தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சமூகவிரோதியைக் கைதுசெய்யும் முயற்சியின்போது, காவலர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காவல் துறையினர் எதிர்கொண்டுவரும் அபாயத்தை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த சமூகமும் எதிர்கொள்ளும் ஒரு அபாயத்தையே நம்முடைய விவாதத் தளத்துக்கு இது கொண்டுவருகிறது.
ஸ்ரீவைகுண்டம் அருகே மலையடிவாரத்தில் தலைமறைவாக இருந்த துரைமுத்து என்ற தொடர் குற்றவாளியைக் கைதுசெய்ய மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரால் தனிப்படை அமைக்கப்பட்டது. துணை கண்காணிப்பாளரின் தலைமையில் ஆறு பேர் கொண்ட இந்தத் தனிப்படை குற்றவாளியைக் கைதுசெய்ய முயன்றபோது, முதல்நிலை காவலரான சுப்பிரமணியன் மீது நாட்டுவெடிகுண்டு வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். காவலர் சுப்பிரமணியனுக்குக் காவல் துறை அளித்துள்ள மரியாதை பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், இறந்துபோன காவலரின் மனைவி பத்து மாதக் கைக்குழந்தையோடும் வீட்டுக் கடன் நிலுவையோடும் எதிர்வரும் காலத்தைச் சமாளித்தாக வேண்டும். அரசுத் தரப்பில் வழங்கப்படும் இழப்பீடுகள் பெயரளவில் முடிந்துவிடக் கூடாது. இந்தச் சம்பவத்தில், வெடிகுண்டு வீசிய ரௌடியும் படுகாயமடைந்து இறந்துவிட்டார் என்றாலும், இப்படியானவர்கள் துணிச்சலாக இயங்குவதற்கான சுதந்திரச் சூழலும் அவர்களுக்கான பாதுகாப்பான பின்னணியும் எப்படிச் சாத்தியமாகின்றன என்கிற கேள்வியை நாம் ஆழமாக எழுப்பிக்கொள்ள வேண்டி இருக்கிறது. அரசியலர்களுடன் ரௌடிகளுக்கு உள்ள ரகசியமான உறவுதான் ரௌடிகள் பாதுகாப்பாக இயங்குவதற்கான உத்வேக நரம்புகளில் முக்கியமானது என்பதை எவராலும் மறுக்க முடியாது. அப்படியென்றால், சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முக்கியமான பங்கு அரசியலர்களுக்கு இருக்கிறது.
நாட்டின் ஏனைய பல மாநிலங்களைக் காட்டிலும், ரௌடிகளை ஒடுக்குவதிலும் அரசியல் அதிகாரத்திலிருந்து அவர்களைத் தள்ளிவைப்பதிலும் கடந்த தசாப்தத்தில் தமிழ்நாடு சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே இதை உறுதிப்பாட்டோடு செயல்படுத்தியதோடு, கட்சி அளவிலும் குற்றப் பின்னணி உள்ளவர்களின் அதிகாரத்தை முடக்கும் போக்கை வளர்த்தெடுத்தனர். மாநிலத்தின் இரு பிரதான கட்சிகளில் வளர்ந்த இந்தப் போக்கு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் கலாச்சாரத்தையுமே மேம்படுத்தியது. இத்தகு சூழலில், தமிழகத்தில் கட்சியை வளர்த்தெடுக்கும் உத்திகளில் ஒன்றாக ‘ரௌடிகள்’ என்று குற்றஞ்சாட்டப்படும், குற்றப் பின்னணியுடையவர்களை பாஜக தம் கட்சியில் இணைத்துவருவதானது அந்தப் போக்கை நாசப்படுத்துவதாகவே அமையும். தூத்துக்குடியில் காவலரைக் கொன்ற ரௌடி இப்படி ஒரு கட்சியில் இணைவார்; அவரை அரசியலதிகாரத்தில் உள்ள ஒரு கட்சி அரவணைக்கும் என்றால், காவல் துறையினரால் அந்த ரௌடியை எப்படி ஒடுக்க முடியும்; இந்தச் சமூகம் எப்படி பாதுகாப்பானதாக இருக்க முடியும்? சமூக விரோதிகளோடு கை கோத்துக்கொண்டே எப்படி தேசப் பாதுகாப்பையும் ஒருவர் பேச முடியும்? அரசியல் பார்வைகளுக்கு அப்பாற்பட்டு, ரௌடிகளுக்கும் அரசியலுக்கும் உள்ள நெருக்க உறவை உருக்குலைக்க எல்லாக் கட்சிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். இது அரசியலர்களின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றெனக் கருதப்பட வேண்டும்.