இராக்கில் உள்ள தன் துருப்புகளைக் குறைத்துக்கொள்வதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவு வரவேற்கத் தக்கது. இராக்கில் அமெரிக்கத் துருப்புகள் இருப்பது தொடர்பில் மக்களிடையே அதிருப்தி அதிகரித்துக்கொண்டிருந்தது; குறிப்பாக, ஈரானிய தளபதி காஸெம் சுலைமானி படுகொலைக்குப் பிறகான சூழலில், அமெரிக்காவின் இந்த முடிவு ஆசுவாசம் அளிப்பதாக அமைந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேசமயம் இராக்கிய அரசுக்கு சில புதிய சவால்களும் எழுந்துள்ளன. ஒருபுறம் அமெரிக்கத் துருப்புகள் வெளியேறுவதை இராக் அரசு விரும்பினாலும், மறுபுறம் பல்வேறு விஷயங்களிலும் அமெரிக்காவின் உதவி இராக்குக்குத் தேவைப்படுகிறது.
பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்கத் துருப்புகளை மறுபடியும் தங்கள் தாய்நாட்டுக்கு வரச் செய்வதென்ற ட்ரம்ப் நிர்வாகத்தினுடைய பெருந்திட்டத்தின் ஒரு பகுதி இது. பெரிய அளவிலான அமெரிக்கத் துருப்புகளை இராக்கில் வைத்திருப்பது மிகவும் சிரமமாக இருப்பதை அமெரிக்கா உணர்ந்தது. போர் உச்ச நிலையில் இருந்தபோது இராக்கில் 1.50 லட்சம் துருப்புகள் இருந்தார்கள். ஆனால், சமீப ஆண்டுகளில் 10 ஆயிரம் துருப்புகளை அங்கே இருக்கச் செய்வதே மிகவும் சிரமமான காரியமானது. இதற்கு, அங்கே நிலவும் பகைமை கொண்ட அரசியல் சூழலே காரணம். அமெரிக்கத் துருப்புகள் மீது பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்திய பிறகு, ஜனவரியில் சுலைமானியைக் கொன்றது அமெரிக்கா. இராக்கில் உள்ள அமெரிக்கத் தரைக்கட்டுப்பாடு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி ஈரான் பழிதீர்த்துக்கொண்டது. இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்கத் துருப்புகள் காயமடைந்தனர். அதே நேரத்தில், பயங்கரவாத அமைப்புகளும் அமெரிக்கத் துருப்புகள் மீதான தங்கள் தாக்குதலைத் தொடர்ந்துகொண்டிருந்தன.
அமெரிக்கா தற்போது தனது துருப்புகளை விலக்கிக்கொண்டிருப்பதால் தங்கள் பாதுகாப்புக் கட்டமைப்பில் வெற்றிடம் ஏற்படாமலும், இதை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்திக்கொள்ளாத வகையிலும் இராக்கிய அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். ஐ.எஸ். அமைப்பு தற்போது தலைமறைவாகச் செயல்பட்டுவந்தாலும் இன்னும் 10 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இராக்கில் இயங்கிவருகிறார்கள் என்று ஐ.நா.வின் கணக்கீடு தெரிவிக்கிறது. முன்னாள் பிரதமர் நூரி அல்-மாலிக்கி அரசின் பிரிவினைவாதக் கொள்கைகள், 2011-ல் அமெரிக்கா தனது துருப்புகளை விலக்கிக்கொண்டதால் ஏற்பட்ட வெற்றிடம் ஆகியவை இராக்கில் அல்-கொய்தா ஊடுருவ வழிவகுத்தது. உள்நாட்டுப் போரால் சீரழிந்திருக்கும் சிரியாவில் கிடைத்த போர் அனுபவங்களைக் கொண்ட அல்-கொய்தாவின் நீட்சிபோல அடுத்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு கட்டியெழுப்பப்பட்டது. அதுபோன்றதொரு தவறு மீண்டும் நிகழ்ந்துவிடாதவாறு இராக் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு சமூகங்களை ஒருங்கிணைத்து ஜனநாயகத்தை வளர்த்தெடுக்க இராக் அரசியலர்கள் முற்படுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு இராக் தன் அமைதிப் பயணத்தில் முன்னேற முடியும்.