கல்லூரி மாணவர்களுக்கு இறுதிப் பருவத்துக்கான பாடங்கள் தவிர தேர்வுக் கட்டணம் செலுத்திய மற்ற அனைத்து பாடங்களிலும் தேர்ச்சியளிக்கப்படும் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பை ஆதரித்தும் எதிர்த்தும் என்று தீவிர விவாதங்கள் எழுந்துள்ளன. இறுதிப் பருவத்துக்கான தேர்வுகளை செப்டம்பர் 30-க்குள் நடத்த வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதிப் பருவத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டாலும் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும், அதன் பிறகே பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறுக்காக நிற்கவில்லை என்றால் அனைத்து மாணவர்களுக்குமே பட்டங்களை வழங்கி வழியனுப்பிவைக்கக்கூட உயர் கல்வித் துறை தயாராக இருந்திருக்கவும் கூடும். ஆயினும், மாநிலத்தை ஆளும் அதிமுகவின் பார்வையிலிருந்து பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் பார்வையும் இதில் பெரிதாக மாறுபட்டுவிடவில்லை. ‘பெரும் எண்ணிக்கையிலான கல்லூரி மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்பதால் அவர்களும் இந்தச் சலுகையைப் பெறும் வகையில் தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்’ என்று அது கோரியிருக்கிறது. ஆக, இரு கட்சிகளுமே தேர்தல் துருப்புச் சீட்டாகவும் இந்த விஷயத்தை அணுகுகின்றன என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.
இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம் என்று முழுவதும் சாய்ந்திடாத வகையிலேயே இந்த முடிவை அணுக வேண்டியுள்ளது. மிக அசாதாரணமான சூழலில், மிக அசாதாரணமான சில முடிவுகள் நியாயத்தைப் பெறுகின்றன. அந்த நியாயத்துக்கான காரணம், பாதிப்பின் தன்மையிலேயே இருக்கிறது. அந்த வகையில், தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவானது மாணவர்களைத் தேவையற்ற மனவுளைச்சலிலிருந்து வெளியேற்றுவதாக அமைகிறது. அதேசமயம், இந்தப் பருவத்துக்கான தேர்வுகளோடு தேர்ச்சி முடிவுகளை வரையறுக்க வேண்டும். கல்லூரியில் வகுப்புகள் நடத்தப்படாத நிலையில், அனைவருமே இணைய வழி வகுப்புகளில் கலந்துகொள்ளும் பொருளாதார வசதிகளைப் பெற்றிராத நிலையில் பாதிக்கப்படும் மாணவர்களுக்குச் சலுகை காட்டப்பட வேண்டும் என்ற பார்வையில் நியாயம் இருக்கிறது. ஆனால், தொடர்ந்து தேர்வுத் தோல்விகளை சேர்த்து வைத்திருக்கும் மாணவர்களையும் ஒரே அணுகுமுறையில் மதிப்பிடுவது கல்வித் தகுதிகளைக் கேலிக்குரியதாக்கிவிடும் என்பதை அரசு உணர வேண்டும். எப்படியும், இந்த மாணவர்கள் ஏனைய பருவத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள்தாம் அவர்களின் மொத்த கல்வித் தகுதியையும் தீர்மானிக்கும் அம்சமாக இருக்கும். ஆக, அந்த வழியையும் சேர்த்து அரசே ஆக்கிரமித்துக்கொள்ளக் கூடாது. அதேபோல, இதே வழிமுறைகளைத் தொடர்ச்சியான அணுகுமுறையாக்கவும் கூடாது. வரவிருக்கும் ஆண்டிலும்கூட கரோனாவின் தாக்கம் நீடிக்கலாம்; அதற்கு முகங்கொடுக்கத்தக்க வகையில் புதிய வழிமுறை ஒன்றை அரசு கண்டறிய வேண்டும்.