகளின் எண்ணிக்கை பல மடங்கு இருக்கும். மே மாதத்திலேயே இந்தியா 64 லட்சம் தொற்றாளர்களைக் கொண்டிருக்கும் சாத்தியத்தைக் கொண்டிருந்தது என்பதைக் குறிப்புணர்த்தும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வறிக்கையை இங்கே சுட்டிக்காட்டலாம். பெரும்பாலான தென்கிழக்காசிய நாடுகளைப் போல, கரோனா சார்ந்து நிகழும் இறப்புகளின் விகிதம் இந்தியாவிலும் குறைவாகவே இருந்தாலும், அதிகமான எண்ணிக்கையிலானவர்களை நாம் இழந்துகொண்டே வருகிறோம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இத்தகு சூழலில் ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க பரிசோதனை, சிகிச்சை, நோயை எதிர்கொள்ளும் அணுகுமுறை எல்லாவற்றிலுமே நம் பார்வைகளை அவ்வப்போது உடனடியாக நாம் புதுப்பித்துக்கொள்ளுதல் அவசியம்.

பரிசோதனைகளின் முக்கியத்துவம் தொடர்ந்து பேசப்படுகிறது. அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் கண்டறிந்த எச்சில் பரிசோதனை இந்தியாவுக்கு ஒரு நற்செய்தி ஆகும். துரிதமான, அதிகம் செலவுபிடிக்காத, எச்சில் மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படும் மிகவும் நுட்பமான இந்தப் பரிசோதனை முறையை மேற்கொள்வது தொடர்பில் இந்தியா சிந்திக்க வேண்டும். ஒருவேளை எதிர்பார்க்கும் பலனை அது தராதபட்சத்தில், நாம் வேறொன்றை முயலலாம். ஆனால், இத்தகு முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளுதல் வேண்டும். ஊரடங்குக்கு வேகமாக விடைகொடுத்த கர்நாடகத்தில் இப்போது பரவல் அதிகரிக்கிறது. ஊரடங்கிலிருந்து வெளியே வர கர்நாடகம் காட்டிய அக்கறையைக் குறைகூறிட முடியாது. ஆனால், இப்படி ஒரு பிராந்தியத்தில் தொற்று அதிகரிக்கையில், அதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அதிகாரங்களும் மாநில அரசுகளிடம் இருக்க வேண்டும். எப்படி ஊரடங்கை அமலாக்குவதில் ஒரே மாதிரியான, மையப்பட்ட அணுகுமுறை தவறானதோ அப்படியே ஊரடங்கிலிருந்து வெளியேறுவதை அமலாக்குவதிலும் ஒரே மாதிரியான, மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை தவறானதாகும். மாநிலங்களுக்கு இது தொடர்பில் முழு அதிகாரம் அளிப்பதை ஒன்றிய அரசு சிந்திக்க வேண்டும்.

தடுப்பூசி நம் கண்ணுக்கு எட்டிய நாட்களில் தெரியாத சூழலில் எப்படியும் கரோனாவை அனுசரித்தபடியே பழைய இயல்பான வாழ்க்கைக்கும் நாம் திரும்ப வேண்டும். அதற்கான வழி அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப நம்முடைய பார்வையைப் புதுப்பித்துக்கொண்டே அடியெடுத்துவைப்பதுதான் என்பதை அரசு உணர வேண்டும்.

SCROLL FOR NEXT